இலங்கை தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வேண்டியும், அமெரிக்கா கொண்டுவரப்பட இருக்கும் வலுவற்ற, நீதி அற்ற தீர்மானம் மற்றும் விசாரணையை நிராகரித்தும், இன அழிப்புக்கு அனைத்துலக விசாரணையையும், தமிழ் ஈழத்துக்கான வாக்கெடுப்பை நடத்தக்கோரியும் புலம் பெயர் தமிழர்கள் ஜெனிவாவில் ஆர்ப்பாட்ட பேரணி நடத்தினர்.
ஜெனிவா பூங்காவனத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணி, ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் முன்பு முடிவடைந்தது. தமிழர்களுக்கு ஆதரவான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஊர்வலமாக சென்றனர். பொதுசுடர் ஏற்றப்பட்டு பின்னர் தமிழ் ஈழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. அதன் பின்னர் ஜெனிவாவில் உள்ள ஐக்கியநாடுகளின் தலைமையகம் முன் முருகதாசன், செந்தில்குமார் ஆகியோரின் படங்களுக்கு மலர்மாலை சூட்டி அஞ்சலி செலுத்தப்பட்டு, வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
ஐ.நா சபையின் முன்னாள் உதவிப் பொதுச்செயலாளர் டேனீஸ் ஹாலிடே, நார்வே நகர முதல்வர் ஆண்டர்ஸ் ரீஸ், தமிழகத்தில் இருந்து சென்றிருந்த புகழேந்தி, தங்கராஜா ஆகியோர் பேசினர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை ஆணையர் நவநீதம் பிள்ளையின் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தனர். பிரான்ஸ், டென்மார்க், பிரிட்டன், நார்வே, ஜெர்மனி, இத்தாலி, பெல்ஜியம், நெதர்லாண்ட், சுவீடன் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக