திங்கள், ஜூன் 22, 2015

வாலிபரை சுட்டுக்கொன்ற வழக்கு: கைதான சப்–இன்ஸ்பெக்டர் மதுரை சிறையில் அடைப்பு

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் போலீஸ் நிலையத்தில் கடந்த அக்டோபர் மாதம் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட வாலிபர் செய்யது முகம்மது மீது சப்–இன்ஸ்பெக்டர் காளிதாஸ் துப்பாக்கியால் சுட்டார். இதில் செய்யது முகமது அதே இடத்தில் சுருண்டு விழுந்து பலியானார்.

தன்னை கத்தியால் குத்த முயன்றதாகவும், அப்போது தற்காப்புக்காக சுட்டதாகவும் காளிதாஸ் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பல்வேறு அரசியல் கட்சிகளும், மனித உரிமை அமைப்புகளும் சப்–இன்ஸ்பெக்டர் காளிதாஸ் வேண்டுமென்றே சுட்டுக்கொன்றதாகவும், அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. தனிப்படை தீவிரமாக விசாரணை நடத்தியது.

விசாரணையில் சம்பவத்தன்று போலீஸ் நிலையத்தில் துப்பாக்கியால் சுடும் அளவுக்கு செய்யது முகமதுவால் சப்–இன்ஸ்பெக்டர் காளிதாசுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கவில்லை. மேலும் திட்டமிட்டே செய்யது முகம்மது கொல்லப்பட்டதாகவும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் ராமநாதபுரம் 2–வது குற்றவியல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதன்பேரில் காளிதாஸ் மீது கொலை வழக்குப்பதிவு செய்யவும் பரிந்துரைக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் காளிதாஸ் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு சஸ்பெண்டு செய்யப்பட்டார். இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி. தனிப்படையினர் நேற்று காளிதாசை கைது செய்து ராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நீதிபதி வேலுச்சாமி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட காளிதாஸ், தனக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பதால் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அப்போது நீதிபதி வேலுச்சாமி, சிறுநீரக பாதிப்பு இருந்தால் உரிய சிகிச்சை அளிக்கவும், அடுத்த மாதம் 2–ந்தேதி வரை சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார்.

இதையடுத்து சப்–இன்ஸ்பெக்டர் காளிதாஸ் பலத்த பாதுகாப்புடன் மதுரை கொண்டுவரப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக