அரபு லீக் முன்வைத்த அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சிரியா அரசு அதனை அமுலாக்குவதில் தோல்வியை தழுவியதாக குற்றம் சாட்டி சனிக்கிழமை கெய்ரோவில் நடந்த அரபு லீக்கின் அமைச்சக அளவிலான கூட்டம் சிரியாவை அரபு லீக்கிலிருந்து சஸ்பெண்ட் செய்தது.
மூன்று தினங்களுக்குள் எதிர்ப்பாளர்கள் மீதான ராணுவ நடவடிக்கையை நிறுத்தாவிட்டால் சஸ்பெண்ட் செய்வதுடன் சிரியாவின் மீது அரசியல், பொருளாதார தடைகளை விதிக்கப்படும் என அரபு லீக் எச்சரிக்கை விடுத்தது. சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு சிரியா அரசு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அரசு ஆதரவாளர்கள் சவூதி அரேபியாவின் தூதரகத்தை தாக்கினர்.
சவூதி தூதரகம் மட்டுமல்லாமல் அரபு லீக்கின் கூட்டத்தில் சிரியாவுக்கு எதிராக முடிவெடுத்த கத்தர் நாட்டின் தூதரகத்தையும் பஸ்ஸாருல் ஆஸாதின் ஆதரவாளர்கள் தாக்கியதாக பத்திரிகைகள் கூறுகின்றன. தாக்குதலில் சவூதி அரேபியா தூதகத்தின் ஜன்னல் கன்ணாடிகள் உடைந்தன. ஆயிரக்கணக்கான வன்முறையாளர்கள் கம்பு மற்றும் கற்களுடன் சவூதி தூதரகத்திற்கு உள்ளே அத்துமீறி நுழைந்தனர்.
அதேவேளையில் தூதரகத்தை தாக்கிய நடவடிக்கைக்கு சவூதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது. வன்முறையாளர்களை தடுக்காத சிரியா பாதுகாப்பு படையின் நடவடிக்கையை விமர்சித்த சவூதி அரேபியா அரசு, தூதரகம் மற்றும் சிரியாவில் சவூதி குடிமக்களின் பாதுகாப்பை உறுதிச்செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது. சவூதி வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
அரபு லீக்கின் சஸ்பெண்ட் தீர்மானத்தை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, ஐரோப்பிய யூனியன், ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
பிரச்சனைக்கு தீர்வு காண அரபு லீக்கின் அவசர கூட்டத்தை கூட்டவேண்டுமென சிரியாவின் அதிபர் பஸ்ஸாருல் ஆஸாத் கோரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக