புதன், டிசம்பர் 17, 2014

'குவாரியில் சமாதியாக்குவோம்': சகாயம் ஐ.ஏ.எஸ்.க்கு கொலை மிரட்டல்!



மதுரை: கிரானைட் முறைகேடு குறித்து தொடர்ந்து விசாரணை செய்தால், கிரானைட் குவாரியில் போட்டு சமாதி ஆக்கி விடுவோம் என ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மதுரையில் இன்று 2வது நாளாக பொதுமக்களிடம் இருந்து கிராணைட் புகார் குறித்த மனுக்களை ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் பெற்றார். இதில், நேரடியாக 53 மனுக்களும், அஞ்சல் மூலமாக 31 மனுக்களும் பெறப்பட்டது.

இதில், அஞ்சல் மூலம் வந்த கடிதம் ஒன்றை பிரித்து பார்த்தபோது, ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்கு கொலை மிரட்டல் விடுவிக்கப்பட்டிருந்தது.
'உ' ஊஞ்சனை காளியம்மன் துணை என ஆரம்பிக்கப்பட்டுள்ள அந்த கடிதத்தில், ''உயர்திரு. சட்டப்பணி ஆணையர் சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்களுக்கு, குமார் எழுதும் கடிதம். கிரானைட் குவாரி என்னுடைய உறவினர்களும் மற்றும் எனக்கு வேண்டப்பட்டவர்களும் கனிம வள குவாரி நடத்துகிறார்கள். அவர்களிடம் எந்தவித விசாரணையும் நடத்தக்கூடாது. எந்தவித இடையூறும் கொடுக்கக்கூடாது.

உடனே மதுரையை விட்டு வெளியேற வேண்டும். இல்லையென்றால் நீங்கள் உயிருடன் திரும்ப முடியாது. அதையும் மீறி தொந்தரவு கொடுத்தால், இங்குள்ள குவாரியில் போட்டு சமாதி ஆக்கிவிடுவோம். சகாயம் உடம்பிலுள்ள கறி கூறுபோட்டு விற்கப்படும்.
என் மனைவி பிரேமா ராணி நெடுஞ்சாலைத் துறையில் ஈரோடு மாவட்டத்தில் வேலை செய்கிறார். இவருக்கு பதவி உயர்வும், சேலத்திற்கு பணியிட மாற்றமும் செய்ய நீங்கள் உதவி செய்ய வேண்டும்.

ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் அவர் உதவி செயற்பொறியாளராக உள்ளார். இவருக்கு பணி உயர்வு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். நீங்கள் மதுரையில் தங்கி விசாரணை நடத்தக்கூடாது. விசாரணையை விலக்கிக் கொள்ள வேண்டும்'' எனக் கூறப்பட்டுள்ளது.
இதனால், தமிழக அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக