மாயமான மலேசிய விமானம் பற்றி 5 நாட்களாக தகவல்கள் எதுவும் தெரியவராத காரணத்தால், உண்மையான தகவல்களை தெரிவிக்கக்கோரி, விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்கள் மலேசியன் எர்லைன்ஸ் அதிகாரிகள் மீது தண்ணீர் பாட்டல் வீசி கோபத்தை வெளிப்படுத்தினர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி கடந்த 8ஆம் தேதி அதிகாலை புறப்பட்டுச் சென்ற மலேசிய விமானம் திடீரென மாயமானது.
அந்த விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் எனவும், அதில் பயணம் செய்த 5 இந்தியர் உள்பட 239 பேரும் பலியாகி இருக்கலாம் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுவரை மாயமான விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த விமானத்தை தேடும் பணியில் சீனா, அமெரிக்கா மற்றும் மலேசிய நாட்டு விமானங்கள் மற்றும் கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், மலேசிய விமானம் ரேடார் தொடர்பை இழப்பதற்கு முன்பு மலாக்கா ஜலசந்திக்கு மேலே சென்றதாக நேற்று தகவல் வெளியாகியது. இந்த தகவலை நேற்று மலேசிய அதிகாரிகள் மறுத்துள்ளனர். இந்நிலையில், பீஜிங் ஓட்டல் ஒன்றில் காணாமல் போன மலேசிய விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்களை, மலேசியன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் சந்தித்து பேசினர். அப்போது, 'விமானம் மாயமானது குறித்து உண்மையான தகவல்களை கூறுங்கள்; என ஆவேசத்துடன் மலேசியன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் மீது தண்ணீர் பாட்டல்களை அவர்கள் வீசினர். மேலும், மலேசிய ராணுவம் தங்களுக்கு தெரிந்த ரகசியங்களை வெளிப்படுத்தாமல் உள்ளனர் என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக