ஞாயிறு, டிசம்பர் 07, 2014

அமெரிக்காவில் ஒபாமா ஆட்சியில் இனவெறி தாக்குதல் அதிகரிப்பு

அமெரிக்காவில் ஜனாதிபதி ஒபாமா ஆட்சிக்கு வந்தபிறகு தான் இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து உள்ளது என்று வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இனவெறி தாக்குதல்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கறுப்பின இளைஞர்கள் மீது வெள்ளைக்கார போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறார்கள். இதனால் அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த இனவெறி தாக்குதல்கள் குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அமெரிக்காவில் ஜனாதிபதி ஒபாமா ஆட்சிக்கு வந்தபிறகு தான் இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து உள்ளதாக கூறினார். 

மேலும் அவர் கூறுகையில், அமெரிக்காவின் முதல் கறுப்பின தலைவரின் ஆட்சியில் நடைபெறும் இந்த தாக்குதல்கள், உண்மையிலேயே வியப்பாக உள்ளது. இதை சொல்வதற்கு நான் வருந்துகிறேன். காரணம், நான் அவர்மீது தனிப்பட்ட முறையில் மரியாதை வைத்துள்ளேன், என்றார். அமெரிக்காவில் உண்மையான சக்திகளின் பிணைக்கைதியாக ஒபாமா இருப்பதாக நினைக்கிறேன் என்று கூறிய அவர், ஒபாமா சோர்வடைந்து, வெறுமையுடன் காணப்படுவதாகவும் தெரிவித்தார். வெனிசுலாவில் எதிர்க்கட்சித்தலைவர்களுக்கு பல்வேறு நெருக்கடிகளை அளித்து வரும் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீது, ஒபாமா நிர்வாகம் கடந்த சில வாரங்களாக கடும் கோபத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக