புதன், ஆகஸ்ட் 27, 2014

பிரித்தாளும் அரசியல் மூலம் பா.ஜ.க வெல்ல முடியாது: நிதீஷ்குமார்!

பிரித்தாளும் அரசியல் மூலம் பாஜக வெற்றி பெற முடியாது என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் நிதீஷ் குமார் கூறினார்.
பீகார் உள்ளிட்ட நான்கு மாநில இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் நிதீஷ் குமார், பாட்னாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பீகாரில் எங்கள் கட்சியும், ராஷ்ட்ரீய ஜனதா தளமும், காங்கிரசும் இணைந்து உருவாக்கிய கூட்டணி, சரியானதுதான் என இந்த இடைத் தேர்தல் வெற்றி நிரூபித்துள்ளது.
தங்கள் மன நிலையையும், உணர்வுகளையும் இத்தேர்தலில் மக்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றிருந்த நிலையில், குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த கூட்டணி சிறப்பான மாற்றத்தை கண்டுள்ளது.
அனைத்து தொகுதியிலும் வெற்றி பெறுவோம் என்று கூறிய பாஜகவுக்கு, பிரித்தாளும் அரசியல் மூலம் மக்களை தனிமைப்படுத்த முடியாது என்பதை இந்த இடைத்தேர்தல் தெளிவுபடுத்திவிட்டது என்றார் நிதீஷ் குமார்.
மாநில பாஜக தலைவர் சுஷில்குமார் மோடி, டுவிட்டர் இணையதளப் பதிவில் கூறுகையில், "இடைத் தேர்தல் முடிவை ஏற்றுக் கொள்கிறோம்.
மக்களவைத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றோம். தற்போது அவர்கள் (மதச்சார்பற்ற கூட்டணி) வெற்றி பெற்றிருக்கிறார்கள். இறுதிச்சுற்றில் வெற்றி பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்' என்றார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அரவிந்தர் சிங் கூறுகையில், "பஞ்சாபில் அகாலிதளம் கட்சிக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் வீழ்ச்சி தொடங்கியுள்ளதை இந்த இடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன.
தல்வாண்டி தொகுதியில் அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்தியும், அதிகார துஷ்பிரயோகம் செய்தும் அகாலிதளம் வெற்றி பெற்றுள்ளது' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக