புதன், மார்ச் 09, 2011

பலஸ்தீன் கிராமங்களைத் தாக்கும் யூத ஆக்கிரமிப்பாளர்கள்


கடந்த சனிக்கிழமை (05.03.2011) ஈராக் பூரின் கிராமத்தைச் சுற்றிவளைத்த யூத ஆக்கிரமிப்பாளர்கள் அங்கிருந்த பலஸ்தீன் வீடுகள் மீது கடும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இவர்களின் அட்டகாசம் பொறுக்க முடியாத நிலையில் உள்ளூர் மக்கள் திருப்பித் தாக்கத் தொடங்கவே ஆக்கிரமிப்பாளர்கள் பின்வாங்கிச் சென்றனர் என உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ப்ராச்சா யூதக் குடியிருப்பில் வசிக்கும் தீவிரவாத யூதக் குழுக்கள் அயலில் உள்ள பலஸ்தீன் விவசாயிகள் மீதும் அவர்களின் செம்மறியாட்டு மந்தைகள் மீதும் தொடர்ச்சியாகக் கற்களை எறிந்து தாக்கியதால் விவசாயிகள் பலர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து உள்ளூர்வாசிகள் ஒன்றிணைந்து காயமடைந்தவர்களுக்கு முதலுதவி வழங்கியதோடு, ஆக்கிரமிப்பாளர்கள் மீது பதில் தாக்குதல் நடாத்தியதால் அப்பிரதேசத்தில் பெரும் பதட்டம் நிலவியது. 

கடந்த இரவு ஆயுதந் தாங்கிய யூத ஆக்கிரமிப்பாளர்கள் குழுவொன்று கிழக்கு ஜெனினின் ரபா எனும் கிராமத்தைச் சுற்றிவளைத்துத் தாக்குதல் நடாத்தி, உள்ளூர் பலஸ்தீனர்களை அங்கிருந்து வெளியேறுமாறு அச்சுறுத்தியுள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயுதங்களைத் தாங்கிய சுமார் 20 யூத ஆக்கிரமிப்பாளர்கள் இப்பிரதேச வீதிகளில் அரபு எதிர்ப்புக் கோஷங்களை முழங்கியபடி சைக்கிள்களில் வலம் வந்துள்ளனர்.

பெத்லஹேம் நகரத்தை அடுத்துள்ள அர்தாஸ் கிராமத்திற்கு ட்ரக் வண்டிகளில் திடீரென்று வந்திறங்கும் ஆயுதம் தரித்த ஆக்கிரமிப்பாளர்கள் கற்களால் தாக்குதல் நடாத்தியும் உரத்த குரலில் அரபு எதிர்ப்புக் கோஷங்களை முழங்கியும் அக்கிராம மக்களைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாக உள்ளூர்வாசிகள் தகவல் அளித்துள்ளனர்.
inneram.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக