புதன், செப்டம்பர் 14, 2011

அத்வானியின் ரதயாத்திரை ஒரு ஏமாற்று வேலை! அன்னா ஹசாரே


ராலேகான்: நாட்டில் பெருகி வரும் ஊழலுக்கு எதிராக, அத்வானி ரத யாத்திரை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது மக்களை ஏமாற்றும் வேலை' என அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
இது குறித்து அன்னா ஹசாரே, ராலேகானில், தனியார் "தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்: ஊழலுக்கு எதிராக, வட மாநிலங்களில் ரத யாத்திரை நடத்தப் போவதாக, பா.ஜ.க தலைவர் அத்வானி அறிவித்துள்ளார். இது, மக்களை ஏமாற்றும் வேலை. உண்மையிலேயே ஊழலை ஒழிக்க வேண்டும் என, அத்வானி நினைத்தால் பா.ஜ., ஆளும் மாநிலங்களில், லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த, அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜன் லோக்பால் மசோதாவுக்கு, பார்லிமென்டில், தன் முழு ஆதரவையும் தெரிவிக்க வேண்டும்.
நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் சிதம்பரம், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் ஆகியோர், லோக்பால் மசோதாவை உருவாக்கும் கூட்டுக் குழுவில் அங்கம் வகித்தனர். இவர்கள் மூன்று பேரும், தங்களை பிரதமர் போல் கருதி, நடந்து கொண்டனர். பா.ஜ., காங்கிரஸ் கட்சிகளைச் சேராத, ஊழல் இல்லாத மற்ற கட்சிகளுக்கு, என் ஆதரவை தெரிவிப்பேன். அதற்காக, அந்தக் கட்சிகளை வழிநடத்த மாட்டேன். கடந்த மாதம் 16ம் தேதி, டில்லியில் உண்ணாவிரதம் இருக்கச் சென்ற என்னை, போலீசார் கைது செய்தனர். இந்த கைது சம்பவத்துக்கு முக்கியக் காரணமாக இருந்தவர், உள்துறை அமைச்சர் சிதம்பரம். திகார் சிறையில் இருந்து, என்னை மகாராஷ்டிராவுக்கு கொண்டு செல்வதற்கு, விமானம் தயாராக இருந்தது. ஆனால், சிதம்பரத்தின் திட்டம், அவர்களின் அரசாங்கத்துக்கு எதிராகவே, திரும்பி விட்டது.
பிரதமர் மன்மோகன் சிங், நல்ல மனிதர். ஆனால், அவரால் திறமையாகச் செயல்பட முடியவில்லை. மூத்த அமைச்சர்கள், பின்னணியில் இருந்து அவரை இயக்குவது தான், இதற்குக் காரணம். எங்களின் கோரிக்கைகளை, பார்லிமென்ட் நிலைக் குழு நிறைவேற்றாவிட்டால், மீண்டும் போராட்டம் நடத்துவேன். எம்.பி.,க்களின் வீடுகளின் முன், பஜனை பாடல்களைப் பாடி, போராட்டம் நடத்துவோம். ஊழலுக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தும்போதெல்லாம், அரசியல் கட்சிகளுடன் எங்களைத் தொடர்புபடுத்திக் கூறுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். எங்களின் போராட்டத்துக்கும், அரசியல் கட்சிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. என்று  அன்னா ஹசாரே கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக