அமெரிக்கா துப்பாக்கி சூடு சம்பவங்கள் தினசரி நிகழ்ச்சிகளாகி விட்டன, இதனையடுத்து துப்பாக்கி சட்டத்திற்கு கடும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள தாப்ட் நகரிலுள்ள உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் வகுப்பறையில் 28 மாணவ, மாணவிகள் அமர்ந்திருந்தனர். அப்போது இந்த வகுப்பறையில் துப்பாக்கியுடன் புகுந்த 16 வயது இளைஞன் ஒரு குறிப்பிட்ட பெயரை சொல்லி அழைத்தான்.
பிறகு அவன் தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டான், இதனால் மாணவ, மாணவிகள் அலறியடித்துக் கொண்டு மேஜைக்கு அடியில் பதுங்கினார்கள். இந்த துப்பாக்கி சூட்டில் குண்டு பாய்ந்து ஒரு மாணவன் படுகாயம் அடைந்தான்.
உடனே ஒரு ஆசிரியரும், பள்ளிக்கூட நிர்வாகியும் விரைந்து வந்து மர்ம இளைஞரை வளைத்து பிடித்து துப்பாக்கியை கைப்பற்றினர். பிறகு அவனை பொலிசில் ஒப்படைத்தார்கள்.
காயம் அடைந்த மாணவனை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவத்தில் மேலும் 2 மாணவிகள் காயம் அடைந்தனர்.
ஒரு மாணவி மேஜைக்கு அடியில் பதுங்கும் போது தலையில் காயம் ஏற்பட்டது. மற்றொரு மாணவி துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதில் அதிர்ச்சி அடைந்து காது கேளாமல் போய்விட்டதாக தெரிகிறது.
பிடிபட்டவன் பெயர், அவன் மாணவனா? என்ற விவரம் வெளியிடப்படவில்லை. சம்பவத்துக்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடைபெறுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக