லிபியாவில் அதிபர் கடாபியை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வருகிறது. கடாபியின் விசுவாச ராணுவத் துக்கும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள புரட்சி படையினருக்கும் இடையே கடும் சண்டை நடக்கிறது. புரட்சி படைக்கு, ராணுவ உதவியை அமெரிக்கா அளித்துள்ளது. இதனால் புரட்சி படையினரிடம் தாக்குப் பிடிக்க முடியாமல் கடாபி ராணுவம் பின் வாங்கி வருகிறது.
முக்கிய நகரங்களை புரட்சி படையினர் கைப்பற்றி உள்ளனர். சமீபத்தில், தலைநகர் திரிபோலியும் புரட்சி படையிடம் வீழ்ந்தது. அதிபர் மாளிகையையும் புரட்சி படை கைப்பற்றியது.
அதற்கு சற்று முன்பாக கடாபியும், அவரது மகன் ஸாதியும் ரகசிய பாதை வழியாக அங்கிருந்து தப்பி விட்டனர். கடாபியின் மனைவி, மற்றும் 3 மகள்களும் இந்த வார தொடக்கத்தில் அல்ஜீரியா நாட்டுக்கு பறந்து விட்டனர். அங்கு அவர்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். கடாபியையும் மகன் ஸாதியையும் புரட்சி படையினர் தேடி வருகின்றனர்.
மறைவிடங்கள், பாதுகாப்பான இடங்கள் என்று சந்தேகிக்கப்படும் பகுதிகளில் எல்லாம் புரட்சி படையினர் சல்லடை போட்டு தேடி வருகின்றனர். கடாபியும், அவரது மகன் ஸாதியும் கொல்லப்படுவார்கள் என்று புரட்சி படை அறிவித்துள்ளது.
இந்நிலையில் கடாபியின் மகன் ஸாதி, புரட்சி படையிடம் சரணடைந்து உயிர்ப் பிச்சை பெற முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இதுபற்றி, புரட்சி படையின் தளபதி அப்துல் ஹக்கிம் பெல்ஹாச் கூறியதாவது:-
கடாபியின் மகன் அல்-ஸாதி கடந்த செவ்வாய்க்கிழமை (30-ந்தேதி) முதன் முறையாக என்னை தொடர்பு கொண்டு போனில் பேசினார். தான் சரண் அடைய விரும்புவதாகவும், தனது உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியுமா? என்றும் கேட்டார்.
உங்கள் உயிரைப் பற்றி நீங்கள் அச்சப்பட தேவையில்லை. உங்களது உயிருக்கும், உரிமைக்கும் நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். மேலும், நீங்கள் மனிதாபிமானத்துடன் நடத்தப்படுவீர்கள் என்று அவரிடம் கூறினேன். ஸாதி சரண் அடைந்த பிறகு, சட்டத் துறையின் பாதுகாப்பையும் கோர திட்டமிட்டு உள்ளார். நான் ஒருவரையும் கொல்லவில்லை. மக்களுக்கு விரோதமாக ஒருபோதும் செயல்பட்டது கிடையாது என்றும் ஸாதி தெரிவித்தார்.
அதற்கு நீங்கள் சரண் அடைய எடுத்த முடிவு சிறப்பானது. லிபிய மண்ணில் மேலும் ரத்த கறை படிவதை எங்களில் யாரும் விரும்பவில்லை. நீங்கள் மட்டுமின்றி உங்களுடன் சேர்ந்தவர்களும் சரண அடைவதுதான் நல்லது என்று அவரிடம் விளக்கி கூறினேன்.
இவ்வாறு அப்துல்ஹக்கிம் பெல்ஹாச் தெரிவித்தார்.
ஸாதி எங்கு மறைந்து வாழ்கிறார் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். ஆனால், அதுபற்றி விளக்கமாக கூற முடியாது என்று அவர் மறுத்துவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக