ஜார்கண்ட் சட்டசபையை கலைக்க கவர்னருக்கு சிபாரிசு செய்து என அம்மாநில மந்திரி சபை முடிவு எடுத்து அச்சிபாரிசு பேக்ஸ் மூலம் உடனடியாக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரசுடன் சேர்ந்து மந்திரிசபை அமைத்து விடக்கூடாது என்பதற்காக அர்ஜுன் முண்டா இந்த அதிரடி முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்க வில்லை. 82 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க 42 உறுப்பினர்கள் ஆதரவு தேவை பாரதீய ஜனதா 18 இடங்களிலும், சிபுசோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 18 இடங்களிலும் வெற்றி பெற்றது. காங்கிரசுக்கு 13 இடங்களும், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சிக்கு 11 இடங்களும் கிடைத்தன. இதனால் பாரதீய ஜனதாவும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் கூட்டணி ஆட்சி அமைத்தன.
ஜார்க்கண்ட் மாணவர் அமைப்பின் 6 உறுப்பினர்களும், 2 ஐக்கிய ஜனதா தளம் உறுப்பினர்களும், 2 சுயேச்சைகளும் அரசுக்கு ஆதரவு அளித்தன. பாரதீய ஜனதாவைச் சேர்ந்த அர்ஜுன் முண்டா முதல்- மந்திரியாக பதவி ஏற்றார்.
இரு கட்சிகளும் தலா 28 மாதங்கள் முதல்- மந்திரி பதவி வகிப்பது என முடிவு செய்யப்பட்டது. சிபுசோரன் மகன் ஹேமந்த் சோரன் துணை முதல்- மந்திரியாக பதவி ஏற்றார். இரு கட்சிகளைச் சேர்ந்த 7 பேர் மந்திரிகளாக இடம் பெற்று இருந்தனர்.
வருகிற 10-ந்தேதியுடன் பாரதீய ஜனதாவின் 28 மாதங்கள் நிறைவடைகிறது. எனவே தங்களிடம் ஆட்சியை ஒப்படைக்குமாறு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரன் முதல்- மந்திரி அர்ஜுன் முண்டாவுக்கு கடிதம் எழுதினார். ஆட்சியை ஒப்படைக்க அர்ஜுன் முண்டா மறுத்துவிட்டார். இதுபோன்ற ஒப்பந்தம் எதுவும் செய்யப்படவில்லை என்றார்.
இதைத் தொடர்ந்து சிபுசோரன் கோபம் அடைந்தார். கட்சியின் செயற்குழுவை கூட்டி அதில் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறும் முடிவு எடுத்தார். இன்று சிபுசோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் சையத் அகமதுவை சந்தித்தனர். அப்போது ஆதரவு வாபஸ் கடிதத்தை முறைப்படி நேரில் வழங்கினார்கள்.
இதற்கிடையே முதல்- மந்திரி அர்ஜுன் முண்டா இன்று காலை மந்திரி சபை கூட்டத்தை அவசரமாக கூட்டினார். கூட்டத்தில் 7 மந்திரிகளும் கலந்து கொண்டனர். இதில் சட்டசபையை கலைக்க கவர்னருக்கு சிபாரிசு செய்வது என முடிவு எடுக்கப்பட்டது. மந்திரிசபையின் சிபாரிசு பேக்ஸ் மூலம் உடனடியாக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதில் ஜார்க்கண்ட் சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரசுடன் சேர்ந்து மந்திரிசபை அமைத்து விடக்கூடாது என்பதற்காக அர்ஜுன் முண்டா இந்த அதிரடி முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.
இதுபற்றி அர்ஜுன் முண்டா கூறுகையில், பாரதீய ஜனதா கூட்டணி அரசுக்கு அளித்த ஆதரவை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வாபஸ் பெற்றது. அடுத்து எந்த தேசிய கட்சியும் ஆட்சி அமைக்க வெளிப்படையாக முன்வரவில்லை. அதே சமயம் திரைமறைவில் குதிரை பேரத்தில் ஈடுபடுவதை தடுக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இன்று பிற்பகல் அவர் கவர்னரை நேரில் சந்தித்து மந்திரி சபையின் சிபாரிசை கொடுக்கிறார். அதற்கான காரணத்தையும் கவர்னரிடம் தெரிவிக்கிறார். சிபுசோரன் ஆதரவு வாபசால் பாரதீய ஜனதா அரசு கவிழ்ந்துவிட்டது. மந்திரிசபை சிபாரிசு குறித்து கவர்னர் சையத் அகமது தீவிர ஆலோசனை நடத்துகிறார். பின்னர் அவர் மாநில அரசியல் நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்புவார். மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் கவர்னர் இறுதி முடிவு எடுப்பார்.
பாரதீய ஜனதா அரசு கவிழ்ந்து விட்டநிலையில் அங்கு சட்டசபையின் பதவி காலம் இன்னும் 2 ஆண்டு காலம் உள்ளது. இந்த நிலையில் கவர்னர் மந்திரிசபையின் சிபாரிசை ஏற்று சட்டசபையை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை பிரகடனம் செய்யும் முடிவு எடுப்பாரா? அல்லது இடைக்கால அரசாக அர்ஜுன் முண்டாவை நீடிக்கச் செய்து தேர்தல் நடத்த உத்தரவிடுவாரா? என பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காணும் அதிகாரம் தற்போது கவர்னர் கையில் உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக