சனி, செப்டம்பர் 21, 2013

ஆப்கானிஸ்தானிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யும் இந்தியா!

வெங்காயத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருப்பதால் அதனை மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது தொடர ஆரம்பித்துள்ளது. பஞ்சாபைச் சேர்ந்த வியாபாரிகளும் அமிர்தசரஸ் அருகே உள்ள அடாரி-வாகா சாலை இணைப்பு வழியாக ஆப்கானிஸ்தானிலிருந்து வெங்காயத்தை வரவழைத்துள்ளனர்.

வியாழனன்று 400 டன் வெங்காயம் வந்துள்ள நிலையில் இன்னும் 2,000 டன் 7-10 நாட்களுக்குள் விற்பனைக்கு வந்து சேரும் என்று அவர்கள் தெரிவித்தனர். வெங்காய விளைச்சல் குறைந்துள்ளதால் விலை அதிகரிக்கவே இப்படியொரு முடிவை எடுத்ததாக அமிர்தசரசின் வர்த்தக கழகத்தின் ஏற்றுமதி பிரிவுத் தலைவர் ராஜ்தீப் உப்பல் பத்திரிகையாளர்களிடம் கூறினார். 

உள்நாட்டுத் தரத்துடன் ஒப்பிடுகையில் இறக்குமதி செய்யப்படும் இவை தரம் குறைவாக இருந்தாலும் நாட்டில் உள்ள பற்றாக்குறையைச் சமாளிக்கவும், விலை உயர்வைத்த் தடுக்கவும் இவை பயன்படும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.  

டெல்லி, பஞ்சாப் பகுதியைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் காபுலில் இருந்து வெங்காயத்தை வரவழைத்துள்ளதாகக் கூறினர். இதற்குமுன்னர், பாகிஸ்தானில் இருந்தும் வெங்காயத்தை சில வர்த்தக மையங்கள் வாங்கியுள்ளன.

இதே அடாரி-வாகா வழியாக பாகிஸ்தானிலிருந்து கொண்டுவர முயற்சி செய்தபோது அது நடைபெறாத காரணத்தால் ஆப்கானிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்வதாக வியாபாரிகள் தெரிவித்தனர், இந்த வெங்காயம் பஞ்சாப், ஜம்மு,காஷ்மீர் மற்றும் டெல்லி ஆகிய பகுதிகளில் விற்பனைக்கு கிடைக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர். 

கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கடும் பற்றாக்குறை ஏற்பட்டபோது இந்திய அரசு பாகிஸ்தானிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக