மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள உத்தங்குடியில் தனியாருக்கு சொந்தமான பல்பொருள் அங்காடி உள்ளது. இங்கு கடந்த மாதம் 12–ந்தேதி இரும்பு பைப் வெடிகுண்டு மற்றும் பெட்ரோல் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில் போன்றவை கண்டெடுக்கப்பட்டது. மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் வழக்கு தொடர்பாக சிவகங்கையை சேர்ந்த தமிழ்செல்வம் என்பவரை மாவட்ட போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். தமிழ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த இவரிடம் நடை பெற்ற விசாரணையில், மேலும் சில தகவல்கள் கிடைத்துள்ளன.
பைப் வெடிகுண்டு விவகாரத்தில் தொடர்புடைய 2 பேர் மேலூரில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதாரி அவர்களை பிடிக்க உத்தரவிட்டார்.
அதன்பேரில் உசிலம்பட்டி துணை சூப்பிரண்டு சரவணக்குமார் தலைமையிலான தனிப்படையினர் நேற்று இரவு மேலூர் விரைந்தனர். அரசு பள்ளி தலைமை ஆசிரியை ஒருவர் வீட்டில் 2 பேரும் பதுங்கி இருந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் அதிரடியாக செயல்பட்டு 2 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர்களது பெயர் தங்க ராஜ் என்ற தமிழரசன் (37), கல்லல் அருகே உள்ள சாக்கோட்டையை சேர்ந்தவர்.
அவரது நண்பர் கவியரசன் என்ற ராஜா (29) என தெரியவந்தது. இவர் சிவகங்கை மாவட்டம் ஆண்டக்குடி அருகே உள்ள திருவேகம்புத்தூரைச் சேர்ந்தவர்.
கைதான தங்கராஜின் சகோதரி மேலூரில் தலைமை ஆசிரியையாக இருப்பதால் யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க இங்கு வந்து பதுங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.
கைதான 2 பேரிடம் இருந்தும் 2 பெரிய கத்திகள், 3 சிறிய கத்திகள், 7 மீட்டர் வயர், ஒரு லிட்டர் பெட்ரோல், 2 லேப்–டாப், 5 செல்போன்கள் மற்றும் ஒரு ஸ்கூட்டி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கைதான 2 பேரும் தற்போது மதுரையில் உள்ள கியூ பிரிவு போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக