சனி, செப்டம்பர் 21, 2013

பா.ஜ.கவில் மீண்டும் சேரப்போவதில்லை: எடியூரப்பாவின் முடிவில் மாற்றம்!

பெங்களூர்: பாஜகவில் மீண்டும் சேரப் போவதில்லை என்று, கர்நாடக முன்னாள் முதல்வரும், கர்நாடக ஜனதா கட்சித் தலைவருமான எடியூரப்பா தெரிவித்தார்.பெங்களூரு கனரா யூனியன் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கஜக செயற்குழுக் கூட்டத்தை குத்துவிளக்கேற்றித் தொடக்கிவைத்து அவர் பேசியது:


பாஜகவில் கர்நாடக ஜனதா கட்சியை இணைத்துவிடுவதாக வெளியான தகவலில் உண்மையில்லை. இதனால், தொண்டர்கள் குழப்பம் அடைய வேண்டாம். பாஜகவுடன் கர்நாடக ஜனதா கட்சியை இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை.

பாஜகவில் என்னை (எடியூரப்பா) இணைத்துக் கொள்வதற்காகவும், அந்தக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தில்லிக்கு பிரதிநிதிகளை அனுப்பியதாக வெளியான செய்தியில் உண்மையில்லை. யாருடைய தயவும் எனக்குத் தேவையில்லை; நிபந்தனையுடன் பாஜகவில் மீண்டும் சேருவதற்கான அவசியமும் இல்லை என்று எடியூரப்பா கூறியுள்ளார்.மோடி, பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையொட்டி அவருக்கு  எடியூரப்பா ஆதரவு தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து எடியூரப்பா மீண்டும் பா.ஜ.கவில் இணையலாம் என்ற செய்தி வெளியானது. ஆனால், எடியூரப்பா விதித்த நிபந்தனைகளை பா.ஜ.க மேலிடம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அவரது கட்சியைச் சார்ந்த எம்.எல்.ஏக்கள் சிலர் பா.ஜ.கவில் இணைந்தால் காங்கிரஸில் சேரப்போவதாக எச்சரிக்கைவிடுத்ததாகவும், இதனால் எடியூரப்பா தனது முடிவை மாற்றிக்கொண்டார் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக