புதன், மார்ச் 12, 2014

நடுவானில் பெண்ணுக்கு வலிப்பு : மலேசிய விமானம் சென்னையில் அவசரமாக தரை இறங்கியது

மலேசியா சென்ற விமானத்தில் நடுவானில் இந்தோனேசியாவை சேர்ந்த பெண் பயணிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் சென்னையில் அவசரமாக தரை இறக்கப்பட்டது.


பெண் பயணிக்கு வலிப்பு
மஸ்கட்டில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு நேற்று அதிகாலை 254 பயணிகளுடன் விமானம் ஒன்று சென்றுகொண்டு இருந்தது. விமானம் நடுவானில் சென்றபோது அதில் பயணம் செய்த இந்தோனேசியாவைச் சேர்ந்த ரெபிமர்த்தினி(வயது 50) என்ற பெண்ணிற்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டார்.


உடனே சகபயணிகள் விமான பணிப்பெண்களுக்கு தகவல் தந்தனர். அவர்கள் விமானிக்கு தெரிவித்தனர். விமானம் சென்னை வான் எல்லையில் பறந்துகொண்டு இருந்ததால், சென்னை வான் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட விமானி, பெண் பயணியின் நிலையை கூறி விமானத்தை சென்னையில் தரை இறக்க அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

சென்னையில் தரை இறங்கியது
மனிதாபிமான அடிப்படையில் மலேசியா சென்ற விமானத்தை சென்னையில் தரையிறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து அதிகாலை 5.15 மணிக்கு விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது. தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் விமானத்தில் ஏறி வலிப்பால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு முதலுதவி அளித்தனர்.
பின்னர் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால் சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் மனிதாபிமான அடிப்படையில் அவசர கால மருத்துவ விசாவை இந்தோனேசிய பெண்ணிற்கு வழங்கினார்கள். இதையடுத்து அந்த பெண் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், 253 பயணிகளுடன் காலை 8.20 மணிக்கு மலேசியாவிற்கு விமானம் புறப்பட்டு சென்றது. இந்திய அதிகாரிகளின் மனிதாபிமான செயலுக்கு மற்ற பயணிகள் பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக