இன்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3–வது சுற்று ஆட்டத்தில் போலந்து வீராங்கனை ராட்வன்ஸ்கா, டென்மார்க் வீராங்கனை வோஸ்னியாக்கி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்
அமெரிக்காவில் உள்ள இன்டியன்வெல்ஸ் நகரில் பி.என்.பி.பாரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் 2–ம் நிலை வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா), ருமேனியாவின் விக்டர் ஹன்சுவை சந்தித்தார். இதில் ஜோகோவிச் 7–6 (7–1), 6–2 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று 3–வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஜோகோவிச் 550–வது வெற்றி
ஜோகோவிச் பெற்ற 550–வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் தற்போதைய வீரர்களில் அதிக ஆட்டங்களில் வெற்றி பெற்ற வீரர்கள் வரிசையில் 6–வது இடத்தை பிடித்துள்ளார். ரோஜர் பெடரர் (938 வெற்றிகள்), ரபெல் நடால் (674), லெய்டன் ஹெவிட் (599), டேவிட் பெரர் (565), டாமி ஹாஸ் (554) ஆகியோர் முறையே முதல் 5 இடங்கள் வகிக்கின்றனர்.
மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயினை சேர்ந்த 56–ம் நிலை விரர் பாடிஸ்டா அகுஸ்ட் 4–6, 6–2, 6–4 என்ற செட் கணக்கில் 4–ம் நிலை வீரர் தாமஸ் பெர்டிச்சை (செக் குடியரசு) வீழ்த்தி 3–வது சுற்றுக்குள் நுழைந்தார்.
ராட்வன்ஸ்கா வெற்றி
மற்ற ஆட்டங்களில் அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர், ரிச்சர்ட் காஸ்குயட் (பிரான்ஸ்), டிமித்ரோவ் (பல்கேரியா), ஜான் நிமினென் (பின்லாந்து), யு லூ (சீன தைபே) ஆகியோர் வெற்றி கண்டு 3–வது சுற்றுக்குள் நுழைந்தனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3–வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 3–வது இடத்தில் இருக்கும் அக்னிஸ்கா ராட்வன்ஸ்கா (போலந்து) 6–0, 6–0 என்ற நேர்செட்டில் 48–ம் நிலை வீராங்கனை அனிகா பெக்கை (ஜெர்மனி) எளிதில் தோற்கடித்து 4–வது சுற்றுக்கு முன்னேறினார். 4–வது சுற்று ஆட்டத்தில் ராட்வன்ஸ்கா, பிரான்ஸ் வீராங்கனை அலிஸ் கொர்னெட்டை எதிர்கொள்கிறார்.
நீண்ட நேரம் நீடித்த ஆட்டம்
3–வது சுற்று ஆட்டத்தில் அலிஸ் கொர்னெட் 3 மணி 26 நிமிட போராட்டத்துக்கு பின் னர் 6–7 (4–7), 7–5, 6–3 என்ற செட் கணக்கில் 14–ம் நிலை வீராங்கனை சார்லா சவ்ரஸ் நவ்ரோவாவை (ஸ்பெயின்) வீழ்த்தினார். இந்த ஆண்டில் மகளிர் பிரிவில் இது இரண்டாவது நீண்ட நேர ஆட்டமாகும். ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் ஷரபோவா 3 மணி 28 நிமிடத்தில் காரின் காப்பை வென்றதே இந்த ஆண்டில் அதிகபட்சம் நீடித்த போட்டியாகும்.
மற்ற ஆட்டங்களில் ஹாலெப் (ருமேனியா), ஜெலீனா ஜான்கோவிச் (செர் பியா), பவுச்சர்ட் (கனடா), கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) ஆகியோர் வெற்றி பெற்று 4–வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
பெயஸ் ஜோடி வெற்றி
ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் லியாண்டர் பெயஸ் (இந்தியா), ராடக் ஸ்டீபனாக் (செக் குடியரசு) 7–6, 3–6, 10–5 என்ற செட் கணக்கில் ஜெர்சி ஜானோவிச் (போலந்து)– பிலிப் (ஜெர்மனி) ஜோடியை வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது. அடுத்த ஆட்டத்தில் லியாண்டர் பெயஸ் ஜோடி, ஜோனதன் எல்ரிச் (இஸ்ரேல்)– ரிச்சர்ட் காஸ்குயட் (பிரான்ஸ்) ஜோடியை சந்திக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக