ரியாத்: சவூதி அரேபியா முழுவதும் நல்ல பல சமூகச் சேவைகளைச்
செய்து வருகிறது இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம் (IFF). இதன் சேவைகளில் மிக முக்கியமானதும்,
அனைவரது வரவேற்பையும் பெற்றதுதான் ஹாஜிகளுக்கான தன்னார்வச் சேவை.
கடந்த 2005ம் ஆண்டு முதல்
தன்னலமில்லாமல் இந்தப் புனித சேவையை IFF செய்து வருகிறது. சவூதி அரசின் ஹஜ் அமைச்சகம்,
WAMY என்ற உலக முஸ்லிம் இளைஞர் அமைப்பு (World Assembly of Muslim Youth), இந்தியன் ஹஜ் மிஷன் போன்றவை IFFன் இந்தச் சேவையை
வரவேற்றுள்ளன, அதற்காக அனைத்து சிரமங்களையும் பொறுத்துக்கொண்டு கடுமையாகப் பாடுபடும்
IFFன் தன்னார்வத் தொண்டர்களையும் மனமாற ஏற்று, பாராட்டியுள்ளன.
IFFன் இன்னொரு மிக முக்கிய
பணி மினாவின் வரைபடத்தை உருவாக்கி ஹாஜிகளுக்குக் கொடுப்பது. இது ஹாஜிகளுக்குப் பெரிதும்
உதவியாக இருக்கிறது. இந்தியாவின் பல மொழிகளைப் பேசுகிற, பல்வேறு மாநிலத்தவர்கள் இதில்
தன்னார்வத் தொண்டர்களாகப் பணியாற்றுவதும், அவர்களுக்கு அளிக்கப்படுகிற அருமையான பயிற்சி
முறைகளும் இந்திய ஹாஜிகளுக்கு மட்டுமல்ல, உலக ஹாஜிகளுக்கே சேவை புரிவதற்கு பெரிதும்
உதவியாக இருக்கின்றன. பல மொழிகள் பேசுகிறவர்கள் இதில் இருப்பதால் மொழிப் பிரச்னை அங்கே
பெரிதாகத் தோன்றுவதில்லை.
“IFF ரியாத் கிளையிலிருந்து
மட்டும் 200 தன்னார்வத் தொண்டர்கள் மினாவில் ஹாஜிகளுக்கு உதவிகள் புரிவதற்காக கடந்த
14ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர் மக்காவில் ஹாஜிகளுக்கு உதவிகள்
புரிய வேறு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஹஜ்ஜின் உச்சகட்ட காலத்தில் ரியாதிலிருந்து
மட்டும் 1200 தன்னார்வத் தொண்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்‘” என்று IFFன் ரியாத்
பகுதி ஒருங்கிணைப்பாளர் சென்னையைச் சார்ந்த ஸித்தீக் கூறினார்.
முதல் ஹாஜி விமான நிலையத்தில்
இறங்கியது முதல் கடைசி ஹாஜி விமானத்தில் ஏறும் வரை IFFன் தன்னார்வத் தொண்டர்கள் விரிவான
பல சேவைகளை அற்புதமாகச் செய்கின்றனர். காணாமற் போனவர்களை அவர்களின் உறவினர்களிடம் கொண்டு
போய்ச் சேர்ப்பது, வழி தவறிப் போனவர்களை அவர்களின் முகாமுக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பது,
வயதான முதியவர்களைத் தூக்கிச் செல்வது, அவசர மருத்துவ உதவிகளைச் செய்து உயிர் காப்பத
என்று இவர்களின் சேவைகளில் பலன் பெற்றவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறுவது கேட்பவர்களுக்குக்
கண்ணீரை வரவழைத்திடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக