வியாழன், ஏப்ரல் 17, 2014

நல்ல வேட்பாளரை தேர்வு செய்ய தலைமைத்தேர்தல் அதிகாரி பிரசாரம்

பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்காளர்களும் ஓட்டுபோட வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரத்தில் தேர்தல் கமிஷன் ஈடுபட்டு வருகிறது.

ஓட்டுப்பதிவு சதவீதத்தை அதிகமாக்குவதற்காக தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் பல்வேறு துறைகளில் உள்ள பிரபலங்களை பயன்படுத்தி வருகிறார். அந்த வகையில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், நடிகர் கமல்ஹாசன், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன், நடிகைகள் கவுதமி, ரோகினி, விளையாட்டு வீரர்கள் விஸ்வநாதன் ஆனந்த், தினேஷ் கார்த்திக், தீபிகா பலிக்கல், சாய்னா நேவால், டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் உட்பட பல பிரபலங்கள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. மனச்சாட்சியுடனும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்பதே விழிப்புணர்வு பிரசாரத்தின் சாராம்சமாக உள்ளது.

அந்த வரிசையில் தற்போது பிரவீன்குமாரும் பிரசாரத்தில் குதித்துள்ளார். தேர்தல் விழிப்புணர்வு பிரசாரத்தில் தலைமைத்தேர்தல் அதிகாரியே ஈடுபடுவது, தமிழகத்தில் முதன்முறை என்று கருதப்படுகிறது. பொதுவாக நகைச்சுவை உணர்வோடு பேசும் அவர், தனது விழிப்புணர்வு பிரசாரத்திலும் அதை வெளிப்படுத்தியுள்ளார்.

கத்தரிக்காயை வாங்கும்போது கவனமாக இருக்கும் நாம், வேட்பாளரை தேர்வு செய்யும்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆங்கிலம் மற்றும் தமிழில் அவர் பிரசார உரையாற்றி இருக்கிறார். அவரது தேர்தல் விழிப்புணர்வு பிரசார உரை வருமாறு:–

24–ந்தேதி நடக்கும் பாராளுமன்றத்தேர்தலில் அனைவரும் கண்டிப்பாக ஓட்டு போடுங்கள். லஞ்சம் வாங்காமல் ஓட்டு போடுங்கள். கடையில் கத்தரிக்காய் வாங்கும்போது நல்ல கத்தரிக்காயை பார்த்து வாங்குகிறோம். ஆனால் தேர்தல் வரும்போது யார் லஞ்சம் கொடுக்கிறார்கள் என்று பார்த்து ஓட்டு போடுவது சரியல்ல.

ஐந்து ஆண்டுகள் நமக்கு யார் நல்லது செய்வார் என்பதை பார்த்து மனச்சாட்சியோடு ஓட்டு போடுங்கள். யாரும் பிடிக்கவில்லை என்றால் நோட்டாவில் ஓட்டு போடுங்கள். ஆனால் கண்டிப்பாக ஓட்டு போடுங்கள். 

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

இதுபற்றி நிருபர்களிடம் பேசிய பிரவீன்குமார் கூறியதாவது:–

பிரசாரத்தில் நான் கூறியிருப்பது எனது கருத்தை அல்ல; அது வாக்காளர்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோளாகும். கடந்த தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குப்பதிவு குறைவாக இருந்த 10 வாக்குச்சாவடிகளை தேர்வு செய்ய கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. என்ன காரணத்தால் கடந்த முறை அங்கு வாக்குப்பதிவு குறைந்தது என்பதைக் கண்டறிந்து, அங்குள்ள மக்களிடம் சென்று பேசி, அந்த இடங்களில் அதிக வாக்குப்பதிவு நடக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கலெக்டர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

வாக்குப்பதிவுக்காக வாக்காளர்களை குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் நினைவுபடுத்தும் புதிய முறையை தமிழகத்தில் முதன்முறையை இந்தத்தேர்தலில் அறிமுகம் செய்ய இருக்கிறோம். எங்களிடம் 60 லட்சம் வாக்காளர்களின் செல்போன் எண் உள்ளது. வாக்குப்பதிவு தினத்துக்கு முந்தைய நாள் (23–ந்தேதி) ஒரு எஸ்.எம்.எஸ்.ஐ வாக்காளர்களுக்கு அனுப்பி வைப்போம். நாளை வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. மறந்துவிடாதீர்கள், கண்டிப்பாக ஓட்டு போடுங்கள் என்று அதில் கூறப்பட்டு இருக்கும். 

மறுநாளில் காலை 10 மணிக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்புவோம். அதில் ஓட்டு போட்டுவிட்டீர்களா? இல்லாவிட்டால் வாக்குச்சாவடிக்கு உடனே சென்று வாக்களியுங்கள் என்று அதில் கூறப்பட்டு இருக்கும்.

பின்னர் பிற்பகல் 4 மணிக்கு மற்றொரு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும். அதில், வாக்களித்துவிட்டீர்களா? வாக்குப்பதிவு முடிவதற்கு இன்னும் 2 மணிநேரம்தான் உள்ளது என்று கூறப்பட்டு இருக்கும். இந்த எஸ்.எம்.எஸ்.களை பி.எஸ்.என்.எல். மூலம் ஒன்றுக்கு 10 பைசா என்ற வீதத்தில் அனுப்புவோம்.

வாக்காளர் யாரும் சினிமா தியேட்டருக்கு சென்றுவிட்டாலும், அங்கு திரையின் அடிப்பகுதியில் வாக்களிப்பதை நினைவுபடுத்தும் வாசகம் வெளியிடப்பட்டுக் கொண்டே இருக்கும். கடந்த முறை எப்.எம். ரேடியோ மூலமாக நினைவுபடுத்தினோம். 73 சதவீதம் வாக்குப்பதிவு நடந்தது. இந்தமுறையும் எப்.எம். மூலமாகவும், வாக்களிப்பதை நினைவுபடுத்துவோம். செய்தி ஸ்க்ரோல் மூலம் வாக்காளர்களை ஓட்டுபோடுவதை நினைவுபடுத்தும்படி டி.வி. நிறுவனங்களைக் கேட்டுக்கொள்கிறேன். 

வாக்குப்பதிவு சதவீதம் குறித்த இலக்கு எதையும் நாங்கள் நிர்ணயிக்கவில்லை. ஆனால் 100 சதவீத வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும் என்பது எனது விருப்பம் மட்டுமல்ல எனது வேண்டுகோளும்கூட. தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் செய்துள்ள பிரபலங்களின் புகைப்படங்கள் மற்றும் வாசகங்களைக் கொண்ட ஸ்டிக்கர்கள், அரசு பஸ்களின் ஜன்னல் கண்ணாடியின் மேற்புறத்தில் ஒட்டப்படும். இதற்காக போக்குவரத்துத் துறைக்கு 20 ஆயிரம் ஸ்டிக்கர்களை அனுப்பி வைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் தனது தேர்தல் விழிப்புணர்வு பிரசார சி.டி.யை பிரவீன்குமார் வெளியிட்டார். அதை இணை தலைமைத்தேர்தல் அதிகாரி சிவஞானம் பெற்றுக்கொண்டார். தேர்தல் விழிப்புணர்வு பிரசாரத்தை விஸ்வநாதன் ஆனந்த் செய்வது பெருமை அளிப்பதாக பிரவீன்குமார் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக