ஞாயிறு, மார்ச் 09, 2014

தீவுகள் பிரச்சினையில் ஜப்பானுடன் பேச்சுவார்த்தை கிடையாது சீனா அறிவிப்பு



கிழக்கு சீனா கடல்பகுதி தீவுகள் பிரச்சினையில் ஜப்பானுடன் பேச்சுவார்த்தை கிடையாது. ஒரு அங்குலம் நிலத்தை கூட விட்டுக்கொடுக்க மாட்டோம் என சீன மந்திரி உறுதிபட கூறினார்.


தீவுகள் பிரச்சினையால் பதற்றம்
கிழக்கு சீன கடல்பகுதியில் ஏராளமான தீவுகள் அமைந்துள்ளன. இது தொடர்பாக சீனாவுடன், ஜப்பான், வியட்னாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு பிரச்சினை நீடித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தியாயூ, சென்காகு தீவுகள் தொடர்பாக சீனாவும், ஜப்பானும் உரிமை கொண்டாடி வருகின்றன.

இந்த சர்ச்சைக்குரிய தீவுகள் பகுதிக்கு கடற்படை கப்பல்கள், போர் விமானங்களை அனுப்பி கண்காணிக்கின்றன. இதனால் 2 நாடுகள் இடையே பதற்றம் நிலவுகிறது.


அதுமட்டுமல்ல இந்திய எல்லைக்குள் ஊடுருவது, அருணாசலப்பிரதேசத்தை சொந்தம் கொண்டாடுவது போன்றவற்றிலும் சீனா ஈடுபடுகிறது. வேறுசில நாடுகளுடனும் சீனா பிரச்சினை செய்கிறது.

மந்திரி பதில்
இதற்கிடையில் சீனா பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். உலகளாவிய பல பிரச்சினை குறித்து கருத்து வெளியிட்டார்.
அப்போது கிழக்கு சீன கடல்பகுதி தீவுகள் சர்ச்சை குறித்து அவர் கூறியதாவது:–
 
பேச்சுவார்த்தை கிடையாது
ஜப்பானை சேர்ந்த சிலர் கடந்த கால ஆக்கிரமிப்பு வரலாற்றை ஊதி பெரிதுபடுத்த முயற்சிக்கிறார்கள். வரலாறு, நிலப்பரப்பு விஷயத்தில் ஜப்பானுடன் சமரசம் கிடையாது. ஆகவே பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்.
சீனாவின் ஒரு அங்குலம் நிலத்தை கூட விட்டுக்கொடுக்க மாட்டோம். அதேநேரத்தில் நெருங்கிய அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்க தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

உக்ரைன் விவகாரம்
மேலும் அவர் கூறுகையில், ‘உக்ரைன் விவகாரத்தில் அரசியல் ரீதியில் பேசி தீர்வு காண வேண்டும். ஆப்கானிஸ்தானில் தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.
 
சீனாவின் நெருங்கிய நட்புறவு நாடாக வடகொரியா விளங்குகிறது. தூதரக உறவு மற்றும் பொருளாதார ரீதியில் உதவிகள் அளிக்கிறது. கொரியா தீபகற்பத்தில் வடகொரியாவுக்கும், அமெரிக்க ஆதரவு நாடான தென்கொரியாவுக்கும் இடையேயும் பிரச்சினை இருந்து வருகிறது. இது குறித்து சீனா மந்திரி கருத்து தெரிவிக்கையில், ‘கொரியா தீபகற்பத்தில் குழப்பம் அல்லது போர் ஏற்பட அனுமதிக்க மாட்டோம். அங்கு அணுசக்தி மயத்தை குறைப்பதன் மூலம் அமைதியை உருவாக்க முடியும்’ என கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக