திங்கள், செப்டம்பர் 30, 2013

அகதிகளாக்கப்பட்ட முஸாஃபர்நகர் மக்கள் மீது வனம் அபகரிப்பு வழக்கு!

புதுடெல்லி: உ.பி., முஸாஃபர் நகரில் ஏற்ப்பட்ட கலவரத்தால் அகதிகளாக்கப்பட்டு காட்டுப் பகுதிகளில் அபயம் தேடிய மக்கள் மீது வனம் அபகரிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. கலவரத்தில் பாதிக்கப்பட்டு உற்றார்களையும், உறவினர்களையும் இழந்து வன்முறை யாளர்களிடமிருந்து தப்பிக்க அருகிலுள்ள ஷாம்லி மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியான மலக்பூரில் அபயம் தேடிய முஸ்லிம்கள் மீது அரசு வழக்கை பதிவுச் செய்துள்ளது. அரசு புள்ளிவிபரப்படி 10 ஆயிரம் பேர் இப்பகுதியில் அபயம் தேடியுள்ளனர்.

 
ஆனால், இப்பகுதியில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் செப்டம்பர் 12-ஆம் தேதி முதல் வனப்பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
இந்திய தண்டனைச் சட்டம், வனப் பாதுகாப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் முஸ்லிம்கள் மீது கைரானா ரேஞ்ச் ரீஜினல் ஃபாரஸ்ட் அதிகாரி நரேந்தர் குமார் முதல் தகவல் அறிக்கையை பதிவுச் செய்துள்ளார்.
 
மரத்தை வெட்டி அழித்துவிட்டு டார்பாய் மூலம் கூடாரங்களை அமைத்ததாகவும் முஸ்லிம்கள் மீது வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது. ஆனால், சட்டரீதியாக எஃப்.ஐ.ஆர் பதிவுச் செய்யப்பட்ட போதிலும் அகதிகளான முஸ்லிம்கள் மீது தற்காலம் நடவடிக்கை எடுக்கமாட்டோம் என்று ஷாம்லி எஸ்.பி ஏ.கே.ராய் தெரிவித்துள்ளார்.
 
இதுக்குறித்து எஸ்.பி ஏ.கே.ராய் மேலும் தெரிவிக்கையில்; ‘அவர்கள் நிரந்தரமாக அங்கு குடியேறவில்லை. ஒரு குறிப்பிட்ட சூழலில் வனப் பகுதியில் அகதிகளாக மாறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்ற உண்மை அனைவருக்கும் தெரியும். வனத்துறையின் கோரிக்கையின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இப்பொழுது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று முடிவு எடுத்துள்ளோம். அங்குள்ள அகதி முகாம் நிரந்தரமானதல்ல.’ என்று தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக