திங்கள், அக்டோபர் 21, 2013

மீடியாக்களின் மோடி வித்தை!

இந்தியாவின் 14வது நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் அரசியல் கட்சிகளின் பதட்டம் அதிகரித்து வருகிறது. பிரதமர் பதவியைக் கைப்பற்றிக் கொள்வதற்காக இரண்டு தேசிய கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. இரண்டு தேசிய கட்சிகள் இடையே பலத்த போட்டி இருந்தாலும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு மாநிலக் கட்சிகளின் தலைவர்களும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.
 
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அத்வானியை முன்னிறுத்தி களமிறங்கிய பா.ஜ.க. படுதோல்வியடைந்தது. அத்வானியின் மூலம் தங்களுடைய கனவை நிறைவேற்றிடலம் என்ற கனவு சரிந்து, கட்சியில் உட்கட்சிப் பூசல், நிர்வாகத் திறமையின்மை, ஊழல் முறைகேடுகள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆபாசப் படம் பார்த்தல் என்று கட்சியின் மானம் சந்தி சிரித்துக் கொண்டிருக்கும் வேளையில், அதை புனர் நிர்மாணிக்கும் பணியில் இறங்கியுள்ளது பாரதிய ஜனதா கட்சி.
 
கர்நாடகாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் கட்சி படுதோல்வி அடைந்தது. இப்படியே சென்றால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மண்ணைக் கவ்வி விடுவோம் என்று சுதாரித்துக் கொண்ட பா.ஜ.க. மக்களிடம் எப்படி செல்வாக்கைப் பெறுவது என்று யோசித்தது. இறுதியில் அது கையில் எடுத்த அஸ்திரம்தான் குஜராத்தின் வளர்ச்சி, அதற்கு காரணம் மோடி!
 
குஜராத்தில் மோடி தலைமையில் திறமையான ஆட்சி நடக்கின்றது, அங்கு தினமும் பாலாறும், தேனாறும் ஓடிக் கொண்டிருக்கின்றது என்று வாய் கூசாமல் பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் பா.ஜ.க. கட்சியினர். இதற்கு சொல்லி வைத்தாற்போல் செயல்படுகின்றன இந்தியாவில் உள்ள பத்திரிகைகளும், ஊடகங்களும்.
 
மோடி வித்தையை காட்டி மக்களிடம் பா.ஜ.க. பிரச்சாரம் செய்வது எப்படி இருக்கின்றது என்று பார்த்தால், முன்னொரு காலம் இருந்தது. தெருவில் தங்களுடைய வயிற்று வித்தை காட்டி காசு வசூலிப்பார்கள். குரங்கிற்கு அவர்கள் சில வித்தைகளை முன்னாலேயே கற்றுக் கொடுத்திருப்பார்கள். அதே போன்று, தற்பொழுது பா.ஜ.க. மோடிக்கு சில வித்தைகளைக் கற்றுக் கொடுத்து அதை வைத்து ஓட்டு வசூல் செய்கிறார்கள்.
 
குஜராத்தை வளர்ச்சி மாநிலமாக மோடி மாற்றி விட்டார். அங்கு ஊழல் இல்லை; லஞ்சம் இல்லை; வறுமை இல்லை; பசி இல்லை; பட்டினி இல்லை; மது இல்லை; மாது இல்லை என்று அடுக்கிக் கொண்டே போகிறது அவர்களின் குரங்கு வித்தை.
 
குஜராத் மாதிரி இந்தியா முழுவதும் மாற வேண்டுமானால் மோடியை பிரதமராக தேர்ந்தெடுக்க வேண்டும். இதுதான் அவர்களின் முழக்கம். இதற்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒத்து ஊதுகின்றன.
 
குஜராத்தின் உண்மை நிலை
 
குஜராத்தில் பெரும்பாலான உள்துறை அமைச்சக அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டுள்ளனர். குஜராத்தில் ஊழல் எதிர்ப்பு பிரிவு காவல்துறை பதிவு செய்த வழக்குகளில், பெரும்பாலான உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது ஊழல் புகார்கள் அதிகம் என்று குற்றம்சாட்டி உள்ளது. இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மற்ற மாநிலங்களை விட அதிகம்.
 
ஊழல் எதிர்ப்பு பிரிவின் டி.ஜி. அமிதாப் பதக் கூறுகையில், உள்துறை அமைச்சக அதிகாõரிகள் மற்றும் ஊழியர்கள் மீது இதுவரை 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள. இது, மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது அதிகம் என்று கூறுகிறார்.
 
மேலும் கூறுகையில், பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் அதிகாரிகள், அமைச்சக ஊழியர்கள், விளையாட்டுத்துறை, இளைஞர் மற்றும் பண்பாட்டு அமைச்சகம், சட்டம் மற்றும் அறிவியல், தகவல் தொழில்நுட்பம் என்று கடந்த ஐந்து ஆண்டுகளில் குஜராத்தில் ஊழல் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
குஜராத்தில் இப்பொழுது ஊழல் எதிர்ப்பு பிரிவு பொது மக்கள் எந்த அதிகாரி மீதோ, தனியார் நிறுவனம் அல்லது ஊழியர்கள் மீதோ ஊழல் புகார் கூற ஹெல்ப் லைன் வசதியை தொடங்கி உள்ளது. ஆனால், இந்த விஷயங்களை மீடியாக்கள் விளம்பரப்படுத்தவில்லை.
 
இப்படி, ஊழலின் நிலை அங்கு மற்ற மாநிலங்களை விட மோசமான நிலையில் உள்ளது என்பதை ஆய்வுகள் பட்டவர்த்தனமாக தெரிவிக்கின்றன.
 
முஸ்லிம் கிராமங்கள் அதிகமாக வறுமையில் இருப்பதில் குஜராத்தும் அடங்கும். குஜராத்தின் நிலை என்பது முஸ்லிம்களின் இழிநிலையை எடுத்துரைக்கின்றது.
 
ஐ.நா. சபையின் வறுமை ஒழிப்பு அமைப்பின் கூற்று
 
குஜராத்தில் கர்ப்பிணிகள் இறப்பு, குழந்தைகள் இறப்பு, ஐந்து வயதுக்குட்பட்டவர்கள் ஆகியோர் சுகாதாரமின்மையால் இறக்கின்றனர் என்று ஐக்கிய நாடுகள் வறுமை ஒழிப்பு நாடுகளின் இயக்குநர் கெய்ட்ஸன் வைஸன் கூறினார்.
 
கிட்டத்தட்ட 50 சதவீதம் பேர் விவசாய தொழிலாளர்களாகவும், 40 சதவீதம் பேர் மற்ற தொழிலாளர்களாகவும் மிகவும் வறுமையில் காணப்படுகின்றனர். வீடுகள் அடிப்படை அளவாகவும், குறைந்த கல்வியறிவு கொண்டு கடுமையான வறுமையில் இருக்கின்றன என்று வைஸன் கூறுகிறார்.
 
குஜராத்தில் 2002ல் ஏற்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் கிட்டத்தட்ட 5,000த்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். 20,000த்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அகதிகளாக்கப்பட்டார்கள். இதில், காங்கிரஸின் முன்னாள் எம்.பி. இஹ்ஸான் ஜாப்ரி வீட்டோடு தீவைத்து எரித்துக் கொல்லப்பட்டார். இவர் அரசுக்கு தகவல் கொடுத்தும் எந்தவித உதவியும் செய்யப்படவில்லை. இதற்கெதிராக உறுதியுடன் போராடி வரும் ஜக்கியா ஜஃப்ரியை சங்பரிவார்கள் மிரட்டுகிறார்கள்.
 
அதே போன்று, இஷ்ரத் ஜஹான் உட்பட நான்கு பேர் போலி என்கௌண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் நரேந்திர மோடியை கொல்ல வந்ததாக கூறினர் குஜராத் காவல்துறையினர். இது போலி என்கௌண்டர் என சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
 
இதில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள டி.ஜி.பி. வன்சாரா தனது இராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இஷ்ரத் ஜஹான் விஷயத்தில் நாங்கள் அரசு சொன்னதை தான் செய்தோம். நாங்கள் சிறையில் இருக்க வேண்டியவர்கள் என்றால், அவர்களும் சிறையில் இருக்க வேண்டியவர்கள் என்று அந்த ராஜினாமா கடிதத்தில் கூறி இருந்தார். ஆனால், இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
 
குஜராத்தில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு
 
குஜராத் மாநிலத்தில் மூன்றில் ஒரு குழந்தை ஊட்டச்சத்துக் குறைவு காரணமாக எடை குறைவாக பிறக்கிறது. ஊட்டச்சத்து உணவு அளிக்கும் திட்டம் முறையாக அமல்படுத்தப்படவில்லை என்று ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தை ஆய்வு செய்த தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலகம் (சி.ஏ.ஜி.) தெரிவித்துள்ளது.
 
இது தொடர்பாக அந்த மாநில சட்டமன்றத்தில் சி.ஏ.ஜி. சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
 
குஜராத் மாநிலத்தில் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் ஊட்டச்சத்துத் திட்டத்தின் கீழ் பயனடைய 2 கோடியே 23 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர். ஆனால், 63 லட்சம் பேரை இந்தத் திட்டம் போய்ச் சேரவில்லை.
 
இத்திட்டத்தின்படி ஆண்டொன்றுக்கு 300 நாட்கள் ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட வேண்டும். ஆனால், 96 நாள்களே அவை வழங்கப்பட்டுள்ளன. மூன்றில் ஒரு குழந்தை எடை குறைவாக இருக்கிறது.
 
அதே போன்று, வளர் இளம் பெண்களில், 48 சதவீதத்துக்குப் பதிலாக 27 சதவீதம் பேர் மட்டுமே இத்திட்டத்தால் பயனடைந்துள்ளனர். மொத்தம் 75 ஆயிரத்து 480 அங்கன்வாடி மையங்கள் இருக்க வேண்டிய நிலையில், இப்போது 52 ஆயிரத்து 137 மையங்களே உள்ளன. அதிலும், 50 ஆயிரத்து 225 மையங்களே செயல்பாட்டில் உள்ளன. இதன் காரணமாக ஒரு கோடியே 87 லட்சம் பேர் திட்டத்தில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 
அங்கன்வாடி கட்டிடம், பாதுகாப்பான குடிநீர், கழிவறை வசதிகள் போதுமானதாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தை 1975ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. 2008 – 2009 நிதியாண்டு வரை இத்திட்டடத்துக்கான நிதியை மத்திய அரசு முழுமையாக ஒதுக்கீடு செய்தது. இப்போது, மாநில அரசு சார்பில் 10 சதவீதம் நிதியுதவி, மத்திய அரசு சார்பில் 90 சதவீத பங்களிப்புடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
 
குழந்தைகள், கர்ப்பிணிகள், வளர் இளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. (தி இந்து தமிழ், அக்டோபர் 6, 2013)
இப்படி குஜராத்தின் “வளர்ச்சியை” (??!!) பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம்.
 
ஆனால், இதெல்லாம் மீடியாக்களினால் மறைக்கப்பட்டு, வளர்ச்சி என்ற போர்வை மட்டும் மோடியின் மீது போர்த்தப்படுகிறது. இரண்டு மாதமாக குஜராத்தில் நடந்த கலவரத்தை தடுக்க முடியாத கையாலாகாத தனத்தை இந்தியா முழுவதும் நடத்தி காட்டுவதற்கு நாம் இவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமாம்.
 
இது விஷயத்தில் மீடியாக்கள் செலுத்தும் அக்கறை மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. திருச்சியில் நடைபெற்ற இளந்தாமரை மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் நான்கு லட்சம், ஐந்து லட்சம் என்று தங்களுடைய இஷ்டத்திற்கு எழுதினர். தற்பொழுதுள்ள நிலையில் ஆட்சியாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை மீடியாக்கள்தான் தீர்மானிக்கின்றன.
 
அதே ஆட்சியாளர்களை அதிகாரத்தில் இருந்து இறக்க வேண்டும் என்றாலும் மீடியாக்கள்தான் தீர்மானிக்கின்றன. தற்பொழுது, மோடியை பிரபலப்படுத்துவதில் இருந்து நமக்கு ஒன்று தெளிவாக தெரிகிறது. மோடியை பிரதமராக்க வேண்டும் என்று இந்தியாவில் செயல்பட்டு வரும் பத்திரிகைகளும், ஊடகங்களும் தீர்மானித்து விட்டன.
 
அதற்கான வேலைகளில் தீவிரவமாக செயல்பட்டு வருகின்றன. மீடியாக்களின் மோடி வித்தை எடுபடுமா?
 
நெல்லை சலீம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக