செவ்வாய், அக்டோபர் 29, 2013

மகாராஷ்டிரா: பாஜக-வினரின் சாதி வெறி கலவரம்..

dalitkilling_pkg
காராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள வேய்ராகட் கிராமத்தில் கடந்த அக்டோபர் 12 அன்று அம்பேத்கர் சிலைக்கு முன் கூடி நின்று வழிபாடு செய்து கொண்டிருந்த தாழ்த்தப்பட்டவர்கள் மீது ஆதிக்க சாதியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்கு கூடியிருந்த தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த பெண்களை மிகவும் தரக்குறைவாக திட்டியுள்ளனர். 1956-ல் நாக்பூரில் அம்பேத்கர் புத்த மதத்திற்கு மாறிய தினத்தை (அக்டோபர் 14) தாழ்த்தப்பட்ட மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாக்பூருக்கு வந்து ஆண்டு தோறும் கொண்டாடி வருகின்றனர். அதற்கு கிளம்பிக் கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பாஜக வை சேர்ந்தவரும், ஆதிக்க சாதியினருமான கிராம பஞ்சாயத்து தலைவர் அமோல் சாத்தே ஒரு சாதிவெறிக் கூட்டத்துடன் வந்து தாக்குதலை நடத்தினார்.

வேய்ராகட் கிராம மக்கள்.
வேய்ராகட் கிராம தலித் மக்கள்.
அடுத்த பத்து நிமிடத்தில் அங்கு வந்த போலீசார் ஆதிக்க சாதியினரிடம் ஏற்கெனவே அடி வாங்கிக் கொண்டிருந்த தாழ்த்தப்பட்டவர்கள் மீது தடியடி நடத்தினர். தாழ்த்தப்பட்டவர்களில் 15 பேரையும், ஆதிக்க சாதியினரில் 10 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தாழ்த்தப்பட்டவர்கள் அருகில் உள்ள இந்துக் கோவில் ஒன்றில் உள்ள நகைகளை கொள்ளையிட முயன்றதாக பொய் வழக்கினை பதிவு செய்துள்ளனர். அமல் சாத்தே உள்ளிட்ட ஆதிக்க சாதியினர் மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதலில் கடந்த ஜனவரி 26 குடியரசு தினக் கொண்டாட்டம் நடந்த போது பிற தேசிய தலைவர்களுடன் அம்பேத்கரின் படத்தையும் தாழ்த்தப்பட்ட மக்கள் சேர்த்து வைத்திருந்ததை பொறுக்க இயலாத ஆதிக்க சாதி இந்துக்கள் அதனை தூக்கி எறிந்தனர். பிறகு மே மாதம் மகா சிவராத்திரி வந்தபோது புத்த மத பஞ்சசீல கொடியை இறக்கிய ஆதிக்க சாதியினர் அதே கம்பத்தில் காவிக் கொடியை ஏற்றினர். நிலமற்ற கூலி விவசாயிகளாக உள்ள தாழ்த்தப்பட்டவர்களை அதன் பிறகு தங்களது நிலங்களில் வேலை செய்யவும் ஆதிக்க சாதியினர் அனுமதிக்கவில்லை.
ஆட்டோ ரிக்சாக்களில் தாழ்த்தப்பட்ட சாதி குழந்தைகளை ஏற்றக் கூடாது என சமூக விலக்க உத்திரவை ஆதிக்க சாதியினர் பிறப்பித்துள்ளனர். எனவே 3 கிமீ தூரத்தில் உள்ள உந்திரி கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கு இக்கிராம தலித் குழந்தைகள் நடந்து போக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பள்ளிக்குப் போகும் வழியில் அம்பேத்கர் பற்றி ஆதிக்க சாதியினர் மிகவும் அவதூறாக எழுதியிருப்பதாக சொல்கிறார் எட்டாம் வகுப்பு மாணவியான ஷிவானி.
உதவி ஆட்சியர் வருகை
கிராமத்துக்கு வந்த உதவி ஆட்சியரிடம் முறையிடும் தலித் மக்கள்.
அக்டோபர் 12 சம்பவத்திற்கு பிறகு ஆதிக்க சாதியினர் வைத்துள்ள கடைகளில் இருந்து எந்தப் பொருட்களையும் தலித் மக்கள் வாங்குவதற்கு எதிராக சமூகத் தடையை விதித்துள்ளனர். குழந்தைகளுக்கு தேவையான பாலை விற்பனை செய்யக் கூட ஆதிக்க சாதி கடைக்காரர்கள் தயங்குகின்றனர். அப்படி விற்றால் தங்கள் மீதும் ஏதும் சமூகப் புறக்கணிப்பு தண்டனை விதிக்கப்படலாம் என அவர்கள் அஞ்சுகின்றனர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வெறும் அரிசிக் கஞ்சி மட்டும்தான் தற்போது சாத்தியமாகி உள்ளது. பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கவும் தற்போது சமூகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சமூக விலக்கு தண்டனையை தாழ்த்தப்பட்ட மக்கள் தினமும் அனுபவித்து வருகையில், “சமூக விலக்கு அப்பகுதியில் இல்லை” என காவல்துறை ஆய்வாளர் சந்தோஷ் டேல் கூறியுள்ளார். “சில அரசியல் சக்திகள் இதனை பிரச்சினையாக்க முயற்சித்தனர். இருபுறமும் கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து மேலும் ஏதும் பிரச்சினைகள் வருவதைத் தவிர்த்தோம்” என்றும் அவர் கூறியுள்ளார். இதனை சிறு சம்பவம் என்றும், தற்போது கிராமத்தில் அமைதி நிலவுவதாகவும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாம்ராவ் திவாகர் கூறியுள்ளார்.

“இது ஒரு அமைதியான கிராமம். நடந்தது ஒரு சிறு அசம்பாவிதம். அதனை ஒரு சில அரசியல் சக்திகள் பயன்படுத்திக் கொண்டு அமைதியை சீர்குலைக்க விரும்பின” என்கிறார் அமோல் சாத்தே-ன் சகோதரரான மங்கேஷ் சாத்தே. தற்போது அமோல் சாத்தே பிணையில் வந்து விட்டாலும், நீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாட்டால் அவரால் கிராமத்திற்குள் நுழைய முடியவில்லை.
எனினும் தாழ்த்தப்பட்ட மக்கள் இப்பகுதியில் தொடர்ந்து வாழ அஞ்சுகிறார்கள்.  அக்டோபர் 12-க்கு பிறகு தாழ்த்தப்பட்ட குடியிருப்பிலிருந்து செல்லும் அனைத்து பாதைகளுக்கு தடை போடுவோம் என்றும் ஆதிக்க சாதியினர் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். தாழ்த்தப்பட்ட சாதியின் பெண்கள் பெரும்பாலும் வெளியே வர அஞ்சுகின்ற சூழலை ஆதிக்க சாதியினர் உருவாக்கியுள்ளனர். “எங்களுக்கு வேறு எங்காவது நிலம் ஒதுக்கி குடியேறச் செய்யுங்கள். இல்லாவிடில் என்றாவது ஒருநாள் சாதி இந்துக்கள் எங்களை கொன்று விடுவார்கள்” என்கிறார் அக்டோபர் 12 அன்று தாக்குதலுக்குள்ளான பெண்களில் ஒருவரான சிந்து தயாதே.
மகாராஷ்டிர மாநிலத்தில் ஆதிக்க மராத்தா சாதியினரும் இந்துமத வெறியர்களும் அங்குள்ள இனவாத சக்திகளுடன் வலுவான கூட்டணியை அமைத்துள்ளனர். தொண்ணுறுகளில் மரத்வாடா பல்கலைக் கழகத்திற்கு அம்பேத்கரின் பெயரை சூட்ட அரசு முடிவெடுத்த போது சிவசேனா தொண்டர்கள் கொலை வெறியாட்டம் நிகழ்த்தினர். 1974-ல் புகழ்பெற்ற தலித் சிறுத்தைகள் அமைப்பின தலைவர் பாகவத் ஜாதவை கொன்ற தாக்கரே கும்பல் இதன்மூலம் காங்கிரசுக்கு ஆதரவான தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளை மிரட்டல் மூலம் கவர நினைத்தது. 1984-ல் விதர்பா பகுதியில் தாழ்த்தப்பட்ட விவசாயிகளின் குடியிருப்பை தீ வைத்து எரித்தது சிவசேனா கும்பல்.
இனவாதம் பேசி பிற மாநில பானி பூரி விற்பவர்களை கூட இன்று விரட்டியடிக்கும் சிவசேனா கும்பல் 1982-ல் பம்பாய் ஜவுளித் துறையில் நெருக்கடி ஏற்பட்டு தொழிலாளிகளில் 2.75 லட்சம் பேருக்கு வேலை போன போது வாழ்வுரிமைக்காக போராடிய தொழிற்சங்கத்தினர் மீது தாக்குதல் நடத்தி அவர்களது போராட்டத்தை சீர்குலைத்தது. அப்போது பாதிக்கப்பட்ட தொழிலாளர்களில் 90% பேர் மராத்தியர்கள்தான்.
drnacsw
கடந்த ஜனவரி மாதம் ஆதிக்க சாதிப் பெண் ஒருவரை காதலித்த குற்றத்துக்காக மூன்று துப்புரவுத் தொழிலாளிகளான இளைஞர்களை கொலை செய்தது அகமது நகரில் பேர் போன மராத்தா சாதியின் தரண்டாலே குடும்பம். அம்மாதம் 6-ம் தேதி தூலே நகரில் உணவு விடுதியில் நடந்த சிறு தகராறை இந்து-முசுலீம் மோதலாக மாற்றிய போலீசார் கடையில் துப்பாக்கி சூடு நடத்தி 6 இசுலாமிய இளைஞர்களைக் கொன்றனர்.

அம்மாதமே தூலே நகரில் உள்ள அம்பேத்கர் சமூக சேவைக் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் பிரமோத் சுகதேவ் பூம்பே மீது விசுவ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர் கல்லூரியின் உள்ளே புகுந்து தாக்கினர். சமூக சீர்திருத்த இயக்கங்கள் பற்றிய வகுப்பில் ராமாயணத்தின் சில பகுதிகளில் உள்ள சாதிய ஒடுக்குமுறை பகுதிகளை விளக்கியது தான் பூம்பே செய்த குற்றம். கடந்த ஆகஸ்டு மாதம் புனே நகரில் திரைப்படக் கல்லூரிக்குள் புகுந்து கபீர் கலா மஞ்ச் அமைப்பினர் நடத்திய நிகழ்ச்சியில் ரகளை செய்து அவர்களையும் தாக்கினர் ஏ.பி.வி.பி அமைப்பினர்.
கடந்த ஆகஸ்டில் குஜராத்தின் அகமதாபாத் நகரில் நடந்த ஓவியக் கண்காட்சியில் பாகிஸ்தான் ஓவியர்களது படைப்புகள் இருந்த காரணத்துக்காக தாக்குதல் நடத்தின பரிவாரங்கள். முன்னர் ஓவியர் எம்.எஃப்.உசேனின் ஓவியங்கள் பாரத மாதாவை கண்ணியக் குறைவாக சித்தரிப்பதாக கூறி அவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தன சங் பரிவாரங்கள்.
2006-ல் கயர்லாஞ்சியில் சிவாஜியையும், சிந்தியாவையும் பெற்றெடுத்த குன்பி மராத்தா சாதியினர் தாழ்த்தப்பட்ட மகர் சாதியை சேர்ந்த போட்மாங்கே குடும்பத்தினரை மிகவும் கேவலமான முறையில் அவமதித்து கொன்றனர். காரணம் தாழ்த்தப்பட்ட அச்சாதியினர் தங்களது பிள்ளைகளை படிக்க  அனுப்பியதும், அக்குடும்பத்திற்கு சொந்தமாக கொஞ்சம் விவசாய நிலம் இருந்ததும் தான்.
தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களது சுயமரியாதையை நிலைநாட்டிய நிகழ்வாக கருதி தான் நாக்பூரில் அம்பேத்கர் தீட்சை பெற்ற பூமிக்கு வந்து ஆண்டுதோறும் கூடுகின்றனர். மற்றபடி இது ஒரு தேவர் பூசை போன்ற விசயமல்ல. மாற்றுக் கருத்துக்களையும், பிற மதத்தினரையும் மட்டுமின்றி சொந்த மதத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களையும் இந்துமத வெறியர்கள் எதிரிகளாகத்தான் பார்க்கிறார்கள். மராட்டிய மாநிலத்தில் ஓரளவு பெரும் எண்ணிக்கையில் தாழ்த்தப்பட்டவர்கள் இருப்பதும், அவர்களில் பலர் பௌத்த மதத்தையும், அம்பேத்கரையும் பின்பற்றுவதும் இந்துமத வெறியர்களுக்கு கண்களை உறுத்திக் கொண்டிருக்கின்றது.  அதன் ஒரு பகுதி தான் தாழ்த்தப்பட்ட பௌத்தர்கள் மீது மராத்தா ஆதிக்க சாதியினர் ஏற்காட் கிராமத்தில் தொடர்ந்து நடத்தி வரும் சாதிவெறித் தாக்குதல்கள்.
- வசந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக