புதன், ஜூலை 06, 2011

'சல்வா ஜுடுமுக்கு ஆயுதம் வழங்கியது தவறு' - உச்சநீதிமன்றம்




மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களை எதிர்த்துப் போரிடுவதற்காக, பழங்குடி மக்களுக்கு ஆயுதம் கொடுத்து அவர்களுக்குப் ஆயுதப் பயிற்சியளிப்பது, சட்டவிரோதமானது என்று இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது, 

மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில், பழங்குடி மக்களை சிறப்பு போலீஸ் அதிகாரிகளாக நியமிப்பதையும், அவர்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆயுதப் பயிற்சி அளிப்பதையும், சத்தீஸ்கர் மாநில அரசும் மத்திய அரசும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாவோயிஸ்டுகளை எதிர்த்துப் போரிட, கல்வித் தகுதி, போதிய பயிற்சி உள்ளிட்ட தகுதிகள் இல்லாத பழங்குடி மக்களைப் பயன்படுத்துவது சட்ட விதிகளுக்குப் புறம்பானது என்று நீதிபதிகள் பி. சுதர்ஷன் ரெட்டி மற்றும் எஸ்.எஸ். நிஜர் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் கருத்துத் தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில், மாவோயிஸ்டுகளை எதிர்த்துப் போரிட, சல்வா ஜுடும் என்ற பெயரில், உள்ளூர் பழங்குடி மக்களுக்கு அரசு ஆயுதம் கொடுத்து அவர்களுக்குப் பயிற்சி அளித்து மக்கள் படையை உருவாக்கியது. அதை எதிர்த்து, சமூக ஆர்வலர்கள் சிலர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது.

கடந்த மே மாதம் நடந்த விசாரணையின்போது, சிறப்புப் போலீஸ் அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட பழங்குடி மக்கள், காவல் துறைப் பணியில் சிறப்பாக செயல்படுவதாக சத்தீஸ்கர் மாநில அரசு தெரிவித்திருந்தது.

மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில், உதவியாளர்களாக, மாவோயிஸ்டுகளின் இருப்பிடத்தைக் கண்டறிபவர்களாக பழங்குடியின மக்கள் சிறப்பாக செயல்படுவதாகவும், பல நேரங்களில், பாதுகாப்புப் படையினரைக் கூட மாவோயிஸ்ட் தாக்குதல்களில் இருந்து காப்பாற்றியிருப்பதாகவும் மாநில அரசு தெரிவித்தது.

ஆனால், அந்தக் கருத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. ''சிறப்புப் போலீஸ் அதிகாரிகள் என்ற பெயரில் பழங்குடியினருக்கு அரசு பயிற்சி அளிக்கிறது. அவர்கள் அரசுக்கு எதிராகத் திரும்பும் நிலை ஏற்பட்டால் நிலைமை என்னவாகும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். கடவுள்தான் இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டும்'' என்று நீதிபதிகள் கடுமையாகக் கருத்துத் தெரிவித்தார்கள்.

மேலும், சல்வா ஜுடும் செயல்பாட்டுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்த சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் மீது, சல்வா ஜுடும் ஆதரவாளர்கள் என்று கூறப்படுவோர், தாக்குதல் நடத்தியமை குறித்து சிபிஐ எனப்படும் மத்தியப் புலனாய்வுத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

bbc

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக