ஞாயிறு, செப்டம்பர் 25, 2011

நேபாள் விமான விபத்து 19 பேர் பலி

காத்மாண்டு: காத்மாண்டுவிலிருந்து கிளம்பிய புத்தா ஏர் நிறுவன விமானம் விபத்தில் சிக்கி நொறுங்கி விழுந்தது. இதில் 10 இந்தியர்கள் உள்பட விமானத்தில் இருந்த 19 பேரும் பலியானார்கள். இறந்தவர்களில் 8 பேர் திருச்சியைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து நேபாளத்தின் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு வாகன வசதிகள் உள்ளன. அதில் ஒன்று விமான பயணம். சிறிய ரக விமானம் மூலம் எவரெஸ்ட் சிகரத்தை சுற்றிக் காட்டுவார்கள். சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது இது.

புத்தா ஏர் என்ற தனியார் விமானம் இதுபோல சுற்றுலாப் பயணிகளுக்கு எவரெஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சுற்றிக் காட்டுவதற்காகக் கிளம்பியது. அந்த சிறிய ரக விமானத்தில் விமானிகள் உள்ளிட்ட ஊழியர்கள் மற்றும் 16 சுற்றுலாப் பயணிகள் இருந்தனர். பயணிகளில் 12 பேர் இந்தியர்கள், இவர்களில் 8 பேர் தமிழர்கள், திருச்சியைச் சேர்ந்தவர்கள். மற்ற 6 பேர் ஐரோப்பியர்கள்.

எவரெஸ்ட் உள்ளிட் பகுதிகளைப் பார்வையிட்ட பின்னர் விமானம் காத்மாண்டுத் திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது காத்மாண்டுப் பள்ளத்தாக்கில் உள்ள திடீரென பனி மூட்டத்தில் சிக்கி விமானம் விபத்துக்குள்ளானது.

இதில் முதலில் 18 பேர் உயிரிழந்ததாகவும், ஒருவர் படுகாயத்துடன் தப்பியதாகவும் தகவல்கள் வெளியாகின. தற்போது 19 பேரும் பலியாகி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் 10 பேர் இந்தியர்கள். அதில் 8 பேர் திருச்சியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. அவர்களது உடல்களை அடையாளம் காணும் பணியில் இந்தியத் தூதரக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

பிசகுநாராயண் என்ற கிராமத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. தலைநகர் காத்மாண்டுவிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இந்தக் கிராமம் உள்ளது.

மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இருப்பினும் வானிலை மோசமாக இருப்பதால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விபத்து குறித்து அதை நேரில் பார்த்த ஹரிபோல் போடல் என்பவர் கூறுகையில், கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் மேற் கூரை மீது விமானம் விழுந்தது. பின்னர் அது உடைந்து விழுந்தது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக