ஞாயிறு, மே 20, 2012

காவிரி:அடுத்த பரபரப்பு துவங்குகிறது!

சென்னை/பெங்களூர்:காவிரி நதி நீர் பிரச்சனை மீண்டும் தீவிரமடையத் துவங்கியுள்ளது. தமிழகத்திற்கான நீரை கர்நாடகா அநியாயமாக பயன்படுத்தி வருவதாகவும், இவ்விவகாரம் குறித்து விவாதிக்க காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தை உடனடியாக கூட்டுமாறும் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால், ஜெயலலிதாவின் குற்றச்சாட்டை கர்நாடகா அரசு மறுத்துள்ளது.

காவிரி நதி நீர் பிரச்சனை தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது:காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம் இறுதியாக 2003-ம் ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி நடந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி தங்களுக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன்.
அதில், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள உத்தரவுகளை அமல்படுத்தும்படியும், இது தொடர்பாக மத்திய நீர்வள அமைச்சகத்துக்கு அறிவுறுத்தும் படியும் கேட்டுக்கொண்டேன். அதன்படி அந்த உத்தரவுகளை அமல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக மத்திய நீர்வள அமைச்சகம் எனக்குத் தெரிவித்திருந்தது.
ஆனால், அதன்படி கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்துக்கு மாதந்தோறும் வழங்க வேண்டிய தண்ணீரை திறந்து விடவில்லை. குறிப்பாக மிகவும் நெருக்கடியான காலகட்டமான ஜூன் முதல் செப்டம்பர் வரை தண்ணீர் வழங்கவில்லை. தற்போது பிப்ரவரி முதல் மே மாதம் வரையிலான கோடை காலத்திலும் கூட கர்நாடக அரசு தனது நான்கு அணைகளிலிருந்தும் அளவுக்கு மீறி கூடுதல் தண்ணீரை பயன்படுத்தி வருகிறது.
கர்நாடகாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் 4 அணைகளிலும் சேர்த்து 58.50 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது. ஆனால் கடந்த 14-ம் தேதி எடுத்த கணக்கெடுப்பின்படி அவற்றில் 28.176 டி.எம்.சி. தண்ணீரே உள்ளது. இதன் மூலம் கர்நாடக அரசு கடந்த பிப்ரவரி 1-ம் தேதி முதல் மே 14-ம் தேதி வரை 30.33 டி.எம்.சி. தண்ணீரை பயன்படுத்தி உள்ளது தெரிகிறது.
இதற்கிடையே 11 டி.எம்.சி. தண்ணீர் இயற்கையாக வெளியேறியுள்ளது. மொத்தத்தில் 41 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு பயன்படுத்தி உள்ளது. தண்ணீர் வற்றும் கோடை காலங்களில் கர்நாடகம் கூடுதல் தண்ணீரை பயன்படுத்துவதால் மேட்டூர் அணைக்கு போதிய அளவு தண்ணீர் வரவில்லை.
மழை காலத்தில் மட்டுமே உபரி நீரை கர்நாடக அரசு திறந்து விட்டுள்ளது. தற்போது மேட்டூர் அணைக்கு போதிய நீர்வரத்து இல்லாததால் தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பா சாகுபடியும் காலதாமதமாகிறது.
எனவே, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசு காவிரியில் திறந்து விட மத்திய நீர்வள ஆணையத்தை நீங்கள் வலியுறுத்த வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற மோசமான நிலைமை ஏற்படாமல் இருக்க விதிமுறைகளை பின்பற்றப்பட வேண்டும் என 24-வது காவிரி கண்காணிப்பு கமிட்டி கூட்டத்தில் காவிரி நதி நீர் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டது.
காவிரி நதி நீர் ஆணையம் மற்றொரு பிரச்னையையும் உடனடியாக பரிசீலிக்க வேண்டும். அதாவது காவிரி பிரச்னை தொடர்பாக அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவில் 11.20 லட்சம் ஏக்கருக்கு மேல் பாசன பகுதிகளை விரிவுபடுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை கர்நாடக அரசு பின்பற்றவில்லை.
இந்தச் சூழ்நிலையில் பிரச்னைகளுக்கு தீர்வு காண காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும். இந்த விவகாரத்தில் நீங்கள் விரைவாக நடவடிக்கை எடுப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன் என்று தனது கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
ஆனால் இதற்கு பதில் அளித்துள்ள கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறுகையில், ‘காவிரி நதி நீர் ஆணையத்தைக் கூட்ட வேண்டிய அவசியமில்லை. ஆண்டுக்கு 192 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்று நதிநீர் ஆணையம் தெரிவித்திருந்தது. கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளபோது, ஆணையத்தைக் கூட்டி பேச்சு நடத்த வேண்டிய அவசியமில்லை என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக