8 Sep 2011
டெல்லி அப்பாவிகள் பலரின் உயிரைக் குடித்த, பலருக்குப் படுகாயத்தை ஏற்படுத்திய டெல்லி உயர்நீதிமன்ற குண்டுவெடிப்புக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
“இந்தக் கொடூரச் செயலைச் செய்த உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும்” என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர் இ.எம்.அப்துர் ரஹ்மான் கோரிக்கை விடுத்தார்.
அவர் வெளியிட்ட பத்திரிகை அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இந்தச் சம்பவம் மீண்டும் பயங்கரவாதத்தின் கோர முகத்தை வெளிப்படுத்தியுள்ளது. நாட்டின் அமைதியைக் குலைக்கும் இந்தச் சம்பவம், தேசத்தின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இந்தச் சம்பவம் நாட்டின் தலைநகரிலேயே நடந்துள்ளது. காவல்துறையும், நுண்ணறிவுத் துறையினரும் இதற்கு மூளையாகச் செயல்பட்டவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அப்பாவிகள் குறி வைக்கப்படாமலிருக்க உறுதிசெய்ய வேண்டும்.
மீடியா இந்தச் சம்பவத்தைத் திசை திருப்பாமல், தேவையற்ற எதிர்பார்ப்புகளை உருவாக்காமல் இருக்கவேண்டும். அப்படிச் செய்தால் அது விசாரணையைத் தவறான கோணத்தில் கொண்டு செல்ல உதவும். இதனால் அப்பாவிகள் குறி வைக்கப்படுவர். இந்த மாதிரி நெருக்கடியான நிலையில் நாட்டின் நலனுக்காக அனைத்து குடிமக்களும் ஒன்று பட்டு நிற்க வேண்டும்.
வகுப்புவாத சக்திகள் தங்கள் அசிங்கமான விளையாட்டுகளை விளையாட யாரும் அனுமதிக்கக் கூடாது. இந்தக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயம் பட்டவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.”
இவ்வாறு அந்த அறிக்கையில் இ.எம். அப்துர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக