புதன், மார்ச் 12, 2014

மலேசிய விமானம் சீனா செல்லாமல் போனது எங்கே?





மாயமான மலேசிய விமானம், சீனா செல்லாமல் போனது எங்கே என்பது குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.


ரேடார் தொடர்பு இழப்பு
மலேசிய விமானம் 239 பயணிகளுடன் கடந்த 7–ந்தேதி நள்ளிரவு 12.41 மணிக்கு கோலாலம்பூரிலிருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்டது. அந்த விமானம், புறப்பட்டுச் சென்ற 2 மணி நேரத்துக்குப் பின்னர், அதாவது 8–ந்தேதி அதிகாலை 2.40 மணிக்கு (இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 11.10 மணி) ரேடார் தொடர்பை இழந்தது.
தெற்கு சீனக்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோதுதான் இந்த விமானம் ரேடார் தொடர்பை இழந்தது என முதல் கட்ட தகவல்கள் வெளியாகின.


புதிய தகவல்
அடுத்து இந்த விமானம், ரேடார் திரையில் இருந்து மறைவதற்கு முன்பாக பீஜிங் செல்வதற்கான திட்டமிட்ட பாதையிலிருந்து விலகி, மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே திரும்பியதற்கான சுவடுகள் ரேடாரில் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியானது.
இப்போதைய தகவல், ரேடார் தொடர்பை இழப்பதற்கு முன்பாக அந்த விமானம், மலேசியாவின் கிழக்கு கடலோர நகரான கொட்டா பாருவுக்கும், வியட்நாமின் தெற்கு முனைக்கும் இடையே 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்ததாக கூறுகிறது.

மலாக்கா
குறிப்பாக இந்த விமானம், மலாய் தீபகற்பத்துக்கும், இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுக்கும் இடையே சுமார் 805 கி.மீ. நீளத்தில் அமைந்துள்ள மலாக்கா ஜலசந்திக்கு மேலே சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுபற்றி மலேசிய ராணுவ அதிகாரி ஒருவர், ‘ரெயிட்டர்’ செய்தி நிறுவனத்துக்கு நேற்று பேட்டி அளிக்கையில், ‘‘ கொட்டா பாருவைக் கடந்ததும், விமானம் சற்றே கீழிறங்கியது. மலாக்கா ஜலசந்தி பகுதிக்குள் அது நுழைந்தது. விமான கட்டுப்பாட்டு திரைகளில் இருந்து முழுவதுமாக மறைவதற்கு முன்பாக அந்த விமானம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பறந்தது. கடைசியாக சமிக்ஞை இல்லாமல் போவதற்கு முன்பாக அந்த விமானம், மலாக்கா ஜலசந்தி பகுதியில் ‘புலாவ் பெராக்’ என்ற இடத்திற்கு அருகே பறந்தபோது, ரேடார் திரையில் தோன்றியது’’ என்று கூறினார்.
இந்த தகவலின் அடிப்படையில் சிவில் விமானப் போக்குவரத்து துறை, விமான தேடல் குழு, மீட்பு குழு ஆராய்ந்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக