திங்கள், அக்டோபர் 12, 2015

தீவிரமடையும் போராட்டம்: அமன் சேதி உட்பட மேலும் 6 எழுத்தாளர்கள் சாகித்ய அகாடமி விருதை திருப்பியளிக்கின்றனர்

கருத்து சுதந்திர அச்சுறுத்தல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக இந்திய எழுத்தாளர்கள் தொடர்ந்து போர்க்கொடி உயர்த்தி வரும் நிலையில், தற்போது, அமன் சேதி உட்பட புகழ்பெற்ற எழுத்தாளர்கள் 6 பேர் தங்களின்  சாகித்ய அகாடமி விருதை திருப்பியளிக்க முடிவு செய்துள்ளனர். 

தபோல்கர், பன்சாரே போன்ற செயற்பட்டாளர்களின் வரிசையில், கடந்த ஆகஸ்டு மாதம் பிரபல கன்னட எழுத்தாளரும், பகுத்தறிவாளருமான எம்.எம்.கல்புர்கியும் சுட்டுக்கொல்லப்பட்டார். இது நாட்டில் கருத்து சுதந்திரத்துக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படக் காரணமாக அமைந்தது. 

மேலும், அண்மையில் உத்தரப்பிரதேசத்தில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி முகமது இக்லாக் என்பவர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம், வகுப்புவாதம் மற்றும் வெறுப்பரசியல் சமூகத்தை சூழ்ந்திருப்பதை உணர்த்தியது. இது போன்ற தொடர்ச்சியான பல சம்பவங்கள் எழுத்தாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 

எனவே இந்த சம்பவங்களைக் கண்டிக்கும் வகையில் பிரபல எழுத்தாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சாகித்ய விருதுகளை திரும்ப ஒப்படைத்து வருகின்றனர். அந்தவகையில் பிரபல எழுத்தாளர்களான நயன்தாரா சேகல், உதய் பிரகாஷ், இந்தி கவிஞர் அசோக் வாஜ்பேயி, கேரள எழுத்தாளர் சாரா ஜோசப்பும் ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதுகளை திரும்ப ஒப்படைத்தனர். 

மேலும் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரும், சாகித்ய அகாடமி பொதுக்குழு உறுப்பினருமான சஷி தேஷ்பாண்டே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைப்போல பிரபல கவிஞரான கே.சச்சிதானந்தனும், கன்னட எழுத்தாளரான அரவிந்த் மல்கட்டியும் சாகித்ய அகாடமி பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் இருந்து ராஜினாமா செய்தனர். கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கவும், எழுத்தாளர்களின் சார்பாக இருக்கவும் அகாடமி தவறி விட்டதாக அவர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டார். 

இந்நிலையில் ‘யுவ புரஷ்கார்’ விருது பெற்ற அமன் சேதி, சாகித்ய அகாடமியால் தனக்கு வழங்கப்பட்டிருந்த விருதை திருப்பியளிக்க முடிவு செய்திருப்பதாக நேற்று அறிவித்தார். மேலும் கருத்து சுத்ந்திரத்துக்கான போராட்டத்திற்கு ஆதரவாக குஜராத்தைச் சேர்ந்த கணேஷ் தேவி, பஞ்சாபைச் சேர்ந்த குர்பச்சன் சிங் புல்லர், அஜ்மீர் சிங் ஆலக், அதம்ஜித் சிங், வர்யம் சந்து ஆகிய புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலரும் தங்கள் விருதை திருப்பியளிக்கவிருப்பதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக