03 Sep 2011
புது தில்லி, செப்.2: மும்பை தாக்குதல் வழக்கில் இருவர் விடுவிக்கப்பட்டதை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற மகாராஷ்டிர மாநில அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.மும்பை தாக்குதல் சம்பவத்தை நிகழ்த்த பயங்கரவாதிகளுடன் சேர்ந்து கூட்டு சதித் திட்டம் தீட்டியதாக பாஹிம் அன்சாரி, சபாவுதீன் அகமது ஆகிய இரு இந்தியர்கள் மீதும் குற்றம்சுமத்தப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் இருவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி அவர்களை விடுவித்தது. இத்தீர்ப்பை மும்பை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.இந்நிலையில் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மகாராஷ்டிர மாநில அரசு வழக்குத் தொடுத்துள்ளது. இருவர் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும் கோரியது.இந்த மனு, நீதிபதி அப்டாப் ஆலம் தலைமையிலான பெஞ்ச் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.மனுவை பரிசீலித்த நீதிபதிகள், வழக்கை விசாரிக்க ஒப்புக்கொண்டனர். அன்சாரி, சபாவுதீன் ஆகிய இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.அன்சாரி, சபாவுதீன் ஆகிய இருவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி அவர்களை விசாரணை நீதிமன்றம் விடுவித்துள்ளது.உயர் நீதிமன்றமும் அதை உறுதி செய்துள்ளது. இந்த வழக்கை ஆய்வு செய்ததில் அதில் வலுவான அம்சங்கள் எதுவும் இல்லை என்பதை மாநில அரசுக்கு தெளிவுபடுத்திக் கொள்கிறோம். இருப்பினும் இந்த வழக்கை விசாரிப்பதில் இந்த நீதிமன்றத்துக்கு பிரச்னை ஏதும் இல்லை என்றும் நீதிபதிகள் கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக