சனி, செப்டம்பர் 03, 2011

லிபியாவுக்கு உதவ நேசக்கரம் நீட்டும் 63 நாடுகள்





3-9-11. சாபாட்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த 63 நாடுகளின் கூட்டத்தில், லிபியாவுக்கு உதவும் வகையில், 15 பில்லியன் டாலர் மதிப்பிலான லிபிய சொத்துக்கள் மீதான தடை விலக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து நேற்று லிபிய துறைமுகங்கள், எண்ணெய் நிறுவனங்கள், வங்கிகள் மீதான தடைகளை, ஐரோப்பிய யூனியன் விலக்கிக் கொண்டது.பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நேற்று முன்தினம், 63 நாடுகள் கலந்து கொண்ட, "லிபியாவின் நண்பர்கள்' கூட்டம் நடந்தது. பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி மற்றும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் இருவரும் இதற்கு தலைமை வகித்தனர்.

கூட்டத்திற்கு வந்த சீனா, ரஷ்யா:அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இதில் கலந்து கொண்டார். லிபியாவில், "நேட்டோ'வின் தலையீட்டை எதிர்த்த சீனாவும், ரஷ்யாவும் இக்கூட்டத்திற்கு தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி வைத்தன.லிபியாவின் சீர்குலைந்த உள்நாட்டுப் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, அடிப்படைத் தேவைகளான குடிநீர், எரிபொருள், சுகாதாரம் ஆகியவற்றை உடனடியாக பூர்த்தி செய்வது ஆகியவை குறித்து, இக்கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது.15 பில்லியன் டாலர்:இதில், ஐ.நா., பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவற்றால் தடை விதிக்கப்பட்ட, மொத்தம் 15 பில்லியன் டாலர் மதிப்பிலான லிபிய சொத்துகள் மீதான தடை விலக்கப்படும் என, இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
"நேட்டோ' பணி தொடரும்:
கூட்டத்தில் பேசிய பிரான்ஸ் அதிபர் சர்கோசி, "லிபியாவில் மறுவாழ்வு மற்றும் பொதுமன்னிப்பு நடவடிக்கைகள் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும். கடாபி பிடிபடும் வரை, லிபியாவில் "நேட்டோ'வின் பாதுகாப்புப் பணி தொடரும்' என வலியுறுத்தினார்.18 மாதங்களில் தேர்தல்:லிபியாவின் தேசிய இடைக்கால கவுன்சில் தலைவர் முஸ்தபா அப்துல் ஜலீல்,"புதிய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்படும். இன்னும் 18 மாதங்களில் பொதுத் தேர்தல் நடத்தப்படும்' என உறுதியளித்தார்.
ஐரோப்பிய யூனியன் தடைகள் விலக்கம்:
கடாபிக்கு எதிரான எதிர்ப்பாளர்களின் போராட்டத்தின் போது, லிபியாவின் பல்வேறு எண்ணெய் நிறுவனங்கள் உள்ளிட்டவை மீது ஐரோப்பிய யூனியன் பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தது. பாரிஸ் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை அடுத்து, போலந்து நாட்டின் சாபாட் நகரில் நேற்று நடந்த ஐரோப்பிய யூனியன் கூட்டத்தில், பொருளாதாரத் தடைகள் விலக்கம் குறித்து முடிவெடுக்கப்பட்டது.இதையடுத்து, லிபியாவின் டிரிபோலி, அல் கோம்ஸ், பிரிகா, ராஸ் லுனுப், ஜாவியா மற்றும் ஜவுரா ஆகிய துறைமுகங்கள், பல எண்ணெய் நிறுவனங்கள், லிபிய அரபு ஏர்லைன்ஸ் நிறுவனம், தேசிய வர்த்தக வங்கி உள்ளிட்ட பல வங்கிகள் ஆகியவற்றின் மீதான பொருளாதாரத் தடைகள், அதிகாரப்பூர்வமாக நேற்று விலக்கிக் கொள்ளப்பட்டன.
இந்நிலையில், பாரிஸ் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட 15 பில்லியன் டாலர் நிதியை, லிபியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து, நேற்றும் பாரிசில் கூட்டம் தொடர்ந்து நடந்தது.
ஆப்ரிக்க யூனியன் புறக்கணிப்பு:இதற்கிடையில், பாரிஸ் கூட்டத்தைப் புறக்கணித்த ஆப்ரிக்க யூனியன், லிபிய இடைக்கால கவுன்சில் தலைமையிலான அரசை அங்கீகரிக்கப் போவதில்லை என அறிவித்துள்ளது.
தலைநகர் மாற்றம்:
சிரியாவில் அல் ராய் "டிவி'க்கு நேற்று முன்தினம் இரண்டாவது முறை பேட்டியளித்த கடாபியின் ஆடியோ வெளியிடப்பட்டது. அதில் அவர், "இறுதி வரை போராடுவோம். அதற்காக கொரில்லா போர் முறையையும் தேர்ந்தெடுப்போம். லிபியாவின் தலைநகர் டிரிபோலியில் இருந்து சிர்ட் நகருக்கு மாற்றப்படுகிறது' என்று தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக