வியாழன், செப்டம்பர் 01, 2011

20,000 ஆயுதமேந்திய பொதுமக்கள் போரிட தயார்! : கடாபி மகனின் புதிய சூளுரை


1 sep 2011.    அரச படைகள் தொடர்ந்து போராடும் என லிபிய அதிபர் மௌமர் கடாபியின் மகன், சைஃப் அல் இஸ்லாம் சூளுரைத்துள்ளார்.
திரிபொலிக்கு வெளியிலிருந்து வானலை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு தெரிவித்த அவர் தனது தந்தை (மௌமர் கடாபி) நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


லிபியாவின் எதிர்காலம் தொடர்பில் பிரான்ஸ் அதிபர் நிகோலாஸ் சார்கோஷி, பாரிஸில் ஒழுங்கு செய்த அவசர கூட்டத்தில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன், அமெரிக்க இராஜாங்க செயலர் ஹிலாரி கிளிண்டன், ஐ.நா செயலாளர் பான் கீ மூன் ஆகியோர் கலந்து கொண்டுள்ள நிலையில்
கடாபியின் மகன் இவ்வாறு சூளுரைத்துள்ளார்.

கடாபியின் மற்றுமொரு மகன், முன்னதாக நேற்று காலை விடுத்த அறிவிப்பில், யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து, கிளர்ச்சி படைகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயார் என அறிவித்தார்.

எனினும் இந்த அறிவிப்பு வெளியாகி சில மணி நேரங்களில் சைஃப் இப்புதிய அறிவித்தலை விடுத்துள்ளார். முன்னதாக எதிர்வரும் சனிக்கிழமைக்குள் கடாபி படையினர் சரணடைய வேண்டுமென கிளர்ச்சி படைகள் காலக்கெடு விதித்திருந்தன.

எனினும் சைஃப் அல் இஸ்லாம் விடுத்துள்ள எச்சரிக்கையில் தங்களிடம் இன்னமும் 20,000 ஆயுதமேந்திய பொதுமக்கள் இருப்பதாகவும், தமது நகரத்தை பாதுகாத்துக்கொள்வதற்காக அவர்கள் ஆயுதமேந்தியிருப்பதாகவும், எந்நேரமும், எப்படிப்பட்ட தாக்குதலையும் அவர்கள் நடத்த கூடுமெனவும் அவர் எச்சரித்துள்ளார்.

கடாபி பிறந்த நகரமான சிர்தி (Sirte) உட்பட இன்னமும் சில பகுதிகள்  தொடர்ந்து அரச கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருப்பதாக லிபிய கிளர்ச்சிபடைகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக