ஞாயிறு, மார்ச் 09, 2014

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணி 5–வது முறையாக சாம்பியன்


ஆசிய கிரிக்கெட்
12–வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் இரண்டு வார காலமாக நடந்து வந்தது. 5 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்தியா, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. இலங்கை, நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணிகள் இறுதிசுற்றுக்கு முன்னேறின.

இந்த நிலையில் ஆசிய சாம்பியன் யார்? என்பதை நிர்ணயிக்கும் பாகிஸ்தான்–இலங்கை இடையிலான இறுதிப்போட்டி மிர்புரில் நேற்று அரங்கேறியது.
மலிங்காவின் தாண்டவம்
டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. இதன்படி ஷர்ஜீல் கானும், அகமது ஷேசாத்தும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். ‘யார்க்கர் மன்னன்’ லசித் மலிங்காவின் முதல் ஓவரில் பவுண்டரியுடன் ரன் கணக்கை தொடங்கிய ஷர்ஜீல் கான், மேலும் ஒரு பவுண்டரி விரட்டிய கையோடு அதே ஓவரில் ‘மிட் ஆன்’ திசையில் திசரா பெரேராவிடம் கேட்ச் ஆகி நடையை கட்டினார்.


மலிங்காவின் ஆக்ரோஷமான தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் திணறினர். மலிங்காவின் அடுத்தடுத்த ஓவர்களில் ஷேசாத் (5 ரன்), முகமது ஹபீஸ் (3 ரன்) இருவரும் விக்கெட் கீப்பர் சங்கக்கராவிடம் கேட்ச் ஆனார்கள். 18 ரன்னுக்குள் (4.3 ஓவர்) 3 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் நிலைகுலைந்து விழிபிதுங்கி நின்றது.
நடுவரின் தவறான தீர்ப்பு
இதைத் தொடர்ந்து கேப்டன் மிஸ்பா உல்–ஹக்கும், இடக்கை ஆட்டக்காரர் பவாத் ஆலமும் இணைந்து அணியை சரிவில் இருந்து தடுத்து நிறுத்த தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ‘ரன் எடுக்காவிட்டாலும் பரவாயில்லை, விக்கெட்டை தக்க வைத்தால் போதும்’ என்ற நோக்குடன் அவர்கள் ஆடியதால் ஸ்கோர் ஆமை வேகத்தில் நகர்ந்தது. 18–வது ஓவரில் தான் பாகிஸ்தான் 51 ரன்களை தொட்டது.
மிஸ்பா உல்–ஹக் 19 ரன்களில் இருந்த போது, மேத்யூஸ் வீசிய பந்தை அடிக்க முயற்சித்த போது விக்கெட் கீப்பர் சங்கக்கரா அதை பிடித்தார். உடனே அவுட் கேட்டு முறையிட்டனர். ஆனால் நடுவர் புருஸ் ஆக்சன் போர்டு (ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்) விரலை உயர்த்த மறுத்து விட்டார். டி.வி. ரீப்ளேயில் பந்து பேட்டில் லேசாக உரசுவது தெரிந்தது. நடுவரின் கரிசனம் மட்டும் கிடைக்காமல் இருந்திருந்தால் பாகிஸ்தானின் நிலைமை மேலும் மோசமாகியிருக்கும்.
மிஸ்பா 65 ரன்
மிஸ்பாவும், பவாத் ஆலமும் நிலைத்து நின்று அணியை படிப்படியாக வீழ்ச்சியில் இருந்து மீட்டனர். 30.1 ஓவர்களில் பாகிஸ்தான் 100 ரன்களை கடந்தது. மிஸ்பா உல்–ஹக் தனது 37–வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். முதல் 30 ஓவர்களில் வெறும் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் மட்டுமே எடுத்திருந்த பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள், இதன் பிறகு துரிதமாக ரன் சேர்ப்பதில் முனைப்பு காட்டினர். பொறுமையுடன் ஆடிய பவாத் ஆலமுக்கு அதிர்ஷ்டம் இருந்தது. அவர் 41 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த போது, கடினமான கேட்ச் கண்டத்தில் இருந்து (விக்கெட் கீப்பர் சங்கக்கரா நழுவ விட்டார்) தப்பி பிழைத்தார்.
இப்படி இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தாக்குப்பிடித்த இந்த கூட்டணியை உடைக்க, மறுபடியும் மலிங்காவின் தயவு தான் இலங்கைக்கு தேவைப்பட்டது. அணியின் ஸ்கோர் 140 ரன்களாக (36.4 ஓவர்) உயர்ந்த போது மிஸ்பா உல்–ஹக் (65 ரன், 98 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) அவரது பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து உமர் அக்மல் ஆட வந்தார்.
பவாத் ஆலம் சதம்
இறுதி கட்டத்தில் அக்மலும், பவாத் ஆலமும் அதிரடிவேட்டையில் ஈடுபட்டதால் ஸ்கோர் மளமளவென எகிறியது. 92 ரன்னில் இருந்த போது 2–வது முறையாக கேட்ச் வாய்ப்பில் (வாய்ப்பை வீணடித்தவர் சதுரங்க டி சில்வா) இருந்து தப்பித்த பவாத் ஆலம், திசரா பெரேராவின் பந்தில் சிக்சர் விளாசி தனது முதலாவது சதத்தை ருசித்தார். தொடக்க ஆட்டக்காரர்களை தவிர்த்து ஒரு இடக்கை பேட்ஸ்மேன் பாகிஸ்தான் அணியில் சதம் காண்பது இதுவே முதல் முறையாகும். மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு இந்த தொடரின் மூலம் மறுபிரவேசம் செய்த, பவாத் ஆலம் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.
மறுமுனையில் உமர்அக்மல், இலங்கையின் பந்து வீச்சை பின்னியெடுத்தார். அனைவரையும் அச்சுறுத்திய மலிங்காவின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகளை சாத்தினார். ஆனால் அக்மலும் (59 ரன், 42 பந்து, 7 பவுண்டரி) கடைசியில் மலிங்காவின் பந்து வீச்சுக்கே இரையானார்.
50 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் சேர்த்தது. பவாத் ஆலம் 114 ரன்களுடன் (134 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார். கடைசி 10 ஓவர்களில் மட்டும் பாகிஸ்தான் 101 ரன்களை திரட்டியது. மலிங்கா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க லீக்கிலும் அவர் 5 விக்கெட் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிரடி தொடக்கம்
அடுத்து 261 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் குசல் பெரேரா 37 பந்துகளில் 42 ரன்கள்(6 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசி அதிரடியான தொடக்கம் தந்தார். சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் பந்து வீச்சில் அவர் ஸ்டம்பிங் ஆக, அடுத்து வந்த சங்கக்கரா (0) முதல் பந்திலேயே எல்.பி.டபிள்யூ. ஆனதால் லேசான சிக்கல் ஏற்பட்டது.
இதன் பின்னர் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் திரிமன்னேவும், மஹேலா ஜெயவர்த்தனேவும் ஜோடி சேர்ந்து அணியை தூக்கி நிறுத்தினர். முந்தைய 13 இன்னிங்சில் ஒரு அரைசதம் கூட எடுக்காததால் பலமான
 விமர்சனத்திற்குள்ளான ஜெயவர்த்தனே, முக்கியமான இந்த ஆட்டத்தில் பார்முக்கு வந்து அணிக்கு கைகொடுத்தார்.
இருவரும் அவசரப்படாமல் தேவைக்கு ஏற்ப அடித்து ஆடியதால் இந்த ஜோடியை அவ்வளவு எளிதில் பாகிஸ்தான் பவுலர்களால் பிரிக்க முடியவில்லை. வெற்றிப்பாதையை உருவாக்கிய இந்த ஜோடி 3–வது விக்கெட்டுக்கு156 ரன்கள் சேர்த்து அசத்தியது. ஜெயவர்த்தனே 75 ரன்களில் (93 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழந்தார். சிறிது நேரத்தில் திரிமன்னே (101 ரன், 108 பந்து, 13 பவுண்டரி) தனது 3–வது சதத்தை பதிவு செய்து பெவிலியன் திரும்பினார். இதற்கிடையே பிரிஞ்சன் 13 ரன்னில் அவுட் ஆனாலும், கேப்டன் மேத்யூசும், சதுரங்க டி சில்வாவும் இலக்கை எட்ட வைத்தனர்.
இலங்கை சாம்பியன்
இலங்கை அணி 46.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 261 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை சொந்தமாக்கியது. அந்த அணி ஆசிய கோப்பையை வெல்வது இது 5–வது முறையாகும். இதன் மூலம் அதிக முறை ஆசிய கோப்பையை கைப்பற்றிய இந்திய அணியின் (5 முறை) சாதனையை சமன் செய்தது.
வாகை சூடிய இலங்கை அணிக்கு ரூ.36½ லட்சமும், 2–வது இடம் பிடித்த பாகிஸ்தானுக்கு ரூ.18¼ லட்சமும் வழங்கப்பட்டது. மலிங்கா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 2 சதம் உள்பட 279 ரன்கள் குவித்த இலங்கை வீரர் திரிமன்னே தொடர்நாயகன் விருதை பெற்றார்.
கேப்டன்கள் கருத்து
ஆசிய கோப்பையை வென்ற பிறகு இலங்கை கேப்டன் மேத்யூஸ் கூறுகையில், ‘சில ஆண்டுகளாக இறுதிப்போட்டிகளில் தோற்பதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று விரும்பினோம். இது ஒட்டுமொத்த அணிக்கு கிடைத்த மிகச்சிறந்த வெற்றி. இன்றைய ஆட்டத்தில் டாஸ் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மலிங்கா அற்புதமாக பந்து வீசினார். இறுதிகட்டத்தில் சமாளிக்க கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளர் தேவை என்று கருதியதால், அஜந்தா மென்டிசை நீக்க வேண்டியதாகி விட்டது. அவரை நீக்க எடுத்த முடிவு கடினமானது’ என்றார்.
பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல்–ஹக் கூறுகையில், ‘தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்ததால் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டோம். பிறகு சரிவில் இருந்து நல்லபடியாக மீண்டு வந்தோம். என்றாலும் மேலும் 20 முதல் 25 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். பந்து வீச்சில் எதிரணிக்கு எங்களால் போதுமான நெருக்கடி கொடுக்க இயலவில்லை. சயீத் அஜ்மல் அருமையாக பவுலிங் செய்தார். ஆனால் மறுமுனையில் வீசிய பவுலர்கள் ரன்களை தாராளமாக வழங்கி விட்டனர்’ என்றார்.
***
சுவாரஸ்யமான   துளிகள்
* இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை அணி தோல்வியே சந்திக்காமல் (5 ஆட்டத்திலும் வெற்றி) கோப்பையை நுகர்ந்துள்ளது.
*  இலங்கை அணி தொடக்க லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. இப்போது இறுதி ஆட்டத்திலும் அவர்களை மண்ணை கவ்வ வைத்திருக்கிறார்கள். இந்த இரண்டு ஆட்டத்திற்கும் ஆச்சரியமான ஒரு ஒற்றுமை உண்டு. அதாவது இவ்விரு ஆட்டங்களிலும் இலங்கை வீரர் திரிமன்னே சதம் அடித்திருந்தார். இரண்டு முறையும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா தலா 5 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்துள்ளார்.
*  இந்த ஆசிய கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் இலங்கையின் திரிமன்னே முதலிடத்திலும் (2 சதத்துடன் 279 ரன், 5 ஆட்டம்), பாகிஸ்தானின் உமர் அக்மல் (253 ரன், 5 ஆட்டம்) 2–வது இடத்திலும், இலங்கையின் சங்கக்கரா (248 ரன், 5 ஆட்டம்) 3–வது இடத்திலும் உள்ளனர்.
*   பந்து வீச்சாளர்களில் மலிங்கா (இலங்கை), சயீத் அஜ்மல் (பாகிஸ்தான்) தலா 11 விக்கெட்டுகளை சாய்த்து முதலிடம் வகிக்கிறார்கள். அஜந்தா மென்டிஸ் (இலங்கை), அஸ்வின் (இந்தியா), முகமது ஷமி (இந்தியா) ஆகியோர் தலா 9 விக்கெட் வீழ்த்தி அடுத்த இடத்தில் இருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக