திங்கள், செப்டம்பர் 30, 2013

ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் விழுந்து பலியாவதை தடுக்க சுப்ரீம் கோர்ட்டின் அறிவிப்பை தமிழக அரசு தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 4 வயது சிறுமி தேவி நேற்று 28.09.2013 அன்று ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து பலியாகிவிட்ட செய்தி மிகவும் வருத்தத்திற்குரியது அச்சிறுமியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அச்சிறுமியை மீட்பதற்காக 10 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாது போராடிய தீயணைப்பு வீரர்களுக்கும் , மருத்துவ குழுவிற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

 
இச்சம்பவம் மட்டுமல்லாது, தமிழகத்தில் இதுவரை 30க்கும் மேற்ப்பட்ட இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. இது போன்ற சம்பவங்கள் நிகழும்போது அரசு நிவாரணங்கள் வழங்குவதோடு மக்களும் தங்களது அனுதாபங்களைத் தெரிவித்துவிட்டு அடுத்த வேலைக்குச் சென்று விடுகின்றனர்.
 
சமீபத்தில் குழாய் கிணறுகள், மூடப்படாத ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறி விழுந்து பலியாவதை தடுக்க சுப்ரீம் கோர்ட் புதிய வழிமுறைகளை வகுத்து அறிவித்துள்ளது.
 
அந்த விதிமுறைகள் பின் வருமாறு :
 
ஆழ்துளை கிணறு , குழாய் கிணறு அமைக்க ஒரு நிலத்தின் அல்லது கட்டிடத்தின் உரிமையாளர் நடவடிக்கை எடுக்கும் முன்பாக குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்பாக மாவட்ட கலெக்டர், கிராம பஞ்சாயத்து தலைவர் அல்லது நிலத்தடி நீர், பொது சுகாதாரம், மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளுக்கு முறைப்படி தெரிவிக்க வேண்டும்.
 
பதிவு செய்து கொள்ள வேண்டும் :
 
துளையிடும் அனைத்து நிறுவனங்களும் அது அரசு நிறுவனமாக இருந்தாலும் சரி, அரசு சார்பு நிறுவனமாக இருந்தாலும் சரி, தனியார் நிறுவனமாக இருந்தாலும் சரி அவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
 
கிணறு தோண்டுகிற போது, அந்த இடத்தில் தோண்டுகிற நிறுவனத்தின் பெயர் அல்லது நிலத்தின் உரிமையாளர் பெயர் விளம்பர பலகையில் எழுதி வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
 
நடைமேடை தேவை :
 
கிணறு தோண்டுகிறபோது அதைச்சுற்றிலும் முள் கம்பியைக் கொண்டு வேலி அமைக்க வேண்டும் அல்லது பிற தடுப்பு வேலி எதேனும் போடப்பட வேண்டும். கிணற்றைச் சுற்றிலும் நில மட்டத்துக்கு கீழே 0.30 மீட்டர் அளவுக்கு கான்கிரீட் அல்லது சிமெண்டு நடைமேடை அமைக்க வேண்டும்.

குழாய் கிணறுகள் பழுதானால், அதை கண்டிப்பாக மூட வேண்டும்.

மண் குழிகள் , கால்வாய்கள் பணி முடிந்தவுடன் மூடப்பட வேண்டும்.
 
கைவிடப்பட்ட கிணறா ?
 
கைவிடப்பட்ட கிணறு என்றால் அதை நில மட்டத்துக்கு மண் கொண்டு நிரப்பி விட வேண்டும்.
குறிப்பிட்ட இடத்தில் துளையிடும் பணி முடிந்தவுடன், அந்த இடம் துளையிடுவதுற்கு முன் எப்படி இருந்ததோ அப்படி ஆக்கி விட வேண்டும்.

இந்த விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை மொத்தமாக கண்காணிக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்படுகிறது. கிராமப்புறங்களில் பஞ்சாயத்துத் தலைவர்,விவசாயத்துறை அதிகாரி,நகர்ப்புறங்களில் மாநகராட்சி இளநிலை பொறியாளர்கள்,நிலத்தடி நீர்வள அதிகாரிகள்,சுகாதார அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
 
ஆழ்துளை கிணறோ, குழாய் கிணறோ கைவிடப்பட்டால் எந்த நிலையில் கைவிடப்பட்டாலும் கூட அது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிலத்தடி நீர் , பொது சுகாதாரத்துறை,மாநகராட்சி,தனியார் ஒப்பந்தகாரரிடம் சான்றிதழ் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
உச்ச நீதிமன்றத்தின் இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றுவதன் மூலம் இது போன்ற சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்க முடியும் . எனவே,தமிழக அரசு அவசர கால சட்டமாக இவ்விதிமுறைகளை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். அத்தோடு நில்லாமல் மக்களுக்கு ஆழ்துளை கிணறு பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.
 
இப்படிக்கு
 
J. முஹம்மது ரசின்

மாநில செயலாளர்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக