தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக அடுத்தமாதம் (ஏப்ரல்) 24–ந்தேதி நடக்கிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
அ.தி.மு.க–தி.மு.க.
பாராளுமன்ற தேர்தலை அ.தி.மு.க. இந்த முறை தனித்து சந்திக்கிறது. கம்யூனிஸ்டு கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் அக்கட்சி தமிழகம்–புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.
அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா தமிழ்நாட்டில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தனது கட்சி வேட்பாளர்களுக்கு தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
தி.மு.க 35 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. மீதி 5 தொகுதிகளை கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு ஒதுக்கி இருக்கிறது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தங்களுக்கு உள்ள 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. மற்ற கட்சிகள் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.
இந்த தேர்தலில் அ.தி.மு.க–தி.மு.க. இடையே 35 தொகுதிகளில் நேரடி போட்டி ஏற்பட்டு இருக்கிறது.
பா.ஜனதா
இந்த தேர்தலில் தமிழக பாரதீய ஜனதா மற்றொரு பலமான கூட்டணியை அமைத்து இருக்கிறது. இந்த கூட்டணியில் தே.மு.தி.க, பா.ம.க, ம.தி.மு.க, மற்றும் சிறிய கட்சிகள் இடம் பெறுகிறது.
அ.தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியேறிய கம்யூனிஸ்டு கட்சிகளும் தனி அணியாக போட்டியிட போவதாக நேற்று அறிவித்து உள்ளனர்.
காங்கிரஸ் தனித்து போட்டி
பாராளுமன்ற தேர்தலில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியுடன் எந்த கட்சியும் கூட்டணிக்கு முன்வரவில்லை. 10 ஆண்டுகளாக கூட்டணியில் இருந்த தி.மு.க., கடந்த ஆண்டு இறுதியில் கூட்டணியில் இருந்து விலகியது. தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைக்கலாம் என்று காங்கிரஸ் நினைத்திருந்தது.
ஆனால், பா.ஜனதாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தே.மு.தி.க. அதிகாரப்பூர்வமாக தொடங்கி விட்டது. இதனால், தே.மு.தி.க.வுடனும் அணி சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் தனித்து போட்டியிடப்போவதாக காங்கிரஸ் மேலிடம் நேற்று அறிவித்தது.
இதுபற்றி அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஷகீல் அகமது கூறுகையில், ‘தமிழ்நாட்டில் இப்போதைய நிலையில் எந்த கட்சியுடனும் கூட்டணி ஏற்பட வாய்ப்பு இல்லை’ என்று தெரிவித்தார்.
5 முனை போட்டி
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்து உள்ளதால் அ.தி.மு.க., தி.மு.க. அணி, பா.ஜனதா அணி, கம்யூனிஸ்டு, காங்கிரஸ் என 5 முனை போட்டி ஏற்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–
ஆலோசனை கூட்டம்
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் பணிக்கு தமிழக காங்கிரஸ் தன்னை தயார்படுத்தி வைத்திருக்கிறது. தமிழகமெங்கும் காங்கிரஸ் நண்பர்கள் தேர்தலை எதிர்கொள்ள உற்சாகமாக இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சியில் கூட்டணி குறித்து பல்வேறு செய்திகள் கடந்த ஒரு வாரகாலமாக வந்தது. யூகங்கள் இறக்கைகட்டி தமிழக தெருக்களில் பவனி வந்தன.
காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பணி குறித்து ஆலோசனை செய்வதற்கு வருகிற 14–ந்தேதி(வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சத்தியமூர்த்திபவனில் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறும்.
இதற்கான அழைப்பிதழ்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டிருந்தாலும், மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் இதனையே அழைப்பிதழாக ஏற்று கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். மாவட்ட தலைவர்கள் கூட்டத்திற்கு வருகின்ற போது தேர்தல் பணி குறித்தும் தலைவர்கள், சுற்றுப்பயண நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்கள் குறித்தும் ஆலோசித்து அதன் விவரங்களுடன் வர வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக