வெள்ளி, மே 15, 2015

எஸ்.டி.பி.ஐ கட்சியின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு!

எஸ்.டி.பி.ஐ கட்சியின் இரண்டு நாள் மாநில பொதுக்குழு சென்னையில் நடைபெற்றது. மே 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இப்பொதுக்குழுவில் கட்சியின் ஆண்டறிக்கை, நிதி அறிக்கை தாக்கல் மற்றும் அடுத்த மூன்றாண்டுக்கான புதிய மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மற்றும் தேசிய பொதுக் குழுவிற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஆகியன நடைபெற்றன.


முன்னதாக பொதுக்குழுவின் ஒருபகுதியாக மே,13 அன்று சென்னை ராயபுரம் புதுசூரக்குடி நாடார் உறவின்முறை மண்டபத்தில் மாநில பிரதிநிதிகள் சபை கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்குழுவிற்கு எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் ரஃபிக் அகமது வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில பொதுச்செயலாளர் நெல்லை முபாரக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் ஆண்டறிக்கையையும், மாநில பொருளாளர் அம்ஜத் பாஷா கட்சியின் நிதி அறிக்கையையும் தாக்கல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் அடுத்த மூன்றாண்டுக்கான புதிய மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலை கட்சியின் தேர்தல் அதிகாரியும் எஸ்.டி.பி.ஐ தேசிய செயற்குழு உறுப்பினருமான டாக்டர் ஆவாத் ஷெரீப் தனது மேற்பார்வையில் நடத்தினார். மேலும் கர்நாடக மாநில செயற்குழு உறுப்பினர் ஜாவித் ஆஸம் துணை தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார். நடைபெற்ற தேர்தலின் முடிவில் புதிய மாநில செயற்குழு உறுப்பினர்களும், தேசிய பொதுக்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து புதிய மாநில நிர்வாகிகளுக்கான தேர்தலும் நடைபெற்றது.
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய மாநில நிர்வாகிகளை இன்று (மே-14) தேனாம்பேட்டை காமராஜ் அரங்கில் வைத்து நடைபெற்ற பொதுக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வில் காலை 11 மணியளவில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய தலைவர் எ.சயீத் அறிவிப்பு செய்தார்.
அதன்படி எஸ்.டி.பி.ஐ கட்சியின் புதிய தமிழ் மாநில தலைவராக கே.கே.எஸ்.எம்.தெஹலான் பாகவி, பொதுச்செயலாளர்களாக நிஜாம் முகைதீன், அப்துல் ஹமீது, துணைத் தலைவர்களாக நெல்லை முபாரக், அம்ஜத் பாஷா, பொருளாளராக எஸ்.எம்.ரஃபிக் அகமது, செயலாளர்களாக அமீர் ஹம்சா, உஸ்மான்கான், ரத்தினம், அப்துல் சத்தார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் அபுபக்கர் சித்திக், ஹசன் பாபு, தஞ்சை ஃபாரூக், தவுலதியா, சாம்வேல் பால், மதுரை நஜ்மா, காஞ்சி பிலால், அபு தாஹிர், தாஜூதீன் ஆகியோர் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த பொதுக்குழு நிகழ்ச்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக