புதுடெல்லி, அக். 8– உடல் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கு உரிமைகளும், சலுகைகளும் வழங்கக்கோரி போராடி வருகிறார்கள்.
பெரும்பாலான மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு என்று சிறப்புத் திட்டங்கள் எதுவும் இல்லாத நிலை உள்ளது. இதனால் தகுதி இருந்தும் மாற்றுத் திறனாளிகள் உரிய வேலை பெற முடியாமல் உள்ளனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த சில மாதங்களாக இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.
மாற்றுத் திறனாளிகள் சார்பில் ஆஜரான வக்கீல் உடல் ஊனமுற்றவர்களுக்கு கணிசமான அளவுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று கூறினார்கள். மத்திய அரசும் இது தொடர்பாக பதில் அளித்துள்ளது.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. மத்திய, மாநில அரசுப் பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வேலை வாய்ப்பில் மாற்றுத் திறனாளிகள் உரிய பணி இடம் பெறுவதை உறுதி செய்யும் இந்த இட ஒதுக்கீட்டை 3 மாதங்களில் அமல்படுத்த சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.
இந்த புதிய உத்தரவு காரணமாக அடுத்த 3 மாதங்களில் அரசின் அனைத்துத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு கழகங்களில் மாற்றுத் திறனாளிகள் வேலை பெறும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக