ஜனவரி மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 0.1
சதவீதம் உயர்ந்துள்ளது. டிசம்பர் மாதத்தில் 0.16 சதவீதம் (மறு
மதிப்பீட்டின்படி) சரிவடைந்து இருந்தது. நவம்பர் மற்றும் அக்டோபர்
மாதங்களில் 2.1 சதவீதம் மற்றும் 1.8 சதவீதம் குறைந்து இருந்தது.
முன்னேற்றம்
ஆக, மூன்று மாதங்கள் தொடர் சரிவுக்குப்
பின் தொழில்துறையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தொழில்துறை உற்பத்தி
வளர்ச்சி குறித்து பிரதம மந்திரியின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர்
சி.ரங்கராஜன் கூறுகையில், ‘‘ஜனவரியில் எதிர்பார்ப்புகளுக்கு இணையாக
தொழில்துறையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி மற்றும் மார்ச்
மாதங்களில் உற்பத்தி துறையில் வளர்ச்சி ஏற்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.
மின் உற்பத்தி
அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும்
ஆதாரமாகத் திகழும் மின் உற்பத்தி வளர்ச்சி 6.4 சதவீதத்திலிருந்து 6.5
சதவீதமாக உயர்ந்துள்ளது. முதல் 10 மாதங்களில் இந்த உற்பத்தி 4.7
சதவீதத்திலிருந்து 5.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2013–ஆம் ஆண்டு ஜனவரியில் 1.8 சதவீதம்
சரிவடைந்து இருந்த சுரங்கத்துறை உற்பத்தி இவ்வாண்டு ஜனவரியில் 0.7 சதவீதம்
உயர்ந்துள்ளது. தொழில்துறை உற்பத்தியை கணக்கிடுவதில் இத்துறையின் பங்கு 14
சதவீதமாக உள்ளது.
உற்பத்தி துறை
தொழில்துறை உற்பத்தியை கணக்கிடுவதில்
உருக்கு, சிமெண்டு உள்ளிட்ட உற்பத்தி துறையின் பங்கு 75 சதவீதத்திற்கும்
அதிகமாக உள்ளது. உள்நாட்டில் கடனிற்கான வட்டி விகிதம் அதிகமாக உள்ளதால்
கார், நுகர்வோர் சாதனங்கள் விற்பனை குறைந்துள்ளது. நிறுவனங்களும் விரிவாக்க
நடவடிக்கைகளை மேற்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றன. இதனையடுத்து, உற்பத்தி
துறையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஜனவரி மாதத்தில் உற்பத்தி துறையில் 0.7
சதவீதம் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் இது 2.7
சதவீதம் உயர்ந்து இருந்தது. நடப்பு நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில்
உற்பத்தி துறையில் 0.4 சதவீதம் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
பொறியியல் துறை உற்பத்தி 4.2 சதவீதம் குறைந்துள்ளது.
கடந்த 2013 ஜனவரியில் தொழில்துறை உற்பத்தி
2.5 சதவீதம் உயர்ந்து இருந்தது. இதனுடன் ஒப்பிடும்போது வளர்ச்சி
குறைந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் தொழில்துறையில்
எவ்வித வளர்ச்சியும் ஏற்படவில்லை. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் 1
சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டு இருந்தது.
பொருளாதார வளர்ச்சி
பொருளாதார வளர்ச்சியை எடுத்துக்காட்டும்
ஜி.டீ.பி. எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கிடுவதில்
தொழில்துறையின் பங்கு 26 சதவீதமாக உள்ளது.
தொழில்துறையின் பின்னடைவால் கடந்த
2012–13–ஆம் நிதி ஆண்டில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருளாதார
வளர்ச்சி 4.5 சதவீதமாக குறைந்தது. நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது
காலாண்டில் பொருளாதார வளர்ச்சி நிபுணர்களின் மதிப்பீடுகளுக்கு மாறாக 4.7
சதவீதமாக குறைந்தது. தொடர்ந்து ஏழு காலாண்டுகளாக பொருளாதார வளர்ச்சி 5
சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.
தேர்தல் செலவினம்
கார், நுகர்வோர் சாதனங்கள், உருக்கு
பொருள்கள் போன்றவற்றின் விற்பனை குறைந்ததுதான் பொருளாதார மந்தநிலைக்கு
பின்னணியாக உள்ளது. இந்நிலையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தேர்தல்
செலவினம் 0.5 சதவீதமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, நான்காவது
காலாண்டில் பொருளாதார வளர்ச்சி நன்றாக இருப்பதற்கான அறிகுறிகள்
தென்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக