வெள்ளி, மார்ச் 27, 2015

அமெரிக்காவில் 5 மாடிக்கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

அமெரிக்காவின் மன்ஹேட்டன் நகரில் ஐந்து அடுக்கு மாடி கட்டிடத்தில் பயங்கர சத்தத்துடன் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. அதற்கு அருகே உள்ள மற்றொரு அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது.

மன்ஹேட்டன் நகரின், நியூயார்க் பல்கலைகழகத்திற்கு அருகேயுள்ள ஈஸ்ட் வில்லேஜில், உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் 3.17 மணிக்கு, தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறைக்கு அழைப்பு வந்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த சுமார் 250 வீரர்கள், கடுமையாக பரவி வந்த தீயை தீயணைப்பு வண்டியின் லிப்டில் ஏறி தண்ணீரை பீய்ச்சியடித்து கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வருகின்றனர்.

ஈஸ்ட் வில்லெஜின் செகண்ட் அவென்யூவில் உள்ள 121 மற்றும் 123 என்ற இரண்டு அடுக்கு மாடிக் கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 123 என்ற அடுக்கு மாடிக் கட்டிடம் இடிந்தது. பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ள 121 என்ற கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் இருக்கிறது.  இந்த விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும், அதில் 3 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் சட்ட அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

தீ விபத்து ஏற்படுவதற்கு முன் கேஸ் வெடித்தது போன்ற பயங்கர சத்தம் கேட்டதாகவும், தீ அருகிலுள்ள கட்டிடத்திற்கும் பரவியதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளது. 

முதற்கட்ட விசாரணையில் கிடைத்துள்ள தகவலின் படி, செகண்ட் அவென்யூவில் வேலை பார்த்த ஊழியர்கள் கட்டிடத்திற்குச் செல்லும் மெயின் கேஸ் லைனை தெரியாமல் உடைத்து விட்டதாகவும் இதன் காரணமாக கேஸ் லைன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக