மத்திய இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் பகுதியை சேர்ந்த முஹம்மது அலி என்ற ஏழு வயது சிறுவன் சம்பவத்தன்று தனது வீட்டின் மாடிப்பகுதியில் உள்ள அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். நள்ளிரவு நேரத்தில் முன்வாசல் கதவு உடைத்து திறக்கப்படும் ஓசை கேட்டு, கீழே இறங்கி வந்தவன், அந்த காட்சியை கண்டு திடுக்கிட்டான்.
முகமூடி அணிந்த ஏழெட்டு கொள்ளையர்கள் பயங்கர ஆயுதங்களுடன் அவனது தாயை சூழ்ந்து நின்று கொண்டிருந்தனர். கைக்குழந்தையான அவனது தம்பியின் கழுத்தில் பளபளக்கும் கத்தியை வைத்த ஒருவன், மரியாதையாக உன் வீட்டில் இருக்கும் அந்த பழங்கால தங்க நகைகளை எல்லாம் கொண்டுவந்து எங்களிடம் ஒப்படைத்து விடு. இல்லையென்றால் உன் குழந்தையை கொன்று விடுவேன் என்று மிரட்டிக் கொண்டிருந்தான்.
இதைக் கண்டு பதறிப்போன சிறுவனான முஹம்மது அலி, தன்னிடம் இல்லாத தைரியத்தையும் மானசீகமாக வரவழைத்து கொண்டு மாடியைவிட்டு கீழே இறங்கி ஓடினான். தாயை சூழ்ந்திருந்த கொள்ளையர்களை விலக்கிக் கொண்டு உள்ளே ஓடியவன், என் தம்பியையும், அம்மாவையும் ஒன்றும் செய்து விடாதீர்கள். மரியாதையாக அவர்களை விட்டுவிட்டு, இங்கிருந்து ஓடிப் போய் விடுங்கள் என வெறி கொண்டவனாக மாறி,மாறி கத்தினான்.
இதைக் கண்டு திகைத்துப் போய் நின்ற கொள்ளை கும்பல் சில நிமிடங்களில் அந்த இடத்தை காலி செய்துவிட்டு வெறுங்கையுடன் திரும்பியது. கடந்த 2-10-2014 அன்றிரவு நடைபெற்ற இந்த சம்பவம் உள்ளூர் ஊடகங்களில் வெளியாகி போலீசாரின் கவனத்தை ஈர்த்தது.
இதையடுத்து, தனது உயிரைப் பற்றிகூட கவலைப்படாமல் வீரமாகவும், ஆவேசமாகவும் செயல்பட்டு அந்த கொள்ளையர்களை திணறடித்தமைக்காக சிறுவன் முஹம்மது அலிக்கு வீரதீர விருது வழங்க வெஸ்ட் மிட்லேன்ட்ஸ் போலீசார் முடிவு செய்தனர். அதன்படி, நேற்று அவனுக்கு போலீஸ் அதிகாரிகள் விருது அளித்து, வாழ்த்து தெரிவித்தனர்.
மிக குறைந்த வயதில் இந்த விருதை பெறும் முதல் ஹீரோ முகமது அலிதான் என்று மிட்லேன்ட்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக