வியாழன், ஜூன் 18, 2015

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: இறுதிப்போட்டியில் பிரேசில்-செர்பியா

20-வது ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி (20 வயதுக்குட்பட்டோர்) நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று அரைஇறுதி ஆட்டங்கள் நடந்தன. முதலாவது அரை இறுதியில் பிரேசில்-செனகல் அணிகள் மோதின.

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பலம் வாய்ந்த பிரேசில் அணி 5-0 என்ற கோல் கணக்கில் செனகலை துவம்சம் செய்து 9-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. பிரேசில் அணியில் மார்கோ குல்கெர்மே 2 கோலும், கேப்ரியல் போஸ்சிலியா, ஆலிவரோ ஜோர்ஜ் தலா ஒரு கோலும் அடித்தனர். மற்றொரு கோல், சுயகோல் வகையில் கிடைத்தது.

இரண்டாவது அரைஇறுதியில் அறிமுக அணியான செர்பியா, மாலியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த மோதல் வழக்கமான நேரம் முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையை அடைந்தது. இதையடுத்து கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. கூடுதல் நேரத்தில் (101-வது நிமிடம்) செர்பியா அணியின் மாற்று ஆட்டக்காரர் இவான் சபோன்ஜிச் கோல் அடித்தார். இதன் மூலம் செர்பியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் மாலியை வீழ்த்தி இறுதிப்போட்டியை எட்டியது.

வருகிற 20-ந் தேதி ஆக்லாந்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் பிரேசில்-செர்பியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக