சனி, ஜூன் 20, 2015

கடற்கொள்ளையர்கள் கடத்திய மலேசிய எண்ணெய் கப்பல் மீட்பு: கடற்படை அதிரடி நடவடிக்கை

மலேசிய கடற்படை சுற்றி வளைத்ததால் தாங்கள் கடத்திய எண்ணெய் கப்பலை விடுவித்துவிட்டு கடற்கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர்.

மலேசிய அரசுக்கு சொந்தமான ‘ஓர்கிம் ஹார்மனி’ என்ற கப்பல் கடந்த 11-ந்தேதி மலேசியாவின் தான்ஜூங் சேதிலி துறைமுகத்தில் இருந்து 50 ஆயிரம் பீப்பாய் எண்ணெய்யை ஏற்றிக்கொண்டு கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அந்த கப்பலில் 22 ஊழியர்கள் இருந்தனர்.துறைமுகத்தில் இருந்து 30 நாட்டிகல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்த அந்த கப்பலை துப்பாக்கி முனையில் வழி மறித்த கடற்கொள்ளையர்கள் அதை கடத்திச் சென்றனர்.

பின்னர், கடற்கொள்ளையர்கள் அந்த கப்பலின் மீது வேறு நிற வண்ணத்தை பூசி அதன் பெயரையும் கிம் ஹர்மோன் என மாற்றி வியட்னாம் கடற்பகுதிக்கு கொண்டு சென்றனர்.
மாயமான கப்பலை கடந்த ஒரு வாரமாக மலேசிய கடற்படையின் 3 கப்பல்கள் மற்றும் 2 போர் விமானங்கள் தீவிரமாக தேடி வந்தன.அப்போது அந்த கப்பலை கடத்தியது 8 கடற்கொள்ளையர்கள் என்பதையும், அந்த கப்பல் வியட்னாம் கடல் எல்லை பகுதியில் சென்று கொண்டு இருப்பதையும் மலேசிய கடற்படையினர் கண்டுபிடித்தனர்.

இதைத்தொடர்ந்து அந்த கப்பலையும், அதில் இருந்த 22 ஊழியர்களையும் மீட்க மலேசிய கடற்படையின் கப்பல்களும், விமானங்களும் அதிரடி நடவடிக்கையில் இறங்கின.

நேற்று காலை அந்த கப்பலை சுற்றி வளைத்த கடற்படையினர் உடனடியாக கடற்கொள்ளையர்களை சரண் அடையும்படி எச்சரிக்கையும் விடுத்தனர்.இனி தப்ப முடியாது என்பதை உணர்ந்த 8 கடற்கொள்ளையர்களும் எண்ணெய் கப்பலில் இருந்த மீட்பு படகுகளை பயன்படுத்தி அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

பின்னர், ஓர்கிம் ஹார்மனி கப்பலை மலேசிய கடற்படையினர் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அந்த கப்பலில் இருந்த ஊழியர்களில் ஒருவர் மட்டும் தொடையில் குண்டு காயத்துடன் இருந்தார். மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.மீட்கப்பட்ட எண்ணெய் கப்பல் கடற்படையினரின் பாதுகாப்புடன், இந்தோனேஷியாவின் நதுனா தீவு வழியாக மலேசியா கொண்டு வரப்படுகிறது. அந்த கப்பல் மலேசியாவின் குவாங்டான் துறைமுகத்தை இன்று வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 4-ந்தேதி இதே தான்ஜூங் சேதிலி துறைமுகப்பகுதியில் 7 ஆயிரம் டன் எண்ணெய் ஏற்றிச் சென்ற ஓர்கிம் விக்டரி என்ற மலேசிய கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர்.அதிலிருந்து 770 டன் எண்ணெய்யை எடுத்துக்கொண்டு ஓர்கிம் விக்டரியை விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே வாரத்தில் அடுத்தடுத்து மலேசிய கடற்பகுதிக்குள் புகுந்து கடற்கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருப்பது, மலேசிய கடற்பிராந்தியத்தின் சரக்கு போக்குவரத்துக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக