சனி, டிசம்பர் 20, 2014

புத்தாண்டுக் கொண்டாட்டம்: நட்சத்திர ஹோட்டல்களுக்கு கட்டுப்பாடு

சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு காவல் துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.
2015 புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள் செய்து வருகின்றன. நட்சத்திர ஹோட்டல்களை தவிர்த்து மெரீனா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, கிழக்கு கடற்கரைச் சாலை ஆகிய இடங்களிலும் மக்கள் புத்தாண்டைக் கொண்டாடுவார்கள்.

டிசம்பர் 31-ஆம் தேதி மாலை தொடங்கி அடுத்த நாள் காலை ஜனவரி 1-ஆம் தேதி வரை நடைபெறும் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் எவ்வித அசம்பாவிதச் சம்பவங்களும் நடைபெறாமல் இருப்பதற்கு காவல் துறை பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நட்சத்திர ஹோட்டல்களில் புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சிக்காக செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு சென்னை பெருநகர காவல் துறையின் கூடுதல் ஆணையர்கள் பி.தாமரைக்கண்ணன், ஆபாஷ்குமார் ஆகியோர் தஹைலமை வகித்தனர்.
கூட்டத்தில் இணை ஆணையர் அருண், துணை ஆணையர் சிவானந்தம் ஆகியோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள், உணவு விடுதிகள் ஆகியவற்றின் மேலாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்றனர்.
கட்டுப்பாடுகள்: புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து கூட்டத்தில் விளக்கப்பட்டது. ஹோட்டல்கள், நட்சத்திர உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றுக்கு வரும் வாகனங்கள் முறையாக சோதனை செய்யப்பட வேண்டும், அனைத்து நுழைவு வாயில்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும், வாகனங்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.
புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகள், அனுமதிக்கப்பட்ட அரங்கத்திலேயே நடத்தப்பட வேண்டும், கேளிக்கை நிகழ்ச்சிக்காக தாற்காலிக மேடைகள் அமைக்கப்பட்டால், அந்த மேடையின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து பொதுப்பணித் துறை, தீயணைப்புத் துறை ஆகியவற்றின் தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும், நீச்சல் குளத்தின் மீதோ, அருகிலோ மேடை அமைக்கக் கூடாது.
நீச்சல் குளத்துக்கு செல்லும் வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருக்க வேண்டும், வாகனங்களை அந்தந்த ஹோட்டல்களின் வாகன நிறுத்தும் இடங்களிலேயே நிறுத்த வேண்டும், சாலைகளில் எந்தக் காரணத்தைக் கொண்டும் வாகனங்கள் நிறுத்தப்படக் கூடாது, மதுபானங்கள் அனுமதிக்கப்பட்ட மதுபானக் கூடத்திலேயே பரிமாற வேண்டும், உணவு, மதுபான சேவையை அதிகாலை 2 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும், காவல் துறையால் அளிக்கப்படும் நேரக் கட்டுப்பாடு கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டும், கேளிக்கை நிகழ்ச்சிகளின்போது பெண்களைக் கேலி செய்வதைத் தடுக்க போதுமான பாதுகாப்பு ஊழியர்களை நியமிக்க வேண்டும், வளாகத்துக்குள் பட்டாசு வெடிக்கக் கூடாது போன்ற கட்டுப்பாடுகளை காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல, டிசம்பர் 31-ம் தேதியன்று மெரீனா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக