புதன், மார்ச் 09, 2011

இஸ்ரேலியச் சிறையில் வாடும் இரண்டு குழந்தைகளின் தாய்


உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படும் 100ஆவது சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடந்த 10 வருட காலமாக இஸ்ரேலியச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு குழந்தைகளின் தாயான இமான் கஸ்ஸாவி (வயது 35) எனும் பலஸ்தீன் பெண்மணியை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கஸ்ஸாவி 2001 மார்ச் 8 ஆம் திகதி இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் கடத்திச் செல்லப்பட்டு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு வழக்குமன்றத்தினால் 13 வருட கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார் என சிறைக் கைதிகள் நலன்கள் தொடர்பான பலஸ்தீன் அமைச்சகத்தின் பேச்சாளர் ரியாத் அல் அஷ்கார் தெரிவித்துள்ளார்.


இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் ஒரே சமயத்தில் கடத்திச் செல்லப்பட்ட நான்கு பலஸ்தீன் பெண்களுள் கஸ்ஸாவியும் ஒருவர். இவர்களின் கணவர்களும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைச்சாலைகளில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. கஸ்ஸாவி கடத்திச் செல்லப்பட்டு 5 மாதங்களின் பின் அவரது கணவர் ஷாஹிர் அஸ்ஹாவும் ஆக்கிரமிப்புப் படையினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். அவர்களின் குழந்தைகள் ஸமாஹ் (வயது 12), ஜிஹாத் (வயது 13) ஆகிய இருவரும் கடந்த 10 வருடகாலமாகத் தமது தாய்வழிப் பாட்டியிடம் வளர்ந்து வருகின்றனர்.

மிக நீண்ட காலமாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறையிலே மிகக் கடுமையான சித்திரவதைகளை எதிர்கொள்ள நேர்ந்த காரணத்தால் தலை, வயிறு மற்றும் மூட்டுக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கஸ்ஸாவி தொடர்ச்சியான உடல் உபாதைகளை அனுபவித்து வருகின்றார்.

அமைச்சகப் பேச்சாளர் அஷ்கார் கருத்துரைக்கையில், இஸ்ரேலிய சட்டத்தில் கணவன் - மனைவி ஆகிய இருவருமே சிறையில் உள்ள நிலையில் 6 மாதங்களுக்கு ஒருதடவை பரஸ்பரம் தனிப்பட்ட முறையில் சந்தித்துக் கொள்வதற்கான அனுமதி இருக்கின்ற போதிலும், கடந்த 10 வருட காலத்தில் மேற்படி கைதிகள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ள ஒருதடவை கூட வாய்ப்பளிக்கப்படவில்லை என்றும் இது சர்வதேச மனித உரிமை விழுமியங்களுக்கு முற்றிலும் மாற்றமான கடும்போக்காகும் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தன்னுடைய இரு குழந்தைகளைச் சந்திக்கும் போதுகூட இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறை நிர்வாகத்தினால் வெறும் நாற்பது நிமிட நேரமே அந்தத் தாய்க்கு வழங்கப்பட்டுள்ளது.

எந்தவிதமான நியாயமான காரணமும் இன்றி ஓர் இளம் தாயாரை மிக நீண்ட காலமாகத் தன்னுடைய இரண்டு குழந்தைகளிடமிருந்து பிரித்து சிறையில் அடைத்துவைத்துள்ள இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறை நிர்வாகத்தின்மீது அழுத்தம் செலுத்தி, மேற்படி அப்பாவிப் பலஸ்தீன் பெண்மணியைத் துரிதமாக விடுவிப்பதில் உரிய கவனம் எடுக்குமாறு கோரிக்கை விடுத்து சிறைக்கைதிகள் நலன்கள் தொடர்பான பலஸ்தீன் அமைச்சகம் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களிடம் மனு சமர்ப்பித்துள்ளது.
inneram.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக