ஞாயிறு, ஜூலை 17, 2011

இலங்கை- யாழ் முஸ்லிம்களின் மீள் குடியேற்றம்..

சுமார் 20 வருடங்களின் பின்னர் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்கள் வசிக்கும் பிரதேசத்தில் வாழ்க்கை துளிர்விடத் தொடங்கியிருக்கின்றது.

எனினும் இருப்பிடம், தொழில் உட்பட பல்வேறு விடயங்களில் அவர்கள் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ளதாக யாழ்ப்பாணம் மொகமதியா ஜும்மா பள்ளிவாசலுக்குப் பொறுப்பாகவுள்ள மொகமது லெப்பை மௌலவி கூறுகின்றார்.

யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகின்றன. யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்கள், குறிப்பாக வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களுக்கு மேலாகின்றது.
யாழ் நகரில் 1990களின் பின்னர் சேதமடைந்திருந்த பள்ளிவாசல் பகுதி
யாழ் நகரில் 1990களின் பின்னர் சேதமடைந்திருந்த பள்ளிவாசல் பகுதி
 
ஆயினும் கடந்த 1990 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளினால் பலவந்தமாக வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களுக்கான மீள்குடியேற்ற நடவடிக்கைகள் திட்டமிட்ட வகையில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை என்று பலராலும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

ஆனால் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் தமிழர்கள், முஸ்லிம்கள் என்று எவருக்கும் பாரபட்சம் காட்டப்படுவதில்லை என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் கூறுகின்றார்.

அத்துடன் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள், இருபது வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த மக்கள் என இடம்பெயர்ந்த மக்கள் இரண்டு வகையாகப் அரசாங்கத்தினால் பிரிக்கப்பட்டுள்ளனர்.
இதில் போரினால் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கே மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பாக விரிவான உடனடி திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இருபது வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த மக்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பி வருகையில் அவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதனால் காணி, வீடு, தொழில் என்பவற்றை வழங்குவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆயினும் முஸ்லிம் மக்களுக்கான மீள்குடியேற்றம், வீடுகள் போன்றவற்றில் தீவர கவனம் செலுத்தப்பட்டு வருவதாக யாழ் அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

bbc



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக