ஞாயிறு, செப்டம்பர் 25, 2011

ஃபலஸ்தீனத்தை ஐ.நா அங்கீகரிக்க இந்தியா தெளிவான ஆதரவு

Flag-Pins-India-Palestine
ஐ.நா.பொதுச்சபை:அமெரிக்கா ஃபலஸ்தீனத்தின் ஐ.நா சபை உறுப்பினருக்கான கோரிக்கையை நிராகரித்து வரும் நிலையில் இந்தியா ஃபலஸ்தீன உறுப்பினர் கோரிக்கைக்கு தன்னுடைய முழுமையான பகிரங்க ஆதரவை தெரிவித்துள்ளது.
கடந்த வியாழனன்று ஐ.நாவிற்கு வருகை புரிந்த இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 19  ஆம் தேதி ஃபலஸ்தீன அதிகார சபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸிற்கு அனுப்பிய கடிதத்தில் ஃபலஸ்தீனத்தின் ஐ.நா சபை உறுப்பினர் கோரிக்கைக்கு தனது முழு ஆதரவையும் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
ஐ.நா வின் இந்திய பிரதிநிதியான ஹர்தீப் சிங் தெரிவிக்கையில்  அப்பாஸ் ஐநாவின் பொதுச் சபையில் கடந்த வெள்ளியன்று தனது கோரிக்கையை வைத்ததின் மூலம் ஃபலஸ்தீன அதிகாரச் சபை தனது பொறுப்பை உணர்ந்து கொண்டுள்ளது என்று அறிகுறிகள் தெரிவதாக தாம் ஐ.நா வின் பொதுச் செயலாளர் பான் கி மூனிடம் தெரிவிக்க உள்ளதாக கூறினார்.
மேலும் அப்பாஸ் ஐ.நா வின் பொது சபையையோ அல்லது ஐ.நா பாதுகாப்பு சபையையோ அணுகாத அளவுக்கு முயற்சிகள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் இஸ்ரேல் ஃபலஸ்தீன நேரடி பேச்சுவார்த்தைக்கு முயற்சிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இப்பிரச்சனை ஐ.நா வில் விவாதிக்கப் படும்பொழுது அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த வேண்டாம் என்று நினைப்பதாகவும். வேறு வழியின்றி போனால் அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை ஃபலஸ்தீனத்திற்கு எதிராக பயன்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் கடந்த 1988  ஆம் ஆண்டு முதல் ஃபலஸ்தீனத்தை ஆதரிக்கும் முதல் அரபு அல்லாத ஒரே நாடு இந்தியா என்பதை சுட்டிக்காட்டினார். மேலும் ஹர்தீப் சிங் கூறியதாவது; பிரதமர் மன்மோகன் சிங் தனது கடிதத்தில் எந்த நிலையிலும் இந்தியா ஃபலஸ்தீன தேசத்தை ஆதரிக்கும் என்று கூறியுள்ளார். வீட்டோ அதிகாரம் அமெரிக்காவால் பயன்படுத்தப்பட்டாலும் இந்தியா ஃபலஸ்தீனத்தை தொடர்ந்து ஆதரிக்குமா என்று கேட்கப்பட்டதற்கு ஃபலஸ்தீன பிரச்சனையை பொறுத்த வரை இந்தியா எந்த நிர்பந்தத்திற்கும் ஆளாகாது என்றும் நூறு சதவீதம் இந்தியா ஐ.நாவில் ஃபலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்கு அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக