கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதீரன் மக்கள் சந்திப்பு என்ற பெயரில் மாநிலம் முழுவதும் யாத்திரை நடத்தினார்.
இதன் நிறைவு நாள் விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்க காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத்தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக திருவனந்தபுரம் வந்தார். அங்கு புத்தரிகண்டம் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
அவர் பேசியதாவது:–
நாட்டின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியே முக்கிய பங்காற்றி உள்ளது. காங்கிரஸ் கட்சியால்தான் நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்ல முடியும். காங்கிரசார் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் இதனை நிறைவேற்ற முடியும்.
அவர்கள் மனதளவில் ஒன்றிணைந்து அனைத்து மக்கள் நலப்பணிகளிலும் ஈடுபட வேண்டும்.பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆன பின்பும் எந்த திட்டத்தையும் முழுமையாக நிறைவேற்றவில்லை. தேர்தலின்போது, அளித்த வாக்குறுதிகளையும் செயல்படுத்தவில்லை. 100 நாட்களில் கறுப்பு பணத்தை மீட்டு வருவோம் என்று சவால் விட்டனர். ஆனால் இதுவரை அதை நிறைவேற்றவில்லை.
எம்.பி.க்கள் அவர்களின் தொகுதியில் ஒரு கிராமத்தை தத்தெடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி கூறினார். இந்த திட்டத்திற்கு மத்திய அரசு எந்த நிதியும் ஒதுக்கவில்லை. பாரதீய ஜனதா அரசின் ஆட்சியை கண்டு மக்கள் மனம் வெறுத்து ஏமாற்றம் அடைந்ததே மிச்சம்.
எனவே அவர்களின் கவனம் காங்கிரசின் பக்கம் திரும்பி உள்ளது. அவர்கள் காங்கிரசை ஆதரிக்க தயாராகி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக