செவ்வாய், அக்டோபர் 29, 2013

கல்லடி எதிரொலி: உம்மன் சாண்டிக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு....

திருவனந்தபுரம், அக். 29- சோலார் பேனல் மோசடி விவகாரத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசின் மந்திரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கேரள எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. 


இதனால் உம்மன் சாண்டி பதவி விலக வேண்டும் என்று இடது சாரி ஜனநாயக முன்னனி அங்கு போராட்டம் நடத்தி வருகிறது. கேரள முதல் மந்திரி உம்மன் சாண்டி போலீஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக கண்ணூர் சென்றார்.

அங்கு அவர் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடது சாரி ஜனநாயக முன்னணி அமைப்பினர் கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தினர். அப்போது சிலர் அவர் மீது திடீரென கல் வீசி தாக்கினர். அவர் காரில் வரும்போது இரண்டு பக்கமும் போராட்டக்காரர்கள் அவரை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். 

இதில் காரின் பின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. அப்போது கார் கண்ணாடித்தூள் பட்டு உம்மன் சாண்டியின் நெற்றியில் காயம் ஏற்பட்டது. மேலும் ஒரு கல் அடியும் விழுந்தது. 

இந்த தாக்குதல் தொடர்பாக மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தலைவர்கள் கட்சி தொண்டர்கள் என சுமார் ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் 21 பேரை கைது செய்தனர். 

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட உம்மன் சாண்டியை கேரள கவர்னர் நிகில் குமார், எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நேற்று சந்தித்து நலம் விசாரித்தனர். 

இந்நிலையில், முதல் மந்திரி உம்மன் சாண்டியின் உயிருக்கு ஆபத்து காத்திருப்பதால் அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மாநில உள்துறை மந்திரி தலைமையில் நடைபெற்ற மூத்த போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

குண்டு துளைக்காத காரும, கூடுதலாக கமாண்டோ வீரர்களும் அவரது பாதுகாப்புகாக வழங்கப்படுவதாக உள்துறை மந்திரி திருவாஞ்சூர் ராதா கிருஷ்ணன் கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக