புதன், ஜனவரி 02, 2013

சிங்கப்பூரில் வெடிகுண்டு மிரட்டல்: இந்திய மாணவன் கைது!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள மரினா பே சாண்ட்ஸ் எனும் வளாகத்திற்கு குண்டு வைக்கப்போவதாக தன் முகநூல் பக்கத்தில் எழுதிய 13 வயது இந்திய மாணவர் கைது செய்யப் பட்டுள்ளார்.  மரினா பே சாண்ட்ஸ் என்பது சூதாட்ட மையம், உல்லாச விடுதி மற்றும் வணிக மையங்களை உள்ளடக்கிய ஒரு வளாகம் ஆகும். புது டில்லியைச் சேர்ந்த அபினவ் (உண்மைப் பெயரல்ல) சிங்கப்பூரில் உள்ள இந்திய கல்வி நிறுவனம் ஒன்றில் பயின்று வருகிறார்.  இவர் கடந்த 29 டிசம்பர் அன்று தன் முகநூல் பக்கத்தில் சிங்கப்பூரைப்
பற்றி வெறுப்பை உமிழும் வாசகங்களை வெளியிட்டிருந்தார்.  'சிங்கப்பூரை விட்டு நான் வெளியேறும் நாளில் நான் பெரிதாக வஞ்சம் தீர்த்துக் கொள்ளப் போகிறேன்.  பார்க்கும் இடங்களிலெல்லாம் எச்சில் துப்பி வைப்பேன்.  மரினா பே சாண்ட்ஸில் குண்டு வைப்பேன்' என்றும் மேலும் சில ஆபாச அருவெறுப்பான வார்த்தைகளயும் அவர் பிரயோகம் செய்திருந்தார்.  


இதனைக் கண்ணுற்ற சிங்கப்பூரர்களிடையே இது பரபரப்பை ஏற்படுத்தியது.  இதுபற்றி சிங்கப்பூர் காவல்துறையில் புகார் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  அவர் மீது போலியாக பயங்கரவாத மிரட்டல் விடுத்ததாக குற்றம் சாட்டப்படும் என்று நம்பப்படுகிறது.  குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒரு லட்சம் சிங்கப்பூர் வெள்ளி அபராதமோ ஐந்து ஆண்டுகளுக்கு மிகாத சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.

அந்த மாணவர் இதனை விளையாட்டாக எழுதியிருக்கக்கூடும் என்றாலும் அவரைப் போன்ற வெளிநாட்டு மாணவர்களின் மனதில் சிங்கப்பூரைப் பற்றி இந்த அளவிற்கு வெறுப்பு ஏற்பட என்ன காரணம் என்பது பற்றி சிங்கப்பூரர்களை சிந்திக்க வைத்திருக்கிறது இந்நிகழ்வு.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக