திங்கள், ஜூலை 29, 2013

இந்து முன்னணி பார்ப்பனர்கள் கூறுவது போல திப்பு சுல்தான் தேசத்துரோகியே!!

"உங்களுக்கு இடையில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு கொள்வதும் உங்களின் தாய், சகோதரிகளை இவ்விதம் நடப்பதற்கு சம்மதிப்பதும் பூர்வ ஆச்சாரமாக இருந்து வருகின்ற நிலையில், நீங்கள் அனைவரும் விபச்சாரத்தில் பிறந்தவர்களும் ஆண், பெண் உறவு விஷயத்தில் நிலத்தில் மேய்ந்து நடக்கும் கால்நடைகளை விட கீழான வெட்கமற்றவர்களுமாகின்றீர்கள். இவ்விதமுள்ள பாவகரமான துர் ஆச்சாரங்களை விட்டொழித்துச் சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்வதற்கு நாம் இதன் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றோம்"


நாகரீகம் வளர்வதற்கு முந்தைய கற்காலத்தில், மனிதன் கால்நடைகளைப் போன்று வாழ்ந்தான் என்பதை வரலாற்றுப் பாடங்களில் படித்துள்ளோம். அத்தகைய காலகட்டங்களில் அச்சமூகத்திற்குத் தலைமையேற்ற ஏதோ ஒரு நல்ல பண்பாட்டுப் பழக்கவழக்கங்களைக் கொண்ட மன்னன் மேற்கண்டக் கட்டளையை இட்டுள்ளான் என நினைத்தால்.... அது தவறு!

இது நாகரீகம் வளர்ந்து உச்சியை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்த 17 - 18 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு மன்னன் பிறப்பித்தக் கட்டளையாகும். 17 - 18 ஆம் நூற்றாண்டிலும் மக்கள் கால்நடைகளைப் போன்று காணும் ஆடவர், பெண்டிருடன் உறவு வைத்து நடந்தனர் என்பதை நம்பமுடியவில்லை தானே?. ஆனால் அது தான் உண்மை!

சரி, யார் இந்த மன்னன்?. எங்கு, எதற்காக, எந்தத் தருணத்தில் இந்தக் கட்டளையை அந்த மன்னன் பிறப்பித்தான்? என்பதை அறிய ஆவலாக உள்ளதா?.

இவ்வாறு கட்டளையிட்டது, இந்தியாவைப் பலகூறாகப் பிரித்து ஆண்டு கொண்டிருந்த சேர, சோழ, பாண்டிய, பல்லவ, இராஜபுத்திர இன்னபிற மன்னர்களில் எவராவது ஒருவராக இருப்பார் எனக் கருதுவீர்களானால்....... அதுவும் தவறானதே.

இவ்வாறான அதிரடி உத்தரவைப் பிறப்பித்தவர் வேறு யாரும் அல்ல - இந்தியாவை அடக்கியாண்டுக் கொண்டிருந்தப் பரங்கியர்களுக்குச் சிம்மச்சொப்பனமாகத் திகழ்ந்து வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க வீரத்துடன் வாழ்ந்த தீரர் திப்பு சுல்தானே தான்.

கேரள நம்பூதிரிகளின் அக்ரஹார அலங்கோல ஆச்சாரங்களை ஒரே கட்டளையின் மூலம் தகர்த்தெறிந்தத் திப்புவின் இந்தக் கட்டளைக்கான காரணம் என்ன? தனது ஆட்சிபரப்பை விரிவாக்கும் எண்ணத்தில் கேரளத்தில் அடியெடுத்து வைத்தத் திப்புவின் வாயிலிருந்து வெளியான இந்தக் கட்டளைக்கும் அன்றையக் கேரள அரசவைக் கூட்டத்தையும் அடிதட்டு மக்களையும் ஒருங்கே கைகளில் அடக்கி ஆட்சி செய்துகொண்டிருந்த நம்பூதிரிகளுக்கும் என்ன சம்பந்தம்?

திப்புவைக் குறித்துப் பேசப்படும் வரலாற்று நூல்களில் பெரும்பாலானவைகளிலெல்லாம் காணப்படும் பிரசித்தமான இந்தத் திப்புவின் கட்டளைக்குக் காரணம் தான் என்ன?. அதனை அறிந்துக் கொள்ள வேண்டுமெனில், திப்பு கேரளத்தில் கால்பதித்த வேளை கேரள மக்கள் எந்நிலையில் வாழ்ந்து வந்தனர் என்பதைக் குறித்துத் தெரிந்துக் கொள்ள வேண்டும். 

சிறிது வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்ப்போம்....

விஜயநகர சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குப் பின் மைசூரில் பிரபல சக்தியாக வளர்ந்து வந்த ஹைதர் அலியின் படை, அக்காலத்தில் மலபார் என அறியப்பட்டிருந்தக் கேரளத்தினுள் நுழைந்துத் தெற்கு மலபாரை ஆட்சி செய்துக் கொண்டிருந்த கேரள வரலாற்றில் மிகப்பெரிய மஹாராஜாவாக அறியப்பட்டிருந்த சாமிரி ராஜாவை அடக்கி அடிபணிய வைத்ததோடு ஹைதர் அலியின் மைசூர் ஆட்சி மலபாருக்கும் விரிவடைந்தது. அதனைத் தொடர்ந்து 1773 ல் மைசூர் ஆட்சியின் மலபார் கவர்னராக ச்ரீநிவாச ராவ் பதவியேற்றது முதல் 1790 வரையுள்ள 16 ஆண்டு காலம் மலபார், மைசூர் ஆட்சியின் கீழ் இருந்தது.

இதில் 9 ஆண்டுகள் ஹைதர் அலியும் 7 ஆண்டுகள் திப்புவும் ஆட்சி செலுத்தினர். மிகக் குறுகிய இந்தக் காலயளவில் மலபார் மக்களின் வாழ்க்கை முறையில் ஒரு புரட்சியையே ஏற்படுத்த திப்பு முனைந்திருந்தாலும் இஸ்லாமிய பெயர் கொண்ட ஒரு நவீனத்துவ முகம் கொண்டிருந்ததால் அவரின் சீர்திருத்தங்கள் மூட பழக்க வழக்கங்களிலும் கீழ்த்தர ஆச்சாரமுறைகளிலும் கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்திருந்த அச்சமூகத்தில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்தாமல் போனது.

அக்காலகட்டத்தில், சமூகத்தின் எல்லாப் பகுதி மக்களையும் தம் கைகளில் அடக்கி வைத்திருந்த நம்பூதிரிமார்கள், (பிராமணர்கள் ) தாழ்த்தப்பட்ட பெண்களையும் ஆண்களையும் அடக்கியாண்டு மோசம் செய்து கொண்டிருந்தனர். தங்களைத் தெய்வத்தின் பிரதிநிதிகளாகவும் பூஜிக்கப்பட வேண்டியவர்களாகவும் அவர்கள் மனதில் நினைத்துக் கொண்டிருந்தனர். அந்த எண்ணத்தைச் சமூகத்தில் விதைப்பதிலும் அவர்கள் வெற்றி பெற்றிருந்தனர். 

"அவரின் - நம்பூதிரியின் - உடல் பவித்ரமானதாகும். சலனம் தெய்வீகக் காட்சியாகும். அவர் உண்டு மீந்த உணவு அமிர்தமாகும். மனித உயிர்களில் ஏற்றவும் உயர்ந்த நிலையில் பூஜிக்கப்பட வேண்டியவர்களாவர்; பூமியில் தெய்வத்தின் பிரதிநிதிகளாவர். 

இக்காரணங்களால் அவர்களுடன் எந்தப் பெண்ணிற்கு உறவு கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெறுகின்றதோ அவள் பாக்கியம் பெற்றவள்" என்று அக்காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே நம்பிக்கை ஊட்டப்பட்டிருந்தது.

"நம்பூதிரியை மகிழ்ச்சியடைய வைப்பது தெய்வத்தைத் திருப்திபடுத்துவதற்குச் சமமானதாகும். நாயர் பெண்களுடன் சயனிப்பதற்கான உரிமை கடவுள் அவர்களுக்கு வழங்கியதாகும். அதனை நிராகரிப்பவர்கள் - எதிர்ப்பவர்கள் – தெய்வக் குற்றத்திற்கு ஆளாவர்". 

இது போன்ற மூடநம்பிக்கைகள் சமூகத்தில் மிகுந்த நம்பிக்கையுடன் பரவியிருந்தக் காரணத்தால், அழகான பெண் குழந்தைகளைப் பெற்றிருந்த நாயர் குடும்பங்கள் தங்கள் பெண்களை ஏதாவது ஒரு நம்பூதிரியுடன் சயனிக்க வைக்க மனப்பூர்வமாக விரும்பியிருந்தனர்.

"சூத்திரப் பெண்கள் பத்தினித்தன்மையைப் பேண வேண்டிய அவசியம் இல்லை எனவும் நம்பூதிரிகளின் ஆசாபாசங்களை நிறைவேற்றி வைக்க சுயம் சமர்ப்பிக்கப்பட்டவர்கள் என்றும் இது கேரளத்திற்கு ஆச்சாரங்களைப் பரிசளித்தப் பரசுராமன் போட்டக் கட்டளையாகும் என ஆச்சாரங்களைக் கற்பித்துப் போற்றும் பிராமணர்கள் தெரிவிக்கின்றனர்". 

(சி. அச்சுதமேனோன் - கொச்சின் மாநில கையேடு - 1910. பக்கம் 193. c. achchutha menon - Cochin State Manual - 1910. Page No: 193.) 

நம்பூதிரி ஆண்களுக்கு உடன்படாத தாழ்த்தப்பட்டப் பெண்களை வழிகெட்டவர்களாக நினைத்து மக்கள் அவர்களை ஒதுக்கினர். அவ்வாறான வழிகெட்டப் பெண்களைக் கொன்றுவிடும் அளவிற்கு அன்று நம்பூதிரிமார்களுக்கு அதிகாரம் இருந்தது. கார்த்திகப்பள்ளியிலுள்ள தெருக்களில் காணப்பட்ட விளம்பரங்கள் இவற்றைச் சரியென எடுத்தியம்புகின்றன.

அங்கு காணப்பட்ட ஒரு விளம்பரம் இவ்வாறு கூறுகின்றது: "நம்முடைய நாட்டில் சொந்தம் ஜாதியில் உள்ள ஆண்களுக்கோ, உயர் ஜாதியில் உள்ள ஆண்களுக்கோ வழங்கி வராத வழிகெட்டப் பெண்கள் உண்டு எனில் அவர்களை உடனடியாக கொன்று விட வேண்டும்" (கேரள வரலாற்றின் இருண்ட பக்கங்கள், இளம்குளம் குஞ்ஞன் பிள்ளை - பக்கம் 147).

நம்பூதிரிமார்கள் கீழ்ஜாதி பெண்களைக் கற்பழித்தால் கூட தண்டிக்கப்படுபவர்கள் அந்தக் கீழ்ஜாதி பெண்களாகத் தான் இருப்பர். 

"நம்பூதிரிகள் கீழ்ஜாதி பெண்டிர் மீது வன்கொடுமை செலுத்தினால் அந்த நபரின் கண்களைக் குத்த வேண்டும்(கண்கள் சிறிது காலத்திற்குக் கட்டப்பட வேண்டும் என்பது தான் சாதாரணமாக நடைமுறைபடுத்தப்பட்டிருந்தது). 

அந்தக் கீழ்ஜாதி பெண்ணையும் அவள் குடும்பத்தையும் கொன்றொழிக்கவோ அல்லது முஸ்லிம்களுக்கு விற்றுவிடவோ செய்ய வேண்டும். அப்பெண்ணின் அழகு நம்பூதிரியைப் பாதிப்படைய வைத்ததே அவளும் அவள் குடும்பத்தினரும் செய்த தவறு" (கேரளம், ஃப்ரான்ஸிஸ் புக்கானன் - பக்கம் 75).

கீழ்ஜாதி பெண்டிர் மீது உயர்சாதியினரால் நிகழ்த்தப்பட்ட உச்சக்கட்ட அடக்கு முறையாகும் இது. 

நம்பூதிரிகளின் திருமணமுறை இதனைவிட விசித்திரமானதாகும். 

நம்பூதிரிகளில் மூத்த சகோதரன் மட்டுமே சொந்தம் ஜாதியில் திருமணம் செய்ய வேன்டும். மற்றவர்கள் நாயர் பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டும். மூத்த சகோதரனுக்கு மட்டுமே திருமணம் செய்வது அனுமதிக்கப்பட்டது என சங்கரஸ்மிருதியும் கட்டளையிடுகின்றது.

"ஏக ஏவ க்ருஹம் கச்சேத் - ஜ்யேஷ்ட புத்ரோன சேரெ:
ஃப்ராத்ருஷ்வேகய் புத்ரிண(2-2-16)

இவ்வாறு மூத்த மகனுக்கு மட்டும் திருமணத்தை விதியாக்கி விட்டு மற்றவர்களின் விஷயத்தில் சங்கரஸ்மிருதி மௌனம் கடைபிடிக்கின்றது" (கேரள பிராமண வாழ்க்கையில், ஸ்மிருதி... - டாக்டர். பி.வி. ராமன்குட்டி).

இவ்வாறான நடைமுறைக்கு ஒவ்வாத விதிகளைக் கடுமையாகப் பேணியதால் நம்பூதிரிகளின் சமுதாயத்தில் உள்ள பெண்களும் பலவகைகளில் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக நம்பூதிரி சமுதாயத்தில் விளைந்த மோசமான விளைவுகளை வரலாற்றாசிரியர்கள் பலர் ஆவணப் படுத்தியுள்ளனர்.

"நம்பூதிரி வீட்டில் மூத்த மகனுக்கு மட்டுமே திருமணம் செய்வதற்கு அனுமதி உண்டு. இந்தச் சௌகரியத்தை உபயோகப்படுத்தி வீட்டின் மூத்தமகன் குறைந்தது மூன்று திருமணமாவது செய்துக் கொண்டார். பல வேளைகளிலும் வரனாக இருந்த மூத்த மகன் முடமானவனாக இருப்பார் அல்லது மத்திய வயது கடந்தவனாக இருப்பார். இவ்விதம் ஒருவருவருக்கு பதினொன்றும் பதிமூன்றும் வயதுடைய ஒன்றிற்கு மேற்பட்ட மனைவிகள் இருப்பர்". (கண்ணீரும் கனவும், வி.டி. பட்டதிரிபாடு - பக்கம் 120).

"மூத்த சகோதரன் மட்டும் சொந்தம் ஜாதியில் திருமணம் செய்வதும் மற்ற சகோதரர்கள் நாயர் பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வதன் மூலம் திருமண வயதைக் கடந்த மிக அதிகமான கன்னிகள் நம்பூதிரி சமுதாயத்தில் இருப்பர். இதே நேரம் வீட்டில் மூத்த சகோதரன் பல மனைவிமார்களுடனும் இருப்பார்" (19 ஆம் நூற்றாண்டில் கேரளம், பி. பாஸ்கரன் உண்ணி - பக்கம் 120).

"இவ்விதம் நம்பூதிரி பிரம்மச்சாரிகள், சூத்திர பெண்டிருடன் சோமபானங்களின் மத்தியில் சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் பொழுது, நம்பூதிரி கன்னிப் பெண்கள் கர்ப்பகிருகத்தின் உள்பக்கம் தனிமையில் அடைக்கப்பட்டிருப்பர். 

இவர்கள் மிகக் கடுமையான பாதுகாவல்களுடன் கண்காணிக்கப்படுவர். பலர் திருமணம் செய்ய முடியாமல்(வரன் கிடைக்காமல்) வாழ்ந்துக் கன்னிகளாகவே இறக்கவும் செய்வர்" (கொச்சி நாடின் வரலாறு, கெ.பி. பத்மநாப மேனோன் - பக்கம் 896)

"அப்பன்மார்கள் வேற்று ஜாதி உறவைத் தேடிச் சென்றபோது நம்பூதிரிப் பெண் குட்டிகள் இல்லங்களில் இருள்படர்ந்த அறை மூலைகளில் இருந்து நரைத்தனர். 1885இல் மலபாரில் மட்டும் 1017 இல்லங்கள் இருந்ததாக லோகன் ஆதாரப்படுத்தியுள்ளார். இக்காலகட்டத்தில் கேரளத்தில் மொத்தமாக 1500 இல்லங்களில் சுமார் 8000 க்கும் மேற்பட்ட வாழ்க்கை கிடைக்காத கன்னிகள் நம்பூதிரி சமுதாயத்தில் இருந்ததாக கணிக்கப்பட்டிருந்தது" (ஜாதிப் பாகுபாடும் கேரள வரலாறும் - பி.கே. பாலகிருஷ்ணன், பக்கம்: 159).

இதற்கும் மேலாக சிறு வயதுள்ள கன்னிப் பெண்களை வயதான நம்பூதிரிகள் திருமணம் புரிவதும் சர்வசாதாரணமாக நடைமுறையில் இருந்தது. அதன் மூலம் சிறுவயது விதவைகள் சமூகத்தில் அதிகரிக்க ஆரம்பித்தனர். (வாட்டர் எனும் திரைபடத்தில் தீபா மேத்தா இதனை மையமாக வைத்து, உயர்சாதிப் பிராமணச் சமூகத்தில் முன்பு நடந்த இத்தகைய அநியாயங்களால் விதவைகளாக்கப்பட்ட பால பருவப் பெண் குழந்தைகளின் மோசமான நிலையைத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டியதாலேயே சங்கபரிவார அமைப்புகள் அப்படத்தைத் திரையிட விடாமல் அட்டூழியம் புரிந்தன). 

பல நம்பூதிரிப் பெண்களுக்கும் திருமணம் புரியும் அதிர்ஷ்டம் கிடைத்திருக்கவில்லை. பல வேளைகளிலும் பெண்கள் கன்னிகளாகவே மரணமடைய வேண்்டிய துர்பாக்கிய நிலை இருந்தது.

"1912இன் கணக்குப்படி 1000 நம்பூதிரிமார்களில் 516 பேர் திருமணம் புரிந்தவரும் 457 பேர் திருமணம் செய்யாதவரும் ஆவர். பெண்களில் 1000 க்கு 393 பேர் திருமணம் புரிந்தவர்களும் 387 பேர் திருமணம் புரியாதவர்களும் 230 பேர் விதவைகளுமாவர்" (கேரள நம்பூதிரிப் பெண்களின் கடந்த கால வரலாறும் நிகழ்கால நிலைமையும் - டாக்டர். கெ.பி. ஸ்ரீதேவி).

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, நம்பூதிரிகளுக்கிடையில் நடைமுறையிலிருந்த வரதட்சணை பழக்கவழக்கம் பெண்களுக்கு உருவாக்கிய பிரச்சனைகள் ஏராளம்.

"இரண்டு, மூன்று திருமணங்கள் புரிய நம்பூதிரிகளுக்கு, அச்சமூகத்துப் பெண்களுக்கான வரதட்சணைக் கொடுமை ஒரு முக்கியத் தூண்டுகோலாக இருந்தது முதல் விஷயமாகும். 

இரண்டாவது இதனை விடக் கொடுமையானது: நம்பூதிரிகளில் அனைவரும் செல்வந்தர்கள் இல்லை. பொருளாதார - சமூக தலைமைகளைத் தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருந்த ஒரு பகுதி மட்டுமே தனவந்தர்களாக இருந்தனர். வறுமையில் வாடியவர்களும் அச்சமூகத்தில் நிறைந்திருந்தனர். 

வரதட்சணை கொடுக்கப் பணம் இல்லாமல் இருக்கும் பொழுது, உதவ ஆளில்லாத தந்தைகள் வயதிற்கு வந்தப் பெண்களைக் கர்நாடகா, சிர்சியி, சித்தாப்பூர் அல்லது கோயம்புத்தூர் போன்ற ஏதாவது இடத்திற்குக் கொண்டு சென்று ஏதாவது ஒரு பிராமணனுக்குத் திருமணம் செய்து கொடுப்பர்". ("கேரள நம்பூதிரிப் பெண்களின் கடந்தகால வரலாறும் நடப்புக் காலமும்" - டாக்டர். கெ.பி.ஸ்ரீதேவி)

நம்பூதிரிகளிடையே நடைமுறையிலிருந்து இத்தகையத் திருமண நிகழ்வுகளில் பெண்கள் வஞ்சிக்கப்படுவது இயல்பாகிப் போயிருந்தது. வி.டி. பட்டத்திரிபாடின் "பதில் கிடைக்காத கேள்வி" என்ற சிறுகதை, இதுபோன்று வஞ்சிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கொடுமையான அனுபவங்களைக் கூறுகிறது. 

இந்தியாவில் பல பாகங்களிலும் சர்வசாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருந்ததன் ஓர் அங்கமாகக் கேரளத்திலும் நம்பூதிரிகளிடையே பெண்களுக்கு இழைக்கப்பட்டக் கொடுமைகளுக்குக் குறைவில்லை.

பிராமணர்கள் பெண்களைப் போகப்பொருட்களாக மட்டுமே நினைத்துச் செயல் பட்டதன் விளைவே இது. சமீபத்தில் தீபாமேத்தா தயாரித்து வெளியான "வாட்டர்" என்ற திரைப்படமும் பெண் சமூகத்திற்கு எதிராக பிராமண சமூகம் கையாண்டிருந்த கொடூரமான பழக்கவழக்கங்களையும் அநியாயங்களையும் காட்சிக்குக் காட்சி வெளிப்படுத்துவதாக அமைந்தது. இதனாலேயே சங் பரிவாரத்தின் கடுமையான எதிர்ப்புக்கும் அத்திரைப்படம் இலக்கானது.

இதுபோன்ற அனைத்துத் சுரண்டலுக்கும் இலக்காகி, வீடுகளின் உள்தளங்களில் ஒதுங்கி மறைந்து வாழவேண்டிய நிலைக்கு உள்ளாக்கப் பட்ட பெண்கள், கடுமையான உடற்பசியால் வாடி, பலவேளைகளிலும் வழிகெட்டுப் போக வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருந்தனர். அவ்வாறு சோரம் போவது நம்பூதிரி ஆண்களுடனாக இருந்தாலும்கூட, அவர்கள் ஜாதிவிலக்கிற்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர். அவ்விதம் ஜாதிவிலக்கிற்கு உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு, கோழிக்கோடு சேட்டுகளிடம் தஞ்சமடைவது அல்லது தெரு விபச்சாரிகளாவது ஆகிய இரண்டு மட்டுமே வாழ்க்கைக்கான வழிகளாக இருந்தன. 

ஒரு பக்கம் நம்பூதிரிப் பெண்கள், நம்பூதிரிகளிடையே இருந்த மோசமான ஆச்சாரங்களால் கடுமையான உடல்-மன கொடுமைகளுக்கு இரையாகிக் கொண்டிருந்தபோது, மறுபக்கம் நாயர் பெண்களுக்கான மணவாழ்க்கை என்பது கட்டற்ற சுதந்திரத்தை அனுபவிக்கும் 'புதுமைப் பெண்'களாக அவர்களை மாற்றிப் போட்டிருந்தது.

நாயர் பெண்கள் வயதிற்கு வருவதற்கு முன் ஒன்பது-பத்து வயதிருக்கும் பொழுது "கெட்டு கல்யாணம்" என்ற ஒரு திருமணச் சடங்கு நடைபெறும். 

சில வேளைகளில் ஒரு ஆணே பல பெண்களுக்குத் தாலி கட்டுவார். அவ்வாறு தாலிகட்டும் ஆணுக்கு, தாலி கட்டிய பெண்ணுடன் தொடர்பு கொள்வதற்கு அனுமதி கிடையாது. 

'கட்டிய கணவனை'த் தவிர்த்து உயர்ஜாதியிலோ அல்லது அதே ஜாதியிலோ உள்ள வேறு எந்த ஆணுடனும் அப்பெண் இணைந்து கொள்ளலாம். 

ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களை உடைய நாயர் பெண்கள், அதனை மோசமான பழக்கமாகக் கருதவில்லை. 

மாறாக, அதிகமான பிராமணர்களுடைய, வழிபோக்கர்களுடைய உறவை நாயர் பெண்கள் மிகப்பெரும் கொடுப்பினையாக - பெருமையாகக் கருதியிருந்தனர். 

அத்தகைய தொடர்புகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுத்திருந்தது அப்பெண்களைப் பெற்ற தாய்மார்கள் தாம் என்பது அதிர்ச்சியின் உச்சகட்டம்!

"கெட்டு கல்யாணம்" என்ற சடங்கு முடிந்த உடனேயே தனது மகளுடன் தொடர்பு வைத்துக் கொள்ளப் பலருக்கும் பெண்ணைப் பெற்ற தாயே அழைப்பு விடுவாள். அதில் நம்பூதிரிகளுக்கு முதல் நிலை முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. 

வீட்டிற்கு வெளியே வாள் வைக்கப்பட்டிருப்பது காணப்பட்டால், உள்ளே வேறு நபர் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டு, பிற கணவர்களும் காதலர்களும் திரும்பிச் சென்றுவிட வேண்டும் என்பது சட்டமாக இருந்தது. 

நாயர் பெண்களுக்குப் பல கணவர்மார்கள் இருப்பதைச் சமூகம் அங்கீகரித்திருந்தது. அது அவர்களது மதச் சட்டமாகக் கருதப் பட்டதால் அதனைக் குறித்து கேள்வி கேட்பது தடை செய்யப்பட்டிருந்தது. 

1800-1801இல் மலபாரில் பிரயாணம் செய்து அங்குள்ள நிலைமைகளைச் சேகரித்த வரலாற்றாசிரியர் புக்கானல் இவ்விஷயங்களைத் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இதனைக் குறித்து ஸைனுத்தீன் மக்தூமின் விளக்கத்தை இங்குச் சுட்டுவது பொருத்தமாக இருக்கும்:

"ஒவ்வொரு பெண்ணிற்கும் தொடர்பு வைத்துக் கொள்ள இரண்டோ நான்கோ கணவர்கள் இருக்கின்றனர். அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளாமல் மிகுந்த இணக்கத்துடன் வாழ்கின்றனர். ஒரு முஸ்லிம் ஒன்றுக்கும் மேற்பட்ட தன் தனது மனைவிகளிடத்தில் நேரத்தைப் பங்கிட்டுக் கொள்ளும் ரீதியில், நாயர் மனைவியானவள் தனது சௌகரியத்திற்கு ஏற்ப கணவர்களை மற்றி மாற்றி உபயோகப்படுத்துகின்றாள்". 

"மேற்கண்ட இந்தத் தொடர்பில் மனைவி கர்ப்பம் தரித்தால் குழந்தையின் தகப்பன் யார் என்பதை மனைவி நிச்சயிப்பாள். தகப்பனாக சுட்டிக் காட்டப்பட்டவன் குழந்தைக்குத் தேவையானவைகளைச் செய்துக் கொடுத்துப் பாதுகாப்பான்; கல்வியளிப்பான். ஆனால், அவனது சொத்துகளுக்கு இதுபோன்ற குழந்தைகள் வாரிசுகள் ஆக மாட்டார்" (மலபார் மேனுவல் - வில்லியம் லோகன், பக்கம் 139).

மேல்ஜாதி நம்பூதிரிகளால் விதிக்கப்பட்டக் கடுமையான சடங்குகளால், ஒரே நேரத்தில் பல கணவர்களைப் பெற்று ஆண்களுடனான தொடர்பில் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் கட்டவிழ்த்து விடப்பட்ட நாயர் பெண்களால், சொந்தத் தந்தையின் பெயர் அறியாச் சமுதாயமாக நாயர் சமுதாயம் மாறியது. இதனை வரலாற்றாசிரியர் புக்கன்னான் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்: 

"விசித்திரமான இச்சடங்குகளின் பலனாக ஒரு நாயருக்குக்கூட அவரின் சொந்தத் தந்தை யார் என்பது தெரியாமல் இருந்தது. எல்லோரும் அவரவரின் சகோதரி மகன்களை வாரிசுகளாகக் கருதி வந்தனர்" - கேரளம், பிரான்சிஸ் புக்கன்னான், பக்கம் 69-70. 

குடும்பக் கட்டமைப்பினைச் சின்னாபின்னமாக்கும் மற்றொரு கேவலமான பழக்கமும் நாயர் சமூகத்தில் நடைமுறையில் இருந்தது. 

அது, உடன்பிறந்த இரு சகோதரர்கள் (அண்ணன், தம்பி) ஒரே பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்ளும் சடங்காகும். 

வரலாற்றாசிரியர் இளம்குளம் குஞ்சன்பிள்ளை இச்சடங்கைக் குறித்துக் கீழ்கண்டவாறு விவரிக்கிறார்:

"அண்ணன் திருமணம் முடிப்பான். அவனின் தம்பிகள், அதாவது அவனின் உடன்பிறந்த சகோதரர்கள் அண்ணனின் மனைவியோடு சேர்ந்து குடும்பம் நடத்துவர். தம்பிகள் வேறு திருமணம் செய்து கொண்டாலும் அண்ணன் மனைவியுடன் குடும்பம் நடத்துவது தொடர்ந்து நடக்கலாம். 

தாயின் சகோதரி (பெரியம்மா/சித்தி) மகன்களான ஒன்றுவிட்ட சகோதரர்களுக்கும் இவ்வுரிமை உண்டு. ஆனால், தந்தையின் சகோதரருடைய (பெரியப்பா/சித்தப்பா) மகன்களுக்கு இந்த உரிமை இல்லை. 

அவ்வாறான தந்தையின் சகோதரரின் மகன்கள், தன் (பெரியப்பா/சித்தப்பா மகன்களான) சகோதரனின் மனைவியுடன் குடும்பம் நடத்துவது, பாதி விபச்சாரத்திற்கு ஒப்பாகக் கருதப்பட்டிருந்தது. 

19ஆம் நூற்றாண்டின் இறுதியில், இரு சகோதரர்களுக்கு ஒரு மனைவி என்பது தண்டனைக்குரியக் குற்றமாக சட்டமாகி விட்டாலும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்கூட, தன் மகளைத் திருமணம் முடித்துக் கொடுக்கும்போது, 'அண்ணன்-தம்பிகள் இணைந்து நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?' என தாய்-தந்தயர் ஆவலுடன் எதிர்பார்த்தனர்" - கேரள வரலாற்றில் இருண்ட ஏடுகள், பக்கம் 154. 

ஆக மொத்தத்தில் நாயர் பெண்களுக்குச் சொந்த ஜாதியிலோ உயர்ந்த ஜாதியிலோ உள்ள எந்த ஓர் ஆணுடனும் எத்தருணத்திலும் தொடர்பு வைத்துக் கொள்ள அனுமதி இருந்தது. அவர்களுக்கு இருந்த ஒரே தடை, தாழ்ந்த ஜாதியிலுள்ள ஆண்களுடன் மட்டும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்பதாக இருந்தது. 

அவ்வாறு தாழ்ந்த ஜாதியிலுள்ள ஆண்களுடன் தொடர்பு வைத்திருப்பது வெளியானால் அந்தப் பெண்களை ஜாதியை விட்டு விலக்கி, அவர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது. 

இத்தகையக் கலாச்சார, பண்பாட்டுச் சீரழிவு, குலவழக்கம் என்ற பெயரில் நடைமுறையில் இருந்த காலகட்டத்தில் தான் திப்புவின் சீர்திருத்த முயற்சிகள் தொடங்கின. சன்மார்க்க விதிமுறைகளை உறுதியாகப் பேணிய திப்பு, உடம்பை நிர்வாணமாகக் காண்பிப்பதைக் கடுமையாக வெறுத்திருந்தார். குளிக்கும் வேளையில்கூட உடம்பை மேலிருந்து கீழ்வரை மறைத்திருந்த அவரது வெட்க உணர்வு, மிகப் பிரபலமாக இருந்தது. 

சட்டத்திற்கு உட்படாத ஆண்-பெண் தொடர்புகளைச் சமுதாய விரோதமாகத் திப்புக் கருதியிருந்தார்; சன்மார்க்க அடிப்படைகளை உயர்ந்ததாகக் கருதவும் தனது சொந்த வாழ்க்கையில் அவற்றை உறுதியாகக் கடைபிடிக்கவும் செய்தார். அதன் காரணத்தினாலேயே, மேலாடையின்றி மதியத் தூக்கம் தூங்கும் தனது அறையில் நுழைந்த வேலைக்காரப் பெண்ணிடம் திப்பு, கடுமையாகக் கோபப்பட்டார்.

திப்புவின் வெட்க உணர்வையும் பெண்களை அவர் நடத்திய விதத்தையும் அவரது பழக்க வழக்கத்தையும் குறித்து பி.கே. பாலகிருஷ்ணன் வியந்து போற்றுகிறார்:

"மகாராஷ்டிரா போர் வேளையில் அவர்களின் கூடாரத்தில் தாக்குதல் நடத்தியவர்களில் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட அரச குமாரிகளைத் திப்புவின் முன்னிலையில் கொண்டு வந்த வேளையில், அந்த அபூர்வ அழகிகளின் அழகில் மயங்கி விடாமல் அந்த அழகிகளுக்கு ஆபரணங்களும் உயர்ந்த உடைகளும் பரிசுகளாக வழங்கி, போரை நிறுத்துவதற்கு அவர்களின் கணவர்களை வேண்டிக் கொள்ள வேன்டும் என்ற கோரிக்கையுடன் அவர்களைப் பாதுகாப்பாக திரும்ப அனுப்பிய குணம் வியப்பில் ஆழ்த்துகிறது! - திப்பு சுல்தான், பி.கே. பாலகிருஷ்ணன், பக்கம் 120. 

இவ்விதம் சன்மார்க்கத் தத்துவங்களில் உறுதியான நம்பிக்கையுடன் அதன் கொள்கைகளைப் பின்பற்றிய திப்பு, தனது பிரஜைகளும் அசிங்கமான பழக்க வழக்கங்களைத் துறந்து, தூயவாழ்க்கை வாழ வேண்டும் என ஆவல் கொண்டிருக்க வேண்டும். இந்த மனப்பூர்வமான நல்லெண்ணம், தான் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரி என்ற அவரது உணர்வு ஆகியன கீழ்க்காணும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டளையைப் பிறப்பிக்க அவரைத் தூண்டியது.

"உங்களுக்கு இடையில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு கொள்வதும் உங்களின் தாய், சகோதரிகளை இவ்விதம் நடப்பதற்கு நீங்கள் சம்மதிப்பதும் உங்களது பூர்வ ஆச்சாரமாக இருந்து வருகின்ற நிலையில், நீங்கள் அனைவரும் விபச்சாரத்தில் பிறந்தவர்களும் ஆண்-பெண் உறவு விஷயத்தில் நிலத்தில் மேய்ந்து நடக்கும் கால்நடைகளைவிடக் கீழான வெட்கமற்றவர்களுமாகின்றீர்கள். இவ்விதமுள்ள பாவகரமான துர் ஆச்சாரங்களை விட்டொழித்து, சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்வதற்கு நாம் இதன் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றோம்" 

மேல்ஜாதி நம்பூதிரிகளால் ஒரு பெரும் சமுதாயமே கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தால், எத்தனை மகத்துவமிக்க கட்டளை இது என்பது புரியும்! 

திப்புவின் கட்டளை உண்மையில் உயர்ஜாதி மடாதிபதிகளின் கோட்டையையே உலுக்கிப் போட்டது. 

ஜாதியின் பேரில் சுகபோகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த உயர்ஜாதித் தம்புரான்களுக்கு, தங்களின் கட்டுப்பாடற்ற சுதந்திரமான சுகவாழ்வு நீடிக்க அவர்களின் ஜாதிச் சடங்கு, சம்பிரதாயங்களை நிலைநிறுத்த வேண்டியது கட்டாயமாக இருந்தது. 

அதன் காரணமாக, ஆங்கிலேயர்களுடன் இணைந்து திப்புவிற்கு எதிராகப் பரவலான பொய்ப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட ஆரம்பித்தனர். 

உயர்ஜாதித் தீண்டாமை மற்றும் அடக்குமுறைக்கு எதிரானத் திப்புவின் சமூக சீர்த்திருத்த முயற்சிகள் அனைத்தும் இந்து மதத்துக்கு எதிரான செயல்பாடுகளாகத் திரிக்கப்பட்டதோடு, திப்பு ஒரு இந்து மதவிரோதி என்று பிரச்சாரமும் ஆரம்பிக்கப்பட்டது. 

இந்தியாவைத் தங்களின் காலனி நாடாக வென்றெடுப்பதற்குப் பெரும் சவாலாக விளங்கிய திப்புவை அழிக்க வேண்டிய கட்டாயம் ஆங்கிலேயர்களுக்கு. அதே நேரத்தில், உள்நாட்டு மக்களிடையே உயர்ஜாதி மடாதிபதிகளால் திப்புவுக்கு எதிராகப் பரப்பப்பட்ட இந்தப் பொய் செய்தி, ஆங்கிலேயருக்கு எதிரான திப்புவின் போராட்டத்தில் ஒரு பெரும் பகுதி மக்கள் ஆங்கிலேயர்களுக்குத் துணை செல்லும் நிலையை ஏற்படுத்தியது 

இந்திய வரலாற்றின் இருண்டபகுதி என்றே வர்ணிக்கலாம்.
அதனால், திப்புவின் சமூக சீர்திருத்த முயற்சிகளெல்லாம் மதமாற்றத்திற்கான திட்டங்களாக சாதாரண மக்கள் தவறாகப் புரிந்து கொள்ளும் நிலையும் அதன் மூலம் இந்தியாவை அடக்கியாள வந்தேறிய ஆங்கிலேயர்களுடன் இணைந்து திப்புவை ஒழித்துக் கட்டும் சதிவேலைகளை உயர்ஜாதி ஜமீந்தார்கள் செய்வதற்கு இலகுவாகவும் அமைந்தது.

மக்களுக்குப் பயன்விளைவிக்கும் எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதைக் கூறுவது இஸ்லாமாக இருப்பின், அதனை "மதமாற்ற" காரணம் கூறி சமூகத்திற்குப் பயன் விளைவிப்பதிலிருந்து தடுத்து விடுவதை எக்காலத்தும் உயர்ஜாதியர்கள் கடைப்பிடித்தே வந்துள்ளனர்.

வட்டியின் அடிப்படையிலான பொருளாதாரத் திட்டங்களால் உலகமே சீரழிந்து நிற்கும் இவ்வேளையில்கூட, வட்டியில்லாத வங்கி முறையை அமல்படுத்த முன்வந்த கேரள அரசின் முயற்சியை உயர்ஜாதியைச் சேர்ந்த சுப்ரமணியசுவாமி மதத்தின் காரணம் கூறி உச்சநீதிமன்றத்தில் தடையேற்படுத்திய அண்மை நிகழ்வு, இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.

கேரள பெண்சமூகத்தில் திப்பு சுல்தான் நடைமுறைப் படுத்திய மற்றொரு சீர்திருத்தம்தான், பெண்களின் மேலாடை விஷயத்தில் தலையிட்டதாகும். 

இந்து சமுதாயத்தில் உயர்ஜாதி நம்பூதிரிப் பெண்களைத் தவிர வேறு எவருக்கும் இடுப்புக்கு மேல் ஆடை அணிவது கூடாத செயலாக இருந்தது. 

அவ்வாறு நம்பூதிரிப் பெண்களைத் தவிர மற்ற பெண்கள் இடுப்புக்கு மேல் ஆடைஅணிவது, மிகப் பெரிய மதவிரோதச் செயலாக நாயர் பெண்களும் இன்னபிற தாழ்த்தப்பட்ட பெண்களும் கருதி வந்தனர்.

அதனைக் குறித்து எழுத்தாளர் அனந்த கிருஷ்ணன் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்:

"நாயர் சமுதாயத்தில் (கீழ்ஜாதியினரில்) ஆணும் பெண்ணும் உடம்பின் மேல்பாகத்தை மறைப்பது தங்களின் எஜமானர்களுக்கும் பிரபுக்களுக்கும் செய்யும் மிகப் பெரிய எதிர்ப்பாக கருதப்பட்டிருந்தது".

அப்போதைய சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் வேதங்களையும் உபயோகித்து கீழ்ஜாதி மக்களை அந்த அளவுக்குத் தவறான சிந்தனையில் உயர்ஜாதியினர் ஊறவைத்திருந்தனர். 

இடுப்புக்கு மேல் உடம்பை மறைக்காத பெண்களின் நடைமுறை, சாதாரண வாழ்க்கையை மிக அலோங்கலப்படுத்தும் என்றும் மக்களின் முன்னேற்றத்துக்கு அது பெரிய தடையாக இருக்கும் என்றும் திப்பு புரிந்து கொண்டார். 

அதன் காரணமாக, இத்தகைய ஜாதி சம்பிரதாயத்தை விட்டொழிக்க வேண்டும் என்றும் எல்லாப் பெண்களும் கட்டாயமாக தங்களின் மார்புகளை மறைக்க வேண்டும் என்றும் திப்பு சுல்தான் கண்டிப்பாக உத்தரவிட்டார். ஆனால், தன்னுடைய சீர்திருத்த முயற்சிகள் அனைத்தும் மக்களின் சமூக அந்தஸ்தை உயர்த்துவதற்கும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்குமான முயற்சிகள்தாம் என்பதை அவர்களுக்குப் புரிய வைத்து, தமது சீர்திருத்த முயற்சிகளை மக்கள் ஏற்றுக் கொள்மாறு செய்வது திப்புவுக்கு மிகக்கடினமானதாக இருந்தது.

தங்களின் கருத்துத் தெரிந்த காலம் முதல் தாங்கள் கடைபிடித்து வந்த ஆச்சார முறைகளை மீறுவதற்குக் கீழ்ஜாதி மக்கள் ஒரு போதும் தயாராகவில்லை. திப்புவின் சீர்திருத்தக் கட்டளைகள் அனைத்தும் அவர்களுக்கு மதமாற்ற முயற்சிகளாகவே உயர்ஜாதியினரால் திரித்துக் காட்டப் பட்டன. 

குறிப்பாக, இடுப்புக்கு மேல் உடம்பு முழுவதையும் மறைக்கும் விதத்திலான மேலாடை அணிவது, முஸ்லிம் பெண்கள் ஆடைக்கு ஒப்பானதாக இருந்ததால், அவ்வாறு மேலாடை அணிவதையே மதமாற்றத்திற்கு ஒப்பானதாக அவர்கள் கருதினர்.

அக்காலத்தில் மட்டுமன்றி தற்போதைய வரலாற்று ஆசிரியர்களிலும் பெரும்பாலோர், திப்பு இந்து மதச் சம்பிரதாயங்களில் மாற்றம் ஏற்படுத்த முயன்றதாக குற்றம் சுமத்துவதுண்டு. 

ஆனால், வரலாற்றை நடுநிலையாக உற்று நோக்கினால், இக்குற்றச்சாட்டு அநியாயமானது என்பதைப் புரிந்து கொள்ளலாம். திப்புவின் சீர்திருத்த முயற்சிகள் அனைத்தும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் அனைவரையும் சமமானவர்களாக ஆக்கி, அவர்களின் அந்தஸ்தை உயர்த்துவதற்குமான முயற்சியாகவே இருந்தன. அதற்கு, கி.பி. 1785இல் மலபார் கவர்னருக்குத் திப்பு எழுதிய கடிதம் ஆதாரமாகத் திகழ்கிறது.

திப்புவின் சீர்த்திருத்தக் கட்டளைகள் மதமாற்ற முயற்சிகளாகவும் இந்து மதத்தை அழிப்பதற்கான முயற்சிகளாகவும் திரிக்கப்பட்டதை அறிந்த திப்பு தன் நிலைபாட்டை மலபார் கவர்னருக்குக் கீழ்கண்டவாறு விவரிக்கிறார்:

"மலபாரில் சில பெண்கள் தங்களின் மார்புகளை மறைக்காமல் திரிவதைப் பார்த்தபோது எனக்கு வருத்தம் ஏற்பட்டது. அக்காட்சி வெறுப்பையும் நாகரீக, பண்பாட்டு சிந்தனைகளுக்கு எதிரான தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது. 

சன்மார்க்க சிந்தனைக்கு நிச்சயமாக அது எதிரானதுதான். இப்பெண்கள் ஒரு தனிப்பட்ட பரம்பரையில் உள்ளவர்கள் எனவும் அவர்களின் சம்பிரதாயப்படி, அவர்கள் தங்கள் மார்புகளை மறைப்பது கூடாத காரியம் எனவும் நீங்கள் எனக்கு விளக்கமளித்தீர்கள். நான் அதனைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். நீண்டகால சம்பிரதாயம் காரணமாகவா, அல்லது ஏழ்மையின் காரணமாகவா அவர்கள் தங்கள் மார்புகளை மறைக்காமல் இருக்கின்றனர்?

ஏழ்மையின் காரணமாகவே அவர்கள் தங்களின் மார்புகளை மறைக்காமல் இருக்கின்றனர் எனில், அவர்களுடைய பெண்கள் தங்களின் கவுரவத்திற்குக் களங்கம் ஏற்படாவண்ணம் கண்ணியமாக உடையணிவதற்குரிய உதவிகளை நீங்கள் அவர்களுக்கு வழங்க வேண்டும்.

அதற்கு மாற்றமாக நீண்டகால பழக்கமுடைய, கைவிடக் கூடாத சம்பிரதாயம் என்பது காரணம் எனில், அவர்களுடைய தலைவர்களிடையே நெருக்குதல் கொடுத்து இந்த (அரை நிர்வாணச்) சம்பிரதாயத்தை இல்லாமலாக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். 

அவர்களின் மதத் தத்துவங்களுக்கு எவ்வகையிலும் கேடுவிளைவிக்கா விதத்தில், சமாதானமான முறையிலான உபதேசத்தின் மூலமாக மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்" (கேரள முஸ்லிம்களின் போராட்ட வரலாறு - பேராசிரியர்: கெ.எம்.பகாவுத்தீன், பக்கம் 118,119.)

SOURCE: சுட்டிகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக